கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக அமெரிக்காவிடம் அடிபணியலாமா?
...நேற்றைய தொடர்ச்சி
சமரசப் போக்கில் தேசத்தின் இறையாண்மை இந்தியா ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை யைப் பின்பற்றும் நாடு என்று சர்வதேச சமூகம் பாராட்டி மதித்துவந்த ஒரு காலத்திலிருந்து இன்று நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்.
கடந்த 2003-ஆம் ஆண்டில், வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, அமெரிக்காவுடன் நல்லுறவுகளைப் பேணுவ தற்குப் பேரார்வம் காட்டிவந்த சூழலில்கூட, ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா பின்பற்றுவதற்கான அரசியல் கருத்தொற்றுமை முழுமையாகச் சிதைந்து போகவில்லை.
அதனால் தான், 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இராக் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்துத் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், சுயாட்சி கொண்ட ஒரு நாட்டில் தலையிட்டு, இராணுவ நடவடிக்கை மூலம் அங்கே ஆட்சி மாற்றத்தை அரங்கேற்றுவது ஏற்புடைய தல்ல என்று வலியுறுத்தியும் இந்திய நாடாளுமன்றத் தில் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடிந்தது. ஆனால் இன்று பிற நாடுகளின் இறை யாண்மைக்கு அமெரிக்கா ஊறு விளைவித்து வரு வதை இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையும் கைவிடப்பட்டுவிட்டது. இவ்வாறாக, இந்தியா தனது சொந்த இறையாண்மையையே அமெ ரிக்க நலன்களுக்குச் சமரசம் செய்துவிட்ட சூழல் உருவாகியுள்ளது. இந்த சமரசப் போக்கு மற்றும் சரண டைதலே, அமெரிக்காவுடன் ஒரு சமமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாம் இணங்க வேண்டிய நிர்ப் பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் பக்கம் முழுவதுமாகச் சாய்ந்து நின்று, பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைப்ப தும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் விவகாரத்தில் எதுவும் பேசாது கனத்த மௌனம் காப்பதும், சர்வதேச அரங்கில் தெற்குலக நாடு களின் தலைவர் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவின் நம்பகத்தன்மையையே கேள்விக் குறியாக்கிவிட்டது. சில வாரங்களுக்கு முன்பு, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப் பட்டு, அந்நாடு அமெரிக்காவின் தாக்குதலுக் குள்ளான போதும் இந்தியா அதைக் கண்டிக்க வில்லை. ஆனால் இந்தியாவுடன் சேர்ந்து பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிற தெற்குலக நாடு களான பிரேசிலும், தென் ஆப்பிரிக்காவும் காசா/ பாலஸ்தீனம், வெனிசுலா, தற்போது ஈரான் என அனை த்துப் பிரச்சனைகளிலும் உறுதியான நிலைபாட்டை மேற்கொண்டதுடன் அமெரிக்காவுக்கு எதிரான தங்களது கண்டனத்தைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளன.
இத்தகைய பின்னணியில் இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பது அவ்வளவு பொருத்தமானதாக இல்லை. காங்கிரஸ் கட்சிக்குத் தேவைப்படும் சுயபரிசோதனை ஈரான் மீதான இன்றைய தாக்குதல்கள் குறித்து நாம் விவாதிக்கும்போது, ஈரான் அமெரிக்காவின் தீவிர கண்காணிப்புக்கு இலக்காகிக் குறிவைக்கப்பட்டிருந்த முந்தைய காலகட்டத்தையும், அந்தச் சூழலையும் நாம் சற்றே பின்னோக்கிச் சென்று திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க/இஸ்ரேல் தாக்குதல் குறித்து மௌனம் சாதிக்கும் மோடி அரசின் கோழைத்தனமான அணுகுமுறைக்குக் காங்கி ரஸ் கட்சி தனது வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது வரவேற்புக்குரியது. காங்கிரஸின் இன் றைய கண்டனத்தை வரவேற்கும் அதே வேளையில், காங்கிரஸ் தலைமை தீவிரமான சுய பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திட விழைகிறோம்.
