பிறந்த ஊரிலிருந்து வாழ்வாதாரம் தேடி வெளியூர்களில் குடியேறுவது பலரது வாழ்விலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அப்படி தூத்துக்குடியில் குடியேறிய அந்தோணி - ரீட்டா நீலா ஆகியோருக்குப் பிறந்து, திருச்சியில் எஸ்எஸ்எல்சி வரை படித்து, விழுப்புரத்தில் ஒரு சிறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, தற்போதும் அங்கு வாழ்கிறவர் தோழர் அல்போன்ஸ். அவருடன் இணைந்து இயக்க வாழ்விலும் இணையரானவர் தோழர் பேச்சியம்மாள்.
தோழர் அல்போன்ஸ்
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி செல்ல இயலாத அல்போன்ஸ் 1970ல் விழுப்புரத்தில் கலப்புஉரம் தயாரிப்பு நிறுவனமான ஷாவாலஸ் குழுமத்தில் ஒரு தொழிலாளியாகச் சேர்ந்தார். அங்கு வேலைசெய்த சுமார் 20 தொழிலாளர்களும், நிர்வாகம் தங்களது கோரிக்கைகளை ஏற்காத நிலையில் போராட்டத்தில் இறங்கினார்கள். அந்தப் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு ஆதரவாக நின்றது. அதைத் தொடர்ந்து குழுமத்திற்குள் இருந்த தொழிற்சங்கம் சிஐடியு கிளையாக இணைக்கப்பட்டது. சங்கத்திற்கு தோழர் எஸ். பத்மநாபன் தலைவராக இருந்தார். அவர் மறைவிற்குப் பிறகு வழக்குரைஞரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான தோழர் ஆர். ராமமூர்த்தி தலைவர் பொறுப்பேற்றார்.
1970களில் ஷாவாலஸ் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி மற்றொரு போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆறு மாத காலம் ஆர்ப்பாட்டம், மறியல், கண்டனக் கூட்டம் என நடந்த போராட்டம், தொடர் உண்ணாநிலைப் போராட்டமாக மாறியது. அதனை முன்னின்று நடத்தியவர் அல்போன்ஸ். தொழிலாளர்களுக்குக் கூலியை உயர்த்திக் கொடுக்க மனமில்லாத நிர்வாகம் தொழிற்சாலையை மூடிவிட முடிவு செய்தது. போராட்டத்தின் பலனாகத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க முன்வந்தது. ஷாவாலஸ் தொழிலாளர்கள் அப்போது, தங்களுக்கு ஊக்கமும் உறுதியும் அளித்ததற்கு நன்றியாக வழங்கிய நன்கொடையில்தான் கட்சிக்காக வழுதரெட்டியில் 2,400 சதுர அடி மனை 1990களின் முற்பகுதியில் வாங்கப்பட்டது.
தோழர் அல்போன்ஸ், 1970ல் எஸ். பத்மநாபன் முன்முயற்சியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். அது முதல் விழுப்புரம் நகரத்திலும், சுற்று வட்டாரப்பகுதிகளிலும் கட்சியின் சார்பாக நடைபெறும் இயக்கங்களிலும் உழைப்பாளி மக்களின் போராட்டங்களிலும் தவறாமல் அல்போன்ஸ் கலந்துகொள்வார். தாம் உறுப்பினராக இணைந்த கிளையில் உறுப்பினர்களாக இருந்த லாரி டிரைவர் சந்துரு, ஓட்டல் தொழிலாளி கோபால் மற்றும் சுப்பிரமணியம் உள்ளிட்ட தோழர்களோடு பணியாற்றியதை நினைவுகூர்கிறார் அல்போன்ஸ். சில ஆண்டுகளில் நடந்த கிளை மாநாட்டில் அவரே செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.அவசரநிலை ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் நகராட்சி அருகில் கட்சியின் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தை நடத்த முற்பட்டபோது எஸ். பத்மநாபன், சந்துரு (எ) ராமச்சந்திரன், கோபிநாத் ஆகியோருடன் அல்போன்ஸ், நகரசுத்தித் தொழிலாளர்கள் உள்ளிட்ட கட்சித் தோழர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதை மீறி தோழர்கள் உறுதியாக நின்று பொதுக்கூட்டத்தை நடத்தினர்.
அக்காலத்தில் விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்சியின் பணிகளில் எஸ். பத்மநாபன் ஈடுபட்டு வந்தார். எழுபதுகளில் ரயில்வேயில் ஓட்டுநராக இருந்த அவர் தொழிலாளர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக நிர்வாகத்தினால் பழி வாங்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர். ரயில்வேயில் பணியாற்றிய நாட்களிலேயே கட்சி உறுப்பினராக இருந்த எஸ்.பி., வேலை நீக்கம் செய்யப்பட்ட பிறகு கட்சியின் முழுநேர ஊழியரானார். ஒரே மாவட்டமாக இருந்த தென்னாற்காடு மாவட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கான வட்டச் செயலாளராகவும் செயல்பட்ட அவர் விழுப்புரத்திலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கட்சியைக் கட்டி வளர்ப்பதில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டார். உடல்நலம் பாதித்து 1984ல் காலமானார். தம்மையும் கட்சிப்பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபடச் செய்தவர் தோழர் எஸ்.பி. என்று நெகிழ்வோடு குறிப்பிடுகிறார் அல்போன்ஸ்.எண்பதுகளில் விழுப்புரம் நகரத்தில் ராஜ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இஞ்சினியரிங் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு சிஐடியு தலைமையில் 3 மாதம் தொடர் போராட்டம் நடத்தினர். உருக்குப் போன்ற ஒற்றுமையுடன் தொழிலாளர்கள் போராடினர். அப்போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் களத்தில் நின்றவர் தோழர் அல்போன்ஸ்.
