கோவிட் தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் உலகின் பல்வேறு நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. உலகெங்கும் இதுவரை 15 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும், தொற்று முற்றாக எப்போதுகட்டுப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. தடுப்பூசி தயாரிப்பிலும், அவற்றை சந்தைப்படுத்துவதிலும் நிறுவனங்களிடையே போட்டா போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உயிர் பிழைப்போமோ எனும் பயத்தில் உலகமே அல்லாடிக் கொண்டிருந்தாலும் கூட தத்தம் கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை விட்டுத்தர உற்பத்தி நிறுவனங்களோ, கட்டாய உரிமம் எனும் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கங்களோ தயாராக இல்லை. ஏனெனில் இவையனைத்திற்கும் பின்புலமாக இருப்பது முதலாளித்துவத்தின் சந்தைசார் கொள்கைகளே. பொருளாதார பெருமந்தத்திலிருந்து விடுபட முடியாமல் தோற்றுப்போன நவதாராளவாதம் இம்முறை பெருந்தொற்றிலும் மீண்டும் தோல்வியையே சந்தித்திருக்கிறது.
முதலாளித்துவப் பொருளாதாரத்தை தூக்கிப் பிடிக்கும் இந்தியாவும் இதிலிருந்து தப்பமுடியாமல் தத்தளிக்கிறது. இந்திய ஒன்றிய அரசு தனது தடுப்பூசி கொள்கையை மாற்றிக் கொண்டு விட்டதாகவும், இனிஅனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாகவே வழங்கப்படுமெனவும் பிரதமர் மோடி அண்மையில் அறிவித்திருக்கிறார். உலகில் இதுவே மிகப்பெரிய இலவச தடுப்பூசிதிட்டமெனவும், எனவே இதற்கு நன்றி தெரிவித்து பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி வளாகங்களிலும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் உயிரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் யாவும் உண்மையாக இருக்கும் பட்சத்தில்அரசு கேட்காமலேயே மக்கள் வரவேற்று மகிழ்வார்கள். அதில் மக்களுக்கு தயக்கம் ஏதும் இருக்கப்போவதில்லை. ஆனால் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதுமே பெரும் இடைவெளி இருந்து கொண்டேயிருக்கிறது என்பதிலிருந்து தான் இப்பிரச்சனையையும் பார்க்க வேண்டியுள்ளது.
மோடியும் திருக்குறளும்
அண்மைக்காலமாக தனது உரைகளின் போது மோடி திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். புதிய தடுப்பூசி கொள்கை குறித்த அறிவிப்பின் போதும் கூட “நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் குறளின் படி, நோய்க்கான காரணத்தை கண்டறிவதோடு, அதனை நீக்குவதற்கான மருந்துகளையும் அளிக்க வேண்டுமென்பதை புரிந்து அரசு செயல்படுவதாக தெரிவித்திருக்கிறார். நல்லது. ஆனால் அதே சமயம்அவருக்கு தெரியாத மற்றொரு குறளையும் மோடிக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமும் உள்ளது.
“ உற்றான் அளவும், பிணி அளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்”
அதாவது, நோயின் தன்மையை புரிந்து கொள்வதோடு, நோய்க்கான சிகிச்சையையும் காலத்தே அளிப்பதேசிறந்தது என்பதே இக்குறளின் பொருளாகும். இந்த குறளைமோடி பின்பற்றத் தவறியதாலோ என்னவோ காலத்தே அளிக்க வேண்டிய தடுப்பூசியை மக்களுக்கு தவணை முறையில் அளித்துக் கொண்டிருக்கிறார் போலும். கடந்த ஜனவரியில் துவங்கிய தடுப்பூசி திட்டம் ஆறு மாதங்கள் முடியும் நிலையிலும் கூட ஐந்தில் ஒருவருக்கே முதல் தடுப்பூசி, முப்பது பேரில் ஒருவருக்கே இரண்டாம் தடுப்பூசி என தள்ளாடிக் கொண்டிருக்கிறது. விரைவான தேவையை கருத்தில் கொண்டு பொதுத்துறைகளில் தடுப்பூசிஉற்பத்தியை துவக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தாலும் அதை அவர் கண்டு கொள்வதாகவும் தெரியவில்லை.
