articles

img

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் : இயக்கப் பள்ளியில் இலக்கியமும் பயின்ற தொழிலாளி...

ஆலைத் தொழிலாளியாக வேலையில் சேர்ந்து, தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உறுப்பினராகித் தனது கட்சி வாழ்க்கையில் களம் பல கண்ட தோழர்எம். செல்லாராம். வடசென்னையின் மூத்ததோழமை முகங்களில் ஒன்றான செல்லாராம் 1940ல் காசிமேடு பகுதியில் ஒரு  ஏழைமீனவர் குடும்பத்தில் பிறந்தவர். மீனவர்குடும்பங்களில் ஆண், பெண் அனைவருமேமீன்பிடித்தலில் தொடங்கி, பிடித்த மீனை விற்பனை செய்தல் வரையில் என தொழிலின்அனைத்துப் பக்கங்களிலும் முழுமையாக ஈடுபட்டிருப்பார்கள்.

 குடும்பச் சூழலாலும், பெற்றோர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய சரியான புரிதல் இல்லாததாலும், ஏழாம் வகுப்பு வரையில் படித்த மகனை அவர்கள் அதற்கு மேல்பள்ளிக்கு அனுப்பவில்லை. சிறுவனாக இருந்தபோதே வருவாய்க்காக சின்னச்சின்ன வேலைகளைச் செய்யலானார் செல்லாராம்.பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத ஏக்கத்தில் இருந்த செல்லாராம் தனது 21வது  வயதில் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் அங்கும் ஓராண்டிற்கும் மேல் அவர் தொடர முடியவில்லை. முறைசார்கல்வி பெற முடியவில்லையே என்ற வருத்தம்இருந்த பின்னணியில் சுயமான முயற்சியில்ஆங்கிலமும், கணிதமும் கற்கத் தொடங்கினார். இரவு-பகல் பாராமல், புத்தகங்கள் மீது ஒரு வெறியே ஏற்பட்டது போல, இவருக்குஎன்ன ஆனது என்று மற்றவர்கள் பேசிக்கொள்ளும் அளவுக்குப் படித்துக்கொண்டே இருப்பார். அகராதி வைத்துக் கொண்டு ஆங்கில நூல்களைப் படித்துப் புரிந்துகொண்டார். ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் ஆங்கில இலக்கியங்களை படிக்காமல் முடியாது என்றுகருதியவராக ஷேக்ஸ்பியரின் அத்துனை படைப்புகளையும் ஈடுபாட்டோடு வாசித்தார்.அவற்றின் உள்ளடக்கத்தைப் பற்றியும் தனதுகருத்தையும் பிறருக்கு ஆங்கிலத்திலேயே சொல்லும் திறனையும் வளர்த்துக்கொண்டார்.

1960களில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அரசியல் இயக்கம் வலுவாக நடந்தது. வீதியோரப் படிப்பகங்கள் உருவாகி மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, வாசிப்பு வளர்ந்தது. இப்பின்னணியில் செல்லாராம் பல கோணங்களில் நூல்களையும், இதழ்களையும் வாசித்து சமுதாய அக்கறை கொண்டவராகப் பரிணமித்தார். திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவராக, 1967ல் காசிமேடு பகுதியில் உருவான அன்னை கலை இலக்கிய மன்றத்தில் இணைந்து செயல்பட்டார். அந்த மன்றத்தின்சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் அவ்வை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், குமரி அனந்தன் போன்றோர் உரையாற்றியிருக்கிறார்கள். செல்லாராமும் மன்றக் கருத்தரங்குகளில் உரையாற்றியிருக்கிறார். அம்மன்றத்தின் அங்கத்தினர்களாக இருந்த பல தோழர்கள் பிற்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

சுயமுயற்சியில் கணிதம் பயின்றவர், அந்த நாட்களில் பள்ளியிறுதி வகுப்பு (எஸ்எஸ்எல்சி) படித்த மாணவர்களுக்கு ஆங்கிலமும்,கணிதமும் பயிற்றுவித்தார். எளிய குடும்பங்களைச் சேர்ந்த அந்த மாணவர்களிடமிருந்து கட்டணம் ஏதும் பெறாமல் ஒரு சேவையாகவே அந்தப் பயிற்றுவிப்புப் பணியை மேற்கொண்டார். இவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் நல்ல மதிப்பெண்களோடு எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்றார்கள்.இவர் ஆங்கிலமும், கணிதமும் பயிற்றுவிக்கிறார் என்று கேள்வியுற்ற ராதாகிருஷ்ணன் என்பவர், கல்லூரி மாணவரான தன் மகனுக்கு ஆங்கிலமும், கணிதமும் கற்பிக்கக் கேட்டுக்கொண்டார்.  செல்லாராம் அளித்த பயிற்சியினால் அந்த மாணவர்  நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாகி ஒரு பட்டதாரியாக அரசுத்துறையில் வேலையில் சேர்ந்தார். தன்னுடைய மகன் வாழ்க்கையில் முன்னேற  உதவிய செல்லாராமுக்கு ஒருநன்றிக்கடனாக ராதாகிருஷ்ணன் ஐ.டி.சி.நிறுவனத்தில் 1968ம் ஆண்டு வேலையில்சேர்த்துவிட்டார். அந்த உதவிக்கான நன்றிக்கடனாக இப்போதும் ராதாகிருஷ்ணன் படத்தைத் தன் வீட்டில் வைத்திருக்கிறார் செல்லாராம்.