விழுப்புரம் தாலுக்காவில் குத்தகை விவசாயிகளுக்கு ஆதரவாக குத்தகை விவசாயிகள் நிலமீட்பு இயக்கம் வீரியமாக நடைபெற்றது. கண்டமங்கலம் பகுதிகளில் நடைபெற்ற அப்போராட்டத்தில் அவர்களுக்குப் பக்கபலமாக ராஜ் இண்டஸ்ட்ரிஸ் இஞ்ஜினீயரிங் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் களத்தில் நின்று போராடினர். இவ்வாறு தொழிலாளர்களும் துணை நின்ற அந்தப் போராட்டம் வெற்றி பெற்று, குத்தகை விவசாயிகளின் சாகுபடி உரிமை பாதுகாக்கப்பட்டது. தோழர் அல்போன்ஸ் ஆர்வத்தோடு அந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
தோழர்கள் சந்துரு, கோபால், சுப்பிரமணியம் ஆகியோருக்குப் பிறகு 1990களில் கட்சியின் விழுப்புரம் நகரச் செயலாளராகத் தோழர் அல்போன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்களில் வழுதரெட்டி பகுதியில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காகவும், சாதிய மோதல்களுக்கு எதிராகவும், அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாகவும் இயக்கங்களைத் திட்டமிட்டு நடத்துவதில் முக்கிய பங்காற்றினார். கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் கலைஞர்களையும் கலைக்குழுக்களையும் மேடையேற்றினார். அத்துடன், தாமே கம்பீரக் குரலெடுத்துப் பாடவும் செய்தார். இவ்வாறு இயக்கப்பணியில் அர்ப்பணித்துக்கொண்ட தோழர் அல்போன்ஸ் மக்களைக் கவரும் வகையில் பேசக்கூடியவரும் கூட. 1980-களில் ‘தீக்கதிர்’ நாளேடு மதுரையிலிருந்து ரயிலில் விழுப்புரம் வந்தடையும். தோழர் அல்போன்ஸ் அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்து ரயில் நிலையம் சென்று ‘தீக்கதிர்’ கட்டை எடுத்து விநியோகம் செய்துவந்தார். சுமார் 15 ஆண்டுகள் 100க்கு மேற்பட்ட ‘தீக்கதிர்’ படிகள் விநியோகம் செய்திடும் விழுப்புரம் முகவராகச் செயல்பட்டார்.
தோழர் பேச்சியம்மாள்
1979ஆம் ஆண்டு அல்போன்ஸ் - பேச்சியம்மாள் திருமணம் நடைபெற்றது. 1985ஆம் ஆண்டு பேச்சியம்மாள் கட்சியின் உறுப்பினரானார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இப்போதும் பணியாற்றி வருகிறார். மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார். 1996ஆம் ஆண்டு வழுதரெட்டி ஊராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்மையான செயல்பாட்டுக்காக மக்களின் அன்பைப் பெற்றவர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களைத் திரட்டிப் போராடி நிரந்தரமாக பொதுவிநியோகக் கடையைக் கொண்டு வந்தது உள்ளிட்ட இயக்கங்களில் பேச்சியம்மாளின் பங்களிப்பு முக்கியமானது.
ஒரு மே தினத்தன்று காலையில் கட்சிக் கொடியேற்று நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலையில் அக்கொடியை அகற்றிட சாதிய சக்தியினர் முயன்றனர். அப்போது, அரணாக நின்று, காவல்துறையையும் தலையிடச் செய்து கட்சிக்கொடியைக் காத்தார் பேச்சியம்மாள். இப்போதும் பேச்சியம்மாள் கட்சி உறுப்பினராக இருப்பதோடு, மாதர் சங்கத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அல்போன்ஸ் – பேச்சியம்மாள் இணையருக்கு ஜோதிபாசு, காரல் மார்க்ஸ் என இரண்டு மகன்கள். அதில் ஜோதிபாசு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவினால் இறந்துவிட்டார். காரல் மார்க்ஸ் சுயதொழில் செய்து குடும்பத்தைப் பாதுகாத்து வருகிறார்.தற்போது 73 வயதாகும் தோழர் அல்போன்ஸ் உடல்நிலை முன்போல ஒத்துழைக்காததால், கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு தம்மால் இயன்ற இயக்கப்பணிகளை நிறைவேற்றி வருகிறார். தோழர் பேச்சியம்மாள் இப்போதும் சுறுசுறுப்பாக இயக்கப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அல்போன்ஸ்-பேச்சியம்மாள் குடும்பம் கட்சிக்குடும்பம். இன்றைக்கும் அல்போன்ஸ் - பேச்சியம்மாள் இணையர் கட்சியின் உறுப்பினர்களாக, முழு விசுவாசிகளாக, விடாப்பிடியான இயக்கப் பற்றுடன் வாழ்வதை சக தோழர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.
1970களிலும், 1980களிலும் அல்போன்ஸ் - பேச்சியம்மாள் இருவரும் ஆற்றிய இயக்கப்பணி விழுப்புரம் நகரத்தில் கட்சி வளர்ச்சிக்கு முக்கியமானதொரு காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. இயக்கம், இல்லறம் இரண்டிலும் இளம் தோழர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிடும் அல்போன்ஸ் - பேச்சியம்மாள் இணையின் தன்னலமற்ற கட்சிப்பணி பாராட்டத்தக்கது, பின்பற்றத்தக்கது.