கடந்த 2005-ஆம் ஆண்டில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் உத்தி சார் உறவுகளை (strategic alliance) உருவாக்க முனைப்புக் காட்டியது. இதற்காக ஏப்ரல் 2005-இல் ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்திலும் கையெ ழுத்திட்டது. அதைத்தொடர்ந்து இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் பூர்வாங்கமாக முன்னெடுக் கப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் தான், ஈரானைத் தனிமைப்படுத்தும் விஷயத்தில் இந்தியா தங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தியது. அணுசக்தி விவகாரம் தொடர்பாக, சர்வதேச அணுசக்தி முகமையில் (IAEA) ஈரானுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முன்மொழிந்திருந்தன. சர்வதேச அணுசக்தி முகமையில் ஈரானை மையப் படுத்திக் குறிவைக்கும் இந்த முயற்சிக்கு துவக்கத்தில் இந்தியா தனது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தது. ஆனால் செப்டம்பர் 2005-இல் இந்தியா தனது முந் தைய நிலைபாட்டை மாற்றிக்கொண்டு, ஈரானுக்கு எதி ராக வாக்களித்தது. பிப்ரவரி 2006-இல் மீண்டும் இரண்டாவது முறையாக ஈரானுக்கு எதிராக வாக்க ளித்தது. சர்வதேச அணுசக்தி முகமையின் இந்தத் தீர்மானமே, பின்னாளில் ஐ.நா. பாதுகாப்பு சபை ஈரான் அணுசக்தி விவகாரத்தைக் கையிலெடுக்கவும், ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவும் அடித்தள மாக அமைந்தது.
இதுவே ஈரான் மீதான அமெரிக்கா வின் பலமுனைத் தாக்குதலின் தொடக்கமாகவும் அமைந்து, தற்போது ஈரான் மீதான இராணுவ நட வடிக்கையில் வந்து சேர்ந்துள்ளது. மன்மோகன் சிங் அரசாங்கத்தால் அன்று உரு வாக்கப்பட்ட அமெரிக்காவுடனான உத்திசார் உற வைத்தான் இன்று மோடி அரசு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இது இன்று கெடுவாய்ப் பாக, முழுமையான அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கையாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுட னான ஒரு கூட்டணியாகவும் உருவெடுத்துள்ளது, நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் வருகையாலும், இந்துத்துவாக் கொள்கையின் எழுச்சியாலும், இந்தியாவின் ஆளும் வர்க்கம், ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை என்கிற கருத்தோட்டத்தையே கைவிட்டுவிட்டது. மேலும் இந்திய தேசத்தின் இறையாண்மையும், அரசின் சுதந்தி ரமான செயல்பாடும் அந்நிய சக்திகளால் கட்டுப் படுத்தப்படுகிற ஒரு நிலைமையையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கவும் ஆளும் வர்க்கம் தயாராகி விட்டது. மோடி அரசாங்கம் ஆளும் வர்க்கத்தின் இந்த நிலைபாட்டை அங்கீகரிக்கும் வகையில் தனது ஆட்சிச் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ளது.
தீவிர தேசியவாதம் மற்றும் போலியான தற்சார்புவாதம் (ஆத்ம நிர்பாரத்) ஆகிய கற்பிதங்களின் பின்னே ஒளிந்துகொண்டு நின்று மோடி அரசு இவற்றைச் செய்து வருகிறது. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கான அரசியல் போராட்டம் இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட, சுதந்திரமான வெளி யுறவுக் கொள்கையை மீட்டெடுப்பதற்கான போராட் டம், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான ஒரு பெரும் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்திய நாட்டின் இறை யாண்மையையும், தேசிய நலன்களையும் அடி நாதமாகக் கொண்ட போராட்டமாக இது வடிவமைக் கப்பட வேண்டும்.
