கடந்த சில தினங்களாக கேரளாவில் தொற்று எண்ணிக்கை தினசரி 20,000-ஐ தாண்டி வெளிப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிரிகள் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை சிறுமைப்படுத்த இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கேரளா நிலைமை கவலை தரும் விதத்தில் இல்லை. மாறாக கேரளா அரசாங்கம் சரியான திசை வழியில்தான் செல்கிறது என பல ஆய்வாளர்கள் அழுத்தமாக கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் ககன்தீப் கங். இவர் தொற்று நோய் நிபுணர் மற்றும் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஆவார். ஐ.சி.எம்.ஆர். அமைப்பின் முக்கிய அங்கமாகவும் இந்திய அரசின் கோவிட்19 கட்டுப்பாடு குழு உறுப்பினராகவும் உள்ளார். சமீபத்தில் இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக ஹேக் செய்யப்பட்ட அலை பேசிகள் பட்டியலில் இவருடைய எண்ணும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தி வயர் இதழுக்காக கரண் தாப்பருக்கு அளித்த காணொலி பேட்டியில், ‘கேரளா இந்தியாவின் கவலை அல்ல; மாறாக இந்தியாவின் முன்மாதிரி’ என அழுத்தமாக கூறுகிறார் இவர். அதே சமயம் கேரளா சில உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சிறு தவறு நிகழ்ந்தால் கூட நிலைமை கையை மீறி போய்விடும் ஆபத்து உள்ளது எனவும் கூறுகிறார்.... பேட்டியின் தமிழ் சுருக்கம்: அ.அன்வர் உசேன்
கரண் தாப்பர்: பேராசிரியர் ககன்தீப் அவர்களே! கேரளா மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 2 முதல் 3% மட்டுமே! ஆனால் கடந்த சில நாட்களாக கேரளாவின் தொற்று எண்ணிக்கை 20,000 ஐ தாண்டி அதாவது இந்தியாவின் எண்ணிக்கையில் 40 முதல் 50% ஆக உள்ளது. இது கவலை தரும் அம்சம் இல்லையா? எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?
ககன்தீப் கங்: கேரளாவில் என்ன நடக்கிறது என்பதை சரியான முறையில் மதிப்பிட வேண்டுமெனில் ஐ.சி.எம்.ஆர். நடத்திய நான்காவது சீரோ ஆய்வை (மக்களிடத்தில் எந்த அளவு தொற்று பரவியுள்ளது எனும் ஆய்வு) நாம் பார்க்க வேண்டும். இந்த ஆய்வை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 68ரூ பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால் கேரளாவில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 43% மட்டுமே!
இதன் பொருள் என்ன?
கேரளா தொற்றை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த முறையில் திறமையாக செயலாற்றி உள்ளது என்பதையே இந்த புள்ளிவிவரம் தெளிவுபடுத்துகிறது. இந்தியா முழுவதும் 68ரூ பேர் பாதிக்கப்பட்ட பொழுது கேரளாவில் 43ரூ மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு கேரளா தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளது. இது சிறந்த செயல்பாடு ஆகும்.
ஆகவே இன்று கேரளாவில் தொற்று அதிகமாக உருவாகிறது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே கேரளாவில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அப்பொழுது தொற்று பாதிக்கப்படாதவர்கள் இப்பொழுது பாதிக்கப்படுகின்றனர். இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. மாறாக கேரளா தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி உள்ளது என்பதைத்தான் இந்த உண்மை வெளிப்படுத்துகிறது.
************
கரண் தாப்பர்: பார்வையாளர்களுக்கு நான் 2 விவரங்களை கூற விரும்புகிறேன்.
1. சமீபத்திய சீரோ ஆய்வு அடிப்படையில் இந்தியா முழுவதும் 68% பெயர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 சதவீதம் மட்டுமே!
2. தடுப்பூசி செலுத்தப்பட்டதை நாம் பார்த்தோம் என்று சொன்னால் கேரளா இரு தவணைகளும் 20% மக்களுக்கு செலுத்தியுள்ளது. ஆனால் இந்திய அளவில் 7.5 சதவீதம் பேருக்கு தான் இரு தவணைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது எடுத்துக்கொண்டால் கேரளா 38% மக்களுக்கு செலுத்தியுள்ளது. இந்திய அளவில் 25 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விவரங்கள் அடிப்படையில் கேரளா ஒருபுறம் தொற்றை அதிகமாக கட்டுப்படுத்தி உள்ளது. மறுபுறத்தில் மிக அதிக மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. எனவே கேரளா சிறந்த முறையில் செயல்பட்டுள்ளது என கூற முடியுமா?
