‘திருப்பியடித்த வரலாறு’ : செங்கொடி ஏந்திய தஞ்சை மண்ணின் வீரகாவியம்
தஞ்சை மண்ணின் உழைக்கும் வர்க்கம் நடத்திய நூறாண்டு காலப் போராட்ட வரலாற்றைத் தத்ரூப மாகப் பதிவு செய்திருக்கிறது “திருப்பியடித்த வரலாறு: தஞ்சை மண்ணில் மார்க்சிய இயக்கம் - போராட்டங்களின் நூற்றாண்டு” எனும் நூல். 1931 முதல் 2001 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்நூல், வெறும் வரலாற்றுப் பதிவல்ல; அது ரத்தமும் சதையுமான ஒரு போராட்டக் காவியம். நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. அந்த நூறாண்டு களில், குறிப்பாக 1940 முதல் 1990 வரை யிலான ஐம்பது ஆண்டுகளில் நடந்த வர்க்கப் போராட்டங்களும், சமூக மாற்றங்களுமே இந்நூலின் மையக்கருப் பொருள். அந்த ஐம்பதாண்டு காலத்தில்தான் நிலப்பிரபுத்து வக் கோட்டையையும், சாதி அகழியையும் உழைக்கும் வர்க்க இயக்கம் தகர்த்தெறிந்தது.
நிலப்பிரபுத்துவக் கோட்டையைத் தகர்த்த பெருமிதம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, ஒரு காலத்தில் நிலப்பிரபுத்துவத்தின் அசைக்க முடியாத கோட்டையாகவும், சாதிய ஒடுக்குமுறையின் அகழியாகவும் இருந்தது. மாவட்டத்தின் மொத்த நிலங்களும் ஆதீனங்கள், மடங்கள், ஜமீன்கள் மற்றும் நிலச்சுவான்தாரர்கள் ஆகிய மூன்று பிரிவினரி டம் குவிந்திருந்தன. இந்த மூன்று பிரிவின ருமே சாதி ஆதிக்க சமூகங்களைச் சேர்ந்த வர்களாக இருந்தனர். மறுபுறம், நிலத்தில் உழைத்த குத்தகை விவசாயிகள் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர்களாகவும், பண்ணையடி மைகளாகப் பிணைக்கப்பட்ட தலித் மக்கள் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர் களாகவும் இருந்தனர். 1947-க்கு முன்பு காலனி ஆட்சிக்கு ஆதரவாக நின்ற பண்ணை யாளர்கள், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின் ஆதரவோடு தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர். இந்தச் சூழலில் தான், உழைக்கும் மக்களின் விடி வெள்ளியாக கம்யூ னிஸ்ட் இயக்கம் தடம் பதித்தது. பி.எஸ்.ஆரின் வருகையும் வர்க்கப் போரும் 1936-இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவான பிறகு, தஞ்சை மாவட்ட விவசாயிகளைத் திரட்டும் பொறுப்பு தோழர் பி. சீனிவாச ராவ் (பிஎஸ்ஆர்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. “புரட்சிக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி, யார் நமது எதிரி, யார் நமது நண்பர் என்பதை வரையறுப்பதுதான்” என்ற தோழர் மா சே துங்கின் மார்க்சியப் புரிதலோடு தஞ்சை மண்ணின் சமூக-பொருளாதாரச் சூழலை பிஎஸ்ஆர் ஆய்வு செய்தார். அதன் விளை வாக உருவானதே ‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’ என்ற வரலாற்று ஆவணம். கீழத்தஞ்சையில் பண்ணையாட்களைச் சாட்டையால் அடிப்பது, ‘சாணிப்பால்’ குடிக்கச் செய்வது போன்ற குரூரமான தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவமாடின. களப்பால் கிராமத்தில் திரண்டிருந்த தலித் மக்களிடையே பேசிய பிஎஸ்ஆர், “நிலச்சுவான்தாரரின் குண்டர்கள் உங்களைச் சாட்டையால் அடித்தால் நீங்கள் திருப்பி அடியுங்கள்; அவர்களை மரத்தில் கட்டிப்போடுங்கள்” என்று முழங்கினார். அந்த இடிமுழக்கம் தலித் மக்களிடையே மின்சாரத்தைப் பாய்ச்சியது. களப்பால் கிராமத்திலிருந்து பல கிராமங் களுக்கு பிஎஸ்ஆரின் பேச்சு காட்டுத்தீயாய் பரவியது.
தென்பரை எழுச்சியும் கூட்டுப்போராட்டமும்
தென்பரை கிராமத்தில்தான் முதன்முத லாக விவசாயிகள் சங்கத்தின் செங்கொடியை பிஎஸ்ஆர் ஏற்றிவைத்தார். அங்கேதான் ‘திருப்பியடித்த வரலாறு’ முறைப்படி தொடங்கி யது. நியாயமான குத்தகையை நிலச்சுவான் தாரர்கள் வழங்க மறுத்தபோது, குத்தகை விவசாயிகள் தங்களுக்குரிய பங்கைத் தாங்களே அறுவடை செய்து எடுத்துக் கொள்ளும் போராட்டத்தைத் தொடங்கி வெற்றி கண்டனர். “இந்தக் கொடிதான் நமக்கு விடு தலை பெற்றுத் தரும்” என்ற நம்பிக்கையுடன் பண்ணையாட்களும், குத்தகை விவசாயி களும் இணைந்து நின்றனர். மன்னார்குடியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புப் பேச்சுவார்த்தையில், பண்ணையடிமை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. களப்பால் குப்பு, மன்னார்குடி அமிர்தலிங்கம் போன்ற மக்கள் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் முன்னின்றார்கள். பிற்படுத்தப்பட்ட குத்தகை விவசாயிகளும், தலித் பண்ணையாட்களும் இணைந்து கை கோர்த்ததால்தான் சாணிப்பால் - சாட்டை யடிக் கொடுமைகளை ஒழிக்க முடிந்தது. இதன் தொடர்ச்சியாக 1952-ஆம் ஆண்டு பண்ணையாட்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.