வேலையில் சேர்ந்த பிறகு செல்லாராமின் சேவைகள் வேறொரு தளத்திற்கு உயர்ந்தன. தொழிற்சங்க உறுப்பினராகி சக தொழிலாளர்களுக்காகப் போராட்டக் களம் இறங்குகிறவரானார். அக்காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட  கோரிக்கைகளுக்காக நிறுவனத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். அந்நாட்களில் ஐ.டி.சி. வளாகத்திலும், சென்னை  மற்றும் புறநகர்ப் பகுதிகளில்பல்வேறு நிறுவனங்களிலும் தொழிலாளர்கள் நடத்திய வீரமிக்க போராட்டங்கள் தொழிற்சங்க இயக்க வரலாற்றில் இடம்பெற்றவை.

1972ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் பகுதிச் செயலாளர் தோழர் என். கிருஷ்ணன் அரசியல் வகுப்பு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்.கட்சியின் அன்றைய  சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் மார்க்சிய தத்துவம் பற்றி வகுப்பெடுத்தார். அதுநாள் வரையில் தனக்கிருந்த மனிதகுலவரலாறு பற்றிய கருத்தியலுக்கு மாறாக, அறிவியல்பூர்வமாக ஒரு புதிய வெளிச்சத்தை தன்னால் அந்த வகுப்பிலிருந்து பெற முடிந்தது என்கிறார் செல்லாராம். அந்த வகுப்பிற்குப் பிறகு அதே ஆண்டில் செல்லாராம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்.

ஐ.டி.சி. ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களோடு பேசி, விளக்கங்கள் அளித்து அவர்களில் பலரைக் கட்சியில் சேர்க்கிற முயற்சிகளை  மேற்கொண்டதோடு, தாம்வசித்துவந்த பகுதியிலும் தொழிலாளர்கள்,இளைஞர்களோடு விவாதித்து அவர்களையும் கட்சிக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டார். ராயபுரம் பகுதியில் கட்சியின் புதிய கிளைகளை தொடங்கினார். இவ்வாறு அன்று ஏராளமான இளைஞர்களைக் கட்சிஉறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் உருவாக்கிய பெருமை செல்லாராமுக்கு உண்டு.

தற்போது ராயபுரம் பகுதிச் செயலாளரான தோழர் செல்வநாதன் உள்ளிட்டு பலஇளைஞர்களை கட்சியில் சேர்த்த பெருமைசெல்லாராமைச் சாரும். தாம் வசிக்கும் பகுதியில் சுறுசுறுப்பாக இயக்கப் பணியாற்றிய செல்லாராம் 1974ஆம் ஆண்டு ராயபுரம் ஆர்.கே. நகர் பகுதியை உள்ளடக்கிய இடைக்குழுவின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பொறுப்பில் 9 ஆண்டுகள் இருந்திருக்கிறார்.1974ஆம் ஆண்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இரண்டே ஆண்டுகளில் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். “தோழர்கள் பி.ஆர். பரமேஸ்வரன், வி.பி. சிந்தன் இருவரும் என் கட்சி வாழ்க்கைக்கு வழிகாட்டிய குருநாதர்கள்,” என நெகிழ்வோடு கூறுகிறார்.

பி.ஆர். பரமேஸ்வரனுக்குப் பிறகு, தோழர்வே. மீனாட்சிசுந்தரம் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது செல்லாராம் மாவட்டக்குழு உறுப்பினராக இருந்தார். 1994ஆம் ஆண்டு வரைமாவட்டக்குழு உறுப்பினராகச் செயல்பட்டிருக்கிறார்.தோழர் செல்லாராம் கட்சியின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினராக இருந்தபோது, இலக்கிய ஈடுபாட்டின் பின்னணியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தழைப்பதற்கும், வர்க்கப் புரிதல்களோடு மற்ற பல வெகுமக்கள் அமைப்புகள் வளர்வதற்கும் உதவியாக இருந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் செல்லாராம் சிஐடியு தலைவர்களில் ஒருவரான நம்பிராஜன் உதவியோடு மீனவர்களுக்காக ஒரு சங்கத்தை உருவாக்கினார். இப்போது அந்தச் சங்கம் மாநில அளவிலான அமைப்பாக வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.டி.சி. தொழிலாளர் சங்கத் தலைவராக 1980ல் வி.பி. சிந்தன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு உ.ரா. வரதராசன், டி.என்.நம்பிராஜன் ஆகியோர் அந்தப் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுப் பணியாற்றியிருக்கிறார்கள். 1998ல் செல்லாராம் ஆலைப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