ககன்தீப் கங் : ஆம். புள்ளி விவரங்கள் அந்த உண்மையைதான் வெளிப்படுத்துகின்றன. கேரளா தொற்றை கட்டுப்படுத்துவதிலும் தடுப்பூசிகளை செலுத்துவதிலும் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
************
கரண் தாப்பர்: ஆகவே இந்திய மாநிலங்களிலேயே தொற்றை எதிர்கொள்வதில் கேரளா முதலிடத்தில் உள்ளது என்று கூற முடியுமா?
ககன்தீப் கங் : ஆம் நிச்சயமாக கூறமுடியும்!
************
கரண் தாப்பர்: நான் இன்னொரு அம்சத்தை பற்றி கேட்க விரும்புகிறேன். தொற்று தொடர்பான பரிசோதனைகளை கேரளா ஒரு நாளைக்கு 1.45 லட்சம் அளவுக்கு சராசரியாக நடத்துகிறது. குறிப்பாக நேற்று கிட்டத்தட்ட 2 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதே சமயத்தில் கேரளாவை விட மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கம் வெறும் 50,000 பரிசோதனைகளைத் தான் நடத்துகிறது. ஆகவே கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிகமாக வெளிப்படுவதற்கு அங்கு அதிகமான பரிசோதனைகள் நடத்தப்படுவது காரணமாக இருக்குமா?
ககன்தீப் கங்: ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான்! அகில இந்திய சராசரியை விட கேரளா மிக அதிகமாக பரிசோதனைகளை செய்கிறது. உதாரணத்துக்கு 10 லட்சம் பேருக்கு சராசரி பரிசோதனை எண்ணிக்கை தேசிய அளவில் 1325. ஆனால் கேரளாவின் சராசரி 4569. கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகமாக கேரளா பரிசோதனைகளை செய்கிறது.
அதுமட்டுமல்ல. இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். கேரளாவில் அதிகமான பரிசோதனைகளை செய்வது மட்டுமல்ல; அது சரியான இலக்குகளை நோக்கியும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதாவது தொற்று எங்கு அதிகமாக உருவாக வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
மேலும் ஒருவருக்கு தொற்று உருவாக்கியிருந்தால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவேதான் கேரளாவில் தொற்று எண்ணிக்கை வெளிப்படுகிறது என நான் கருதுகிறேன். இந்த தொற்றை எதிர்த்து போராடுவதில் மிக முக்கியமான தேவை என்னவென்றால் அதிகமான பரிசோதனைகளும் அதுகுறித்த தரவுகள் உருவாக்கப்படுவதும்தான்! கேரளாவில் அந்தப் பணி அறிவியல் அடிப்படையில் மிகச் சிறந்த முறையில் நடக்கிறது என்பது எனது கருத்து. ஆகவே
* கேரளா அதிகமாக பரிசோதனைகளை நடத்துகிறது!
* சரியான இலக்குகளில் நடத்துகிறது!
* தொற்று பாதிக்கப்பட்டவர்களை சிறந்த முறையில் கண்டுபிடிக்கிறது!
************
கரண் தாப்பர்: கேரளாவின் பரிசோதனை முயற்சிகள் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபடுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்களா?
ககன்தீப் கங்: பரிசோதனை எண்ணிக்கைகள் பற்றிய விவரங்கள் சரியான முறையில் உருவாக்குவது என்பது மிக அவசியம். தொற்று விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது நல்லது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. எனவே பல இடங்களில் பரிசோதனை எண்ணிக்கையும் பரிசோதனை நடத்தப்படுகின்ற இடங்களையும் மாற்றி அமைத்து 5ரூ என்ற இலக்கை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. இது சரியான அணுகுமுறை அல்ல!
கேரளாவில் எல்லாமே சிறந்த முறையில் நடக்கிறது என்று நான் கூறவில்லை. அங்கும் சில முக்கிய தவறுகள் நடந்துள்ளன. உதாரணத்துக்கு பக்ரீத் பண்டிகையின் பொழுது ஊரடங்கு விதிகளை முற்றிலுமாக தளர்த்தியது தவறு. அதேபோல தேர்தல் பேரணிகள் நடத்தப்பட்ட முறையும் தவறு.