கீழவெண்மணித் தியாகமும் நிலச் சீர்திருத்தமும்
மாவட்டமெங்கும் விவசாயத் தொழிலாளர் கள் கூலி உயர்வுக்கான போராட்டங்களை முன் னெடுத்தனர். அன்றைய காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் நிலச்சுவான்தாரர்களுக்கு ஆதரவாகவே நின்றன. 1968-இல் கூலி உயர்வு கேட்டதற்காக நிலச்சுவான்தாரர்களின் அடியாட்கள் கீழவெண்மணியில் 44 தலித் விவசாயத் தொழிலாளர்களைக் குடிசைக்குள் வைத்து உயிரோடு எரித்துக் கொன்றனர். “செங்கொடியை இறக்கினால் உயிர்பிச்சை தருகிறோம்” என்று மிரட்டியபோதும், “நாங்கள் மனிதர்களாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமே இந்தச் செங்கொடிதான்; உயிரே போனாலும் இதை இறக்க மாட்டோம்” என்று முழங்கிய வெண்மணித் தியாகிகளின் ரத்தம் இந்த மண்ணின் வரலாற்றை மாற்றியது. இந்தக் கொடூரத்திற்குப் பிறகு அமைக்கப் பட்ட கணபதியா பிள்ளை ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைவிடாத போராட்டங்களால், 1.80 லட்சம் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வும், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் சுமார் 3 லட்சம் ஏக்கர் உபரி நிலமும் நிலமற்ற உழைப்பாளிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப் பட்டது.
தியாகங்களால் செதுக்கப்பட்ட வரலாறு
தஞ்சை மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்க்க எத்தனையோ தோழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். களப்பால் குப்பு, வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், ஜாம்பவான் ஓடை சிவராமன், சிக்கல் பக்கிரிசாமி, நாணலூர் நடேசன், கெழுகத்தூர் காத்தான், கோட்டூர் ராஜு, செந்தாமரைக்கண் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சான், நல்லூர் ஆத்தங்கரை தெரு கே.வைரவன், குடவாசல் கே.தங்கையன், ராயமுண்டான்பட்டி என்.வெங்கடாச்சலம், இரிஞ்சூர் சின்னப்பிள்ளை, திருமெய்ஞானம் நாகூரான், அஞ்சான், மன்னார்குடி ஞானசேகரன், நன்னிலம் நாவலன், பூந்தாழங்குடி பக்கிரிசாமி என அந்தப் பட்டியல் மிக நீளமானது. இவர்களோடு மணலூர் மணியம்மை, மணலி கந்தசாமி, பி.எஸ். தனுஷ்கோடி, சாமிநாதன், கே.பி. நடராஜன், சேரங்குளம் அமிர்தலிங்கம், காத்தமுத்து, கோ. வீரய்யன், ஜி. பாரதிமோகன், ஏ.எம். கோபு, எம். செல்ல முத்து, கே.ஆர். ஞானசம்பந்தம் உள்ளிட்ட தலைவர்களின் மாபெரும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளே தஞ்சை மண்ணில் வர்க்க உணர்வை வேரூன்றச் செய்தன.
இளைய தலைமுறைக்கான வழிகாட்டி
இந்தப் பின்னணியில், மூத்த எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் 11 ஆண்டுகால நீண்ட ஆய்விற்குப் பிறகு, பல நூல்களைத் தேடிப் படித்து, களத்தில் நின்ற மூத்த தோழர்களைச் சந்தித்து இந்த நூலை இரண்டு தொகுதிகளாகச் செதுக்கியுள்ளார். தெலுங்கானா ஆயுதப் போராட்டம், புன்னப்புரா வயலார் எழுச்சிக்கு இணை யாகத் தஞ்சை மண்ணின் இந்தப் பண்ணை யடிமை ஒழிப்புப் போராட்டம் அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மண்ணில் இன்று களத்தில் நிற்ப வர்கள் பெரும்பான்மையாக மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். புதிய நிலைமைகளுக்கு ஏற்பப் புதிய அணுகு முறைகளை உருவாக்கி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அவர் களுக்கு இருக்கிறது. இந்த வீர வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது ஒரு முக்கிய இயக்கப் பணி யாகும். அதுவே, கிராமப்புற உழைப்பாளி களை அணிதிரட்டி அடிப்படை சமூக மாற்றங்களுக்கான வலுவான இயக்கத்தை வளர்த்தெடுக்க வழிகாட்டும்.
