கூட்டுறவுத் துறையில் ஒன்றிய அரசின் ஆதிக்கம்: மாநில உரிமைகளைப் பறிப்பதா? நாடாளுமன்றத்தில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆவேசம்!
புதுதில்லி, மார்ச் 31- அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலப் பட்டிய லில் உள்ள ‘கூட்டுறவு’ துறையில், ஒன்றிய அரசு தனி அமைச்சகத்தை உருவாக்கி மாநிலங்களின் தன்னாட்சியைப் பறித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், கரூர் எம்.பி., ஜோதிமணி ஆகியோர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளனர். மாநிலப் பட்டியலில் கைவைக்கும் ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், வரிசை எண் 32-ன் கீழ் ‘கூட்டுறவு’ என்பது மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு துறையாகும். இந்நிலையில், ஒன்றிய அரசு தனியாக ஒரு கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியது மற்றும் தேசியக் கூட்டுறவு கொள்கையைக் கொண்டு வருவது ஆகியவை மாநிலங்களின் உரிமைகளை மீறும் செயல் என இரு உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர். தமிழ்நாடு, கேரளம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரலாற்று ரீதியாக வலுவான மற்றும் தன்னாட்சி கொண்ட கூட்டுறவு இயக்கங்கள் உள்ளன. இத்தகைய சூழலில், புதிய மத்திய கட்டமைப்புகளை உரு வாக்குவது மாநில அளவிலான கூட்டுறவுப் பயிற்சி, கல்வி மற்றும் நிதி நிறுவனங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடாதா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். அரசின் நீண்ட பட்டியல் - ஆனால் அதிகாரப் பகிர்வு இல்லை ஆர்.சச்சிதானந்தம் மற்றும் ஜோதிமணி கேள்விக்கு (கேள்வி எண்: 5235), கூட்டுறவுத் துறை அமைச்சர் அளித்துள்ள பதிலில், மாநிலங்களின் கவலைகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், கடந்த காலங்களில் எடுக் கப்பட்ட 23 வகையான நடவடிக்கைகளை வரிசைப் படுத்தியுள்ளார். குறிப்பாக, மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்கங்கள் சட்ட (MSCS Act, 2023) திருத்தம், தேசியக் கூட்டுறவு தரவுத் தளம் (National Cooperative Database) மற்றும் ‘சகாகர் சே சம்ரித்தி’ (Sahakar se Samriddhi) போன்ற திட்டங்கள் மாநிலங்களுடன் கலந்தாலோசித்தே உரு வாக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நடைமுறையில் மாநிலக் கூட்டுறவு சங்கங்களின் மீது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை அதிகரித்தது மற்றும் புதிய நிபந்தனைகளை விதித்தது ஆகியவை மாநி லங்களின் தன்னாட்சியைப் பாதிக்கவில்லையா என உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லை. தமிழ்நாட்டின் கவலைகளுக்குப் பதில் என்ன? தமிழகம் போன்ற மாநிலங்களில் கூட்டுறவுத் துறை மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதன் தன்னாட்சியைப் பாதுகாப்பது குறித்து அமைச்சர் அளித்த பதில் மழுப்பலாகவே உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் என்ற பெயரில் அனைத்துக் கூட்டுறவுத் தரவுகளையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சி, மாநிலங்களின் அதிகாரத்தை மறைமுகமாகப் பறிக்கும் செயல் என ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., விமர்சித்துள்ளார். இது குறித்து ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில், “கூட்டுறவு என்பது அந்தந்த மாநில மக்களின் தேவைகளுக்கேற்பச் செயல்பட வேண்டிய துறை. ஆனால், பாஜக அரசு அனைத்தை யும் ‘மத்திய மயமாக்கும்’ (Centralization) நோக்கில் செயல்படுகிறது. மாநில அரசுகளின் ஆலோசனையைப் பெற்றதாகக் கூறும் ஒன்றிய அரசு, நிதி மற்றும் நிர்வாக முடிவுகளில் மாநிலங்களுக்கான தன்னாட்சியை உறுதி செய்யத் தவறிவிட்டது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் கிளைகளைத் திறக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய விதிகள், மாநிலங்களின் நிதி அதிகாரத்தில் தலை யிடுவதாகும். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மாநி லப் பட்டியலில் உள்ள கூட்டுறவுத் துறையைத் தன் வசம் இழுக்க நினைக்கும் ஒன்றிய அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.