டாடி தருவார்... ஆனால் ஓட்டு யார் தருவார்?
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டாலே சிவகாசி கே.டி. ராஜேந்திர பாலாஜியின் ‘நாவன்மையும்’ விஸ்வரூபம் எடுத்துவிடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரனுக்காக வாக்கு சேகரித்த அதே பாலாஜிதான், இன்று “அதிமுக இல்லையென்றால் தேமுதிக பூஜ்யம்” என சாடியிருக்கிறார். புலி வேட்டையா? மான் குட்டியா? விருதுநகர் அதிமுக வேட்பாளர் வி.ஜி. கணேசனை ஆதரித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, “நாங்கள் புலி வேட்டைக்குச் சென்றோம், ஆனால் ஒரு மான்குட்டிதான் சிக்கியிருக்கிறது” எனத் தேமுதிகவைச் சாதாரணமாக எடைபோட்டுப் பேசியுள்ளார். தேமுதிக, திமுக கூட்டணி யில் இணைந்ததால், தங்களது தோல்வி பயத்தை மறைக்க அவர் இப்படிப் பேசுகிறாரோ என விருதுநகர் முதல் சிவகாசி வரை முணுமுணுப்பு கேட்கிறது. ‘டாடி’ பாசம் இன்னும் குறையவில்லை! அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, “மத்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கேட்டால், ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நிதி தருவார்” என நம்பிக்கையோடு குறிப்பிட்டுள்ளார். முன்பு ஒருமுறை மோடியை “டாடி” என்று விளித்துப் பரபரப்பை ஏற்படுத்திய பாலாஜி, இப்போதும் அதே பாசப் பிணைப்பு டன் ‘டாடி தருவார்’ என நம்பிக் கொண்டிருக்கிறார். தேமுதிகவின் பலமும் பாலாஜியின் பலவீனமும்! தேமுதிக தங்களுக்கு நிகரான போட்டியே இல்லை என்று பாலாஜி கூறினாலும், அந்தப் பகுதியில் அக்கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை அவர் அறிவார். அதனால்தான், அவர்கள் திமுக பக்கம் போனால் ஏற்படப்போகும் சரிவை இப்போதே ‘புலம்பலாக’ வெளிப்படுத்தி வருகிறார். டாடி தரும் நிதியை வைத்துத் தேர்தலைச் சந்திக்கலாம், ஆனால் மக்களின் மனதை வெல்லப் பாலாஜி என்ன செய்யப்போகிறார்?