 நிறுவனத்தில் ஒரு தொழிலாளியாக இருந்த 30 ஆண்டுகளில் அந்தச் சங்கத்தில் நிர்வாகப் பொறுப்பிற்கு செல்லாராம் வரவில்லை. ஆனால், ஆலையில் நடந்த எல்லாப் போராட்டங்களிலும் அவர் முன்னணிப் பங்காற்றியிருக்கிறார். வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதற்காக நிர்வாகம் செல்லாராமை 28 நாட்கள் இடை நீக்கம் செய்தது. மற்றொரு போராட்டத்திற்காகக் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் சிறையிலும் இருந்திருக்கிறார். 1998 டிசம்பர் 31ல் பணிஓய்வு பெற்றார். ஆனால் அதற்கு முன்பாக நிர்வாகம் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய்க் குற்றச்சாட்டு ஒன்றைக் கூறி மெமோகொடுத்ததுடன் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவித்தது. சங்கத் தலைவராக இருந்த நம்பிராஜன் நிர்வாகத் தலைமையைச் சந்தித்துப் பேசி, செல்லாராம் நேர்மையான தொழிலாளி, உண்மையான உழைப்பாளி, சக தொழிலாளர் நலன்களுக்காகவே போராட்டங்களில் பங்கேற்றார் என்பதை நன்கு அறிந்தும் இவருக்கு மெமோ கொடுத்தது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையே என்று வாதிட்டார். பின்னர்நிர்வாகம் தனது நடவடிக்கையை விலக்கிக்கொண்டது.

1971ஆம் ஆண்டு செல்லாராம் – லலிதா திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகள்கள்.  மருமகன் லோகநாதன் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழுஉறுப்பினர். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இன்னொரு மருமகன் சுப்பிரமணியம் இந்திய மாணவர் சங்கத்திலும், இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்திலும் நிர்வாகியாகஇருந்து செயல்பட்டவர். கட்சி உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். தோழர் செல்லாராமின் குடும்பம் கட்சிக் குடும்பம்.

பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போனது வாசிப்புச் செயலுக்குத் தடையாகிவிடவில்லை என்று மெய்ப்பித்துக் காட்டியிருக்கும் தோழர் செல்லாராமைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, இலக்கியம் பற்றிய பேச்சு வந்தது. “கார்ல் மார்க்ஸ் தமது இணையர் ஜென்னிக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘நான் ஒத்தெல்லோ போன்றவனல்ல. நான் உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன். உன் மீது எனக்கு ஆழ்ந்தநம்பிக்கை இருக்கிறது’ என்று வில்லியம்ஷேக்ஸ்பியர் நாடகத்தை நினைவூட்டியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். கல்லூரி நாட்களில் படித்ததுதான், இப்போது நினைவில்லை என்று சொன்னேன். இக்கட்டுரையை முடிப்பதற்கு முன் ‘ஒத்தெல்லோ’ நூலை எடுத்துப் படித்தேன். மார்க்ஸ் தனது கடிதத்தில் ஷேக்ஸ்பியரின் ஒருகதாபாத்திரத்தோடு தன்னை ஒப்பிட்டது அவரது இலக்கிய ஈடுபாட்டைக் காட்டுகிறதென்றால், செல்லாராம் அதனை எங்கள் உரையாடலில் குறிப்பிட்டது இவருடைய பரந்த வாசிப்பைக் காட்டுகிறது எனலாம்.   மற்றவர்களுக்கும் அத்தகைய வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், காசிமேட்டில் ‘சிங்காரவேலர் சிந்தனைக் கழகம்’ கட்டப்பட்டுள்ளது. வழக்குகள், இடையூறுகள் என அடுத்தடுத்து வந்த தடைகளைத் தகர்த்து அதனைக் கட்டியதில் தலையாய பங்கெடுத்தவர் செல்லாராம். ஏழை மாணவர்களுக்கான இலவச இரவுப் பாடசாலையாகவும், நூலகமாகவும் உருவெடுத்துள்ள அந்தக் கட்டடத்தை 1982ல்திறந்துவைத்தவர் அப்போது கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் பின்னர் புதிய தேவைகளையொட்டி இரண்டு அடுக்குகளாக மேம்படுத்தப்பட்ட கட்டடத்தை 1995ல் திறந்துவைத்தவர் அன்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரான தோழர் என்.சங்கரய்யா.

தற்போது 80 வயதாகும் செல்லாராம் உடல்நிலை காரணமாக முன் போல் செயல்பட முடியாதவராக உள்ளார். ஆயினும்கட்சி உறுப்பினராகத் தன்னால் இயன்றபணிகளைச் செய்து வருகிறார். வடசென்னையில், குறிப்பாக ராயபுரம், ஆர்.கே. நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்சி இப்போதும் கட்சி துடிப்பாகச் செயல்படுவதற்கு ஓர் அடித்தளமாக அக்காலத்தில் செல்லாராம் ஆற்றிய தொழிற்சங்கப் பணிகளும் இயக்க வேலைகளும் இலக்கிய வாசிப்புகளும் இருந்திருப்பதைத் தோழர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள். அதற்கு முற்றிலும் தகுதிவாய்ந்தவராக, நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்திடும் தோழர் செல்லாராம் பங்களிப்பு பாராட்டுக்குரியது - பின்பற்றத்தக்கது.

(கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்)