அதே சமயத்தில் தொற்று பரிசோதனைகளைப் பொறுத்தவரை கேரளா சிறந்த முறையில் செயல்படுகிறது. நீங்கள் தொற்றை தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பாதிக்கப்பட்டவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு போவதை தடுத்துவிடலாம். இதனால்தான் கேரளா சுகாதார கட்டமைப்பு நெருக்கடியில் சிக்காமல் உள்ளது. தென் மாநிலங்கள் குறிப்பாக கேரளாவும் தமிழ் நாடும் இதில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன என்பது எனது மதிப்பீடு.
************
கரண் தாப்பர்: கேரளாவில் R எனப்படும் தொற்று பரவல் விகிதம் 1. 2 என மதிப்பிடப்பட்டுள்ளது. R மதிப்பு ஒன்றுக்கு மேல் சென்றால் ஆபத்தானது அல்லவா? அப்படியெனில் கேரளா அந்த ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளதா?
ககன்தீப் கங்: R மதிப்பு ஒன்றுக்கு மேல் சென்றால் அது கவலைப்பட வேண்டிய ஒன்று. தொற்று எண்ணிக்கை உயரும் ஆபத்து உள்ளது என்று பொருள். எனவே தொற்றை தடுப்பதற்கு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். கேரளா அத்தகைய ஒரு சூழலில் உள்ளது என்று நான் கருதுகிறேன்.
உடனடியாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு மக்களுடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்தை குறைக்க வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். தேவை எனில் சில தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
இந்த சமயத்தில் R மதிப்பு உயர்வது ஆபத்தானது. எனவே கேரளா உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
************
கரண் தாப்பர்: கேரளாவில் தொற்று அதிகரித்து கொண்டிருப்பதால் அங்கே கோவிட் வைரசின் புதிய உருமாறி உருவாகும் ஆபத்து உள்ளதா?
ககன்தீப் கங்: நிச்சயமாக. கேரளா என்று இல்லை. வேறு எந்த இடமாக இருந்தாலும் தொற்று தொடர்ந்து குறையாமல் இருந்தாலோ அல்லது அதிகரித்துக்கொண்டிருந்தாலோ அங்கே புதிய உருமாறி உருவாகும் ஆபத்து உள்ளது. அந்த உருமாறி மிகவும் ஆபத்தானதாக கூட இருக்கலாம்.
எனினும் நான் ஒரு முக்கியமான ஒரு அம்சத்தை குறிப்பிட விரும்புகிறேன். GENOME SEQUENCING (மரபணு வரிசைப்படுத்தல்) எனப்படும் வைரஸ் பற்றிய ஆய்வை கேரளா வேறு எந்த மாநிலத்தைவிடவும் மிகவும் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. எங்களது அமைப்பில் உள்ள முக்கிய விஞ்ஞானி கேரளா அரசாங்கத்துடன் இணைந்து அந்த கண்காணிப்பு ஆய்வு பணியை செய்து கொண்டிருக்கிறார். மேலும் கேரளா மட்டும் தான் இந்தியாவிலேயே வைரசை ஆய்வு செய்யும் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை நிர்மாணித்துள்ளது.
************
கரண் தாப்பர்: உங்களுடைய கூற்றுப்படி தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்தாலும் கேரளா முன்கூட்டியே உருமாறிப் பற்றிய ஆய்வை மத்திய அமைப்பு விஞ்ஞானியுடன் இணைந்து செய்து வருவதாலும் தனியாக ஒரு ஆராய்ச்சி அமைப்பை கேரளா வைத்திருப்பதாலும் புதிய உருமாறி பற்றிய ஆபத்தை கண்டுபிடிக்கும் இடத்தில் கேரளா உள்ளது என்று புரிந்து கொள்ளலாமா?
ககன்தீப் கங்: இதுவரை கேரளா சிறந்த முறையில் செயல்பட்டுள்ளது. இனியும் அப்படியே சிறந்த முறையில் செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
************
கரண் தாப்பர்: கேரளா பற்றிய இன்னொரு முக்கியமான அம்சமும் சரியாக கவனிக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன். தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் மருத்துவமனையில் படுக்கைகள் பாதிக்கும் குறைவாகவே நிரம்பியுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவிலும் அதேபோல வென்டிலேட்டர் எனப்படும் சுவாசக் கருவிகள் தேவையும் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. எனவே கேரளாவின் சுகாதார கட்டமைப்பு இந்த தருணம் வரை நெருக்கடியை சந்திக்காமல் உள்ளது என எடுத்துக்கொள்ளலாமா?