வார்த்தைகளால் வலி தீருமா..?
இந்தியா விடுதலை அடைந்த பிறகு மருத்துவத் தேவைகள் மற்றும் பொது சுகாதாரத்துறையின் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை குறித்த தேவைகளை கண்டறிந்துஅரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட முதல்கமிட்டியான “போரே கமிட்டி” ஒரு முக்கியமான பரிந்துரையை அரசுக்கு அளித்தது. மருத்துவக் கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ள இந்திய சமூகத்தில் மக்களுக்கான மருத்துவ உதவிகள் அளிப்பதையும், பொது சுகாதார மேம்பாட்டையும் அரசு தன் பொறுப்பிலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் பரிந்துரையை அளித்ததோடு, சுகாதாரத் துறைக்கென ஒன்றிய அரசு 5 சதவீத நிதியும், மாநில அரசுகள் 15 சதவீத நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியது. அந்த பரிந்துரை இன்றளவும் அமலாக்கப்படாமலேயே இருக்கிறது.
அதற்கு பிறகு அமைக்கப்பட்ட சத்தா கமிட்டி, முகர்ஜி கமிட்டி, கர்தார் சிங் கமிட்டி, சீனிவாஸ்தவா கமிட்டி, பஜாஜ் கமிட்டி என பல்வேறு கமிட்டிகளும் அவ்வப்போது பல பரிந்துரைகளை அளித்தும் வந்தன. அதே போல ஒன்றிய திட்டக் கமிஷனும் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தில் பல்வேறு திட்டங்களையும் பரிந்துரைத்தது. இத்தகைய பரிந்துரைகளில் பல அம்சங்கள் செயல்வடிவம் பெற்றுமருத்துவக் கட்டமைப்புகள் வலுவாக்கப்பட்டன. உதாரணமாக ஏழாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மட்டும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 23,458 ஆகவும்,சுகாதார துணை நிலையங்களின் எண்ணிக்கை 1,46,036ஆகவும் அதிகரிக்கப்பட்டன என்பதிலிருந்து சுகாதார கட்டமைப்புகளின் வளர்ச்சி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வரைக்கும் எவ்வாறாக இருந்தது என புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாகத் துவங்கிய காலத்தில் இருந்து, அரசாங்கங்கள் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தில் தமது பொறுப்புகளை சுருக்கிக் கொண்டதோடு, தனியாரையும் ஊக்குவிக்க துவங்கின. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவாளரான மோடியோ இன்னமும் ஒருபடி மேலே சென்று பெருமளவில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை மருத்துவத்துறையிலும் ஊக்குவித்து வருகிறார். ஒட்டு மொத்த இந்தியமக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் அனைத்தையும் இரண்டே இரண்டு தனியார் நிறுவங்களில் தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கி விட்டு, பொதுத்துறைகளை புறக்கணிப்பதிலிருந்தே மோடியின் தனியார் பாசத்தை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு புறத்தில் தங்கள் மருத்துவத் தேவைகளுக்காக தனியாரை நோக்கி மக்களை தள்ளிவிடும் கொள்கைகளை அமலாக்கிக் கொண்டே, மறுபுறத்தில் கோவிட் 19 பிரச்சனையில் வெறும் வாய்ப்பந்தல் மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இந்நிலையில் அவரோ அல்லது அமைச்சரவை சகாக்களோ, அல்லது சுகாதாரத்துறை அதிகாரிகளோ என்னதான் வளைத்து வளைத்து பேசினாலும் வார்த்தைகளால் வலிகள் தீர்ந்து விடுமா என்ன? ஒரு போதும் அது தீரப்போவதில்லை என்பதே அனுபவங்கள் காட்டுகிற கசப்பான உண்மைகளாக கண்முன்னே வந்து நிற்கிறது.