இன்றைய காலச்சூழல், இந்தப் போராட்டத்தை வலி மையுடன் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புக ளை வழங்குகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில் துறையின் முக்கிய நலன் களைப் பாதிக்கும் வகையில், அமெரிக்க நிர்ப்பந்தங்க ளுக்கு அடிபணிந்து, முழுவதும் சமமற்ற ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மிரட்டல்களுக்கு அடி பணிந்து, இந்திய அரசு அமெரிக்கச் சார்புக் கொள்கை களை நிறைவேற்றுவதற்கும், மறுபுறம் இந்திய மக்க ளின் நலன்கள் பலியிடப்படுவதற்கும் இடையிலான தொ டர்பை இந்திய மக்கள் நேரடியாகப் புரிந்துகொள்வதற் கான ஒரு சூழலை இது தற்போது உருவாக்கியுள்ளது.
மேலும், இதுகாறும் தேசியப் பெருமிதம் என்கிற மந்திரச் சொல்லில் ஆட்பட்டு வளர்ந்த பாஜக/ஆர்எஸ் எஸ் ஆதரவாளர்களால், டொனால்டு டிரம்ப்பிடம் தங்கள் தலைவர் மோடி வெளிப்படுத்தும் அடிமைத் தன மனப்பான்மையையும், எஜமான விசுவாசத்தை யும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இந்தியாவுக்கு விருந்தினராக வந்துசென்ற ஈரானியக் கப்பல் அப்பட்ட மான முறையில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட விவ காரத்தில் மோடி அரசின் மௌனமும் ஆர்எஸ்எஸ்/பாஜக ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது. இதற்கிடையே, ஈரான் மீது அமெரிக்கா/இஸ்ரேல் தொடுத்துள்ள போரும், ஈரான் நடத்தும் எதிர்த்தாக்கு தலும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உரு வாக்கி வருகின்றன.
இவற்றின் மையமாக, எண்ணெய் நெருக்கடி இருந்து வருகிறது. சமையல் எரிவாயு மற்றும் உங்களின் பற்றாக்குறை, அதிகரித்து வரும் பண வீக்கம் ஆகியவற்றின் காரணமாக, இந்திய மக்களின் வாழ்நிலை பல்வேறு சோதனைகளையும், சீரழிவு களையும் எதிர்நோக்கியுள்ளது. அமெரிக்காவுடன் இந்திய அரசு செய்துகொள்ளும் சமரசம், இனப்படு கொலையின் அடையாளமாக விளங்கிடும் இஸ்ரேல் மீது இந்துத்துவா சக்திகள் கொண்டுள்ள பாசம் ஆகி யவை நாட்டின் நலனையும், மக்களின் நலனையும் பெரும் அச்சுறுத்தலுக்கு இட்டுச் செல்கின்றன. இத்த கைய அம்சங்கள் யாவும் பொது வெளியில் கூடுதல் அக்கறையுடன் விவாதிக்கப்பட வேண்டும். இடதுசாரி ஜனநாயக சக்திகள் இத்தகைய வாய்ப்பு களைப் பயன்படுத்திக்கொண்டு, ஏகாதிபத்திய எதிர்ப் புணர்வை மக்களிடையே தட்டியெழுப்ப வேண்டும்.
அமெரிக்க சார்புக் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும் என்கிற முழக்கத்தை வலியுறுத்தி மக்க ளைத் திரட்ட வேண்டும். வர்க்கக் கண்ணோட்டத்தில், கார்ப்பரேட் நலன்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தி யத்திடம் இந்தியா அடிபணிந்து செல்வதற்கு அடிப்ப டையாகத் திகழும் தாராளமயக் கொள்கைகளான தனி யார்மயம், கார்ப்பரேட் கொள்ளை, சர்வதேச நிதி மூல தனத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிதல் ஆகிய வற்றுக்கு எதிரான போராட்டமும் இவற்றோடு இணைந்தே முன்னெடுக்கப்பட வேண்டும். அமெ ரிக்க ஏகாதிபத்தியத்துக்கு இளைய பங்காளியாக இந்தி யாவை மாற்றியுள்ள மோடி அரசின் செயலின்மை மக்களிடையே அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