ககன்தீப் கங்: கேரளாவில் உள்ள மருத்துவர்களிடம் பேசினால் அவர்களுக்கு தொற்று உயர்வு காரணமாக கூடுதல் சுமை உருவாகியுள்ளது என்பது தெரிகிறது. அதே சமயத்தில் இந்த அளவுக்கு தொற்று உருவானால் ஏனைய இடங்களில் மருத்துவ கட்டமைப்புகள் சிதைந்து போகும் ஆபத்து உருவாகியிருக்கும். அத்தகைய நிலை கேரளாவில் இல்லை. இந்த சுமையையும் சந்திக்கும் திறமையும் நம்பிக்கையும் கேரளாவின் மருத்துவ கட்டமைப்புக்கும் மருத்துவர்களுக்கும் உள்ளது என்பதுதான் தற்போதைய நிலை.
இத்துடன் நான் கூடுதலாக சொல்லவேண்டிய ஒரு முக்கிய அம்சம் உண்டு. கேரளாவில் மரண விகிதம் என்பது மிக மிக குறைவு. தேசிய சராசரியை எடுத்துக்கொண்டாலும் சரி அல்லது வேறு எந்த மாநிலத்தின் சராசரியை எடுத்துக்கொண்டாலும் சரி கேரளா உயிரிழப்பு என்பது மிக மிக குறைவு.
************
கரண் தாப்பர்: நீங்கள் சொல்வது உண்மைதான். கேரளாவின் உயிரிழப்பு விகிதம் 0.5%தான். ஆனால் தேசிய சராசரி 1.3%. கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். ஆகவே இந்த அம்சத்திலும் கேரளா சிறந்து விளங்குகிறது என கூறலாம்.
ககன்தீப் கங்: இந்த புள்ளி விவரம் குறித்து நாம் இன்னும் சில தரவுகள் பெற வேண்டியுள்ளது. பல மாநிலங்களில் தொற்று/உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டபப்பட்டுள்ளன.
கேரளா சிறப்பாக முறையில் செயல்பட்டுள்ளது. இந்தியாவின் தொற்று பிரச்சனைக்கு கேரளா கவலைபடும் அளவுக்கு ஒன்றுமில்லை. எனினும் கேரளா மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தருணம் இது! சிறு தவறு கூட பெரும் ஆபத்தை உருவாக்கிவிடும்.
************
கரண் தாப்பர்: கேரளாவில் தொற்று எண்ணிக்கை உயர்வதை மட்டுமே பார்ப்பவர்களுக்கு கோவிட் வைரசை எதிர்கொள்வதில் கேரளா சறுக்கிவிட்டது என்ற எண்ணம் உருவாகலாம். ஆனால் தொற்று எண்ணிக்கை மட்டுமல்ல, மற்ற முக்கியமான அம்சங்களையும் கவனிக்க வேண்டும். அனைத்து அம்சங்களையும் ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்தால் கேரளா சிறப்பாக தொற்றை எதிர்கொண்டு வருகிறது என எடுத்துக்கொள்ளலாமா?
ககன்தீப் கங்: ஆம்! நிச்சயமாக!
* கேரளா சிறந்த முறையில் கோவிட் பரிசோதனைகளை செய்கிறது!
* சிறந்த முறையில் தொற்று தொடர்பு உள்ளவர்களை கண்டுபிடிக்கிறது!
* சிறந்த முறையில் தடுப்பூசிகளை அதிகமாக செலுத்தி உள்ளது!
* கேரளாவின் சுகாதார அமைப்பு இதுவரை நெருக்கடிக்கு உள்ளாகாமல் தொற்றை சந்தித்து வருகிறது!
அதே சமயத்தில் கேரளா மிக மிக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய தருணம் இது. தொற்று பரவல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல;அது குறைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சுருக்கமாக சொன்னால் கேரளா இந்தியா முழுமைக்கும் கவலை தரும் இடத்தில் இல்லை; மாறாக இந்தியா முழுமைக்கும் ஒரு மாடலாக முன்மாதிரியாக உள்ளது.