மார்க்ஸ் சொன்னதும்நடைமுறை உண்மையும்
இன்றைய நிலையில் மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்தின் பெரும்பகுதி தனியார் மயமாக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் நவதாராளவாதக் கொள்கைகளால் தனியார் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சி என்பது 400சதவீதம் எனும் அளவை காட்டிலும் கூடுதலாக உயர்ந்திருப்பதன் தொடர்ச்சியாக மூர்க்கத்தனமான நடவடிக்கைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நோய்த்தொற்று தாக்கப்பட்ட மக்களிடம் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதும், சிகிச்சை பலனின்றி ஒருவேளை நோயாளி இறந்து போனால், கட்டணப் பாக்கிகளை கட்டாமல் இறந்தவர்களின் உடல்களை தர மறுப்பதும், ஒரு சில இடங்களில் நோயாளி இறந்து போன தகவலைக் கூட மறைத்து விட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக காட்டிக் கொள்வதுமான சம்பவங்கள் அன்றாடச்செய்திகளாக மாறுகின்றன. மருத்துவத்தை ஒரு சேவைத்துறையாக கருதாமல் நவீன தொழிற்துறையாக கருதுகிற அரசாங்கத்தின் நவதாராளவாதக் கொள்கையின் ஊனமேஇத்தகைய அவலங்களுக்கான மூல காரணமாகும்.
ஒரு பெருந்தொற்று காலத்தில் துயரத்தில் தவிக்கும் மக்களை அரசு தனது பொறுப்பில் நின்று பாதுகாக்க தவறுவதும், தனியாரை நோக்கி தள்ளிவிடுவதும் பெருந்தொற்றை விட பெருந்துயரமான செயல் ஆகும். மூலதனத்தின் தன்மை குறித்தும், லாபத்திற்கான அதன் முனைப்புகுறித்தும் மாமேதை மார்க்ஸ் துல்லியமாக விவரித்திருப்பார்.“மூலதனம் தனக்கு 10 சதவீதம் லாபம் கிடைக்குமெனில் எல்லா இடத்திற்கும் போகும். 20 சதவீதம் கிடைக்குமெனில் அதன் ஆவல் பல்வேறு வகைகளில் தூண்டப்படும்.50 சதவீதம் கிடைக்குமெனில் போக்கிரித்தனத்தில் ஈடுபடும். 100 சதவீதம் லாபம் கிடைத்தால் எவ்வித கூச்சமுமின்றி அனைத்து குற்றங்களையும் செய்யும். அதுவே லாபத்தின் அளவு 300 சதவீதம் ஆக உயர்ந்தால் மூலதனம்தனது உடைமையாளரைக் கூட துக்கிலிடத் தயங்காது” எனும் அவரது கூற்று, தற்போது கொரோனா தொற்றுக் காலத்தில் நடைமுறை உண்மைகளாக மாறியிருக்கிறது.
மாற்றும் ஏமாற்றும்
பொருளாதார ரீதியிலும், தொழில்நுட்பத்திலும் பெரும்வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்கா கோவிட் பெருந்தொற்றால் பெரும் உயிரிழப்பை சந்தித்திருக்கிறது. பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளிலும் இழப்பின் அளவு பெரிதாகத்தான் இருக்கிறது. மறுபுறத்தில் ஒரு சில நாடுகள்மிக எளிதாக இப்பிரச்சனைகளை சமாளித்து மீண்டு வந்திருக்கின்றன. குறிப்பாக சின்னஞ்சிறு நாடான கியூபாவோ,மிகப்பெரிய நாடான சீனாவோ நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சிறந்த முன்னுதாரணங்களை படைத்திருக்கின்றன. நூறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியதின் மூலமாக சீனாவும், அடுத்தடுத்து மூன்று தடுப்பூசிகளை தங்கள் நாட்டு மக்களுக்குசெலுத்தும் முயற்சியின் மூலம் கியூபாவும் வெற்றி பெற்றுள்ளன. வியட்நாம், வடகொரியா உள்ளிட்ட சோஷலிச நாடுகளின் அனுபவங்களும், அணுகுமுறைகளும் அவர்கள் கோவிட்டை எதிர்கொள்ள உதவியிருக்கின்றன. நாடுகளின்வெற்றி தோல்வி என்பதை கடந்து, அனைத்தையுமே சந்தையின் விற்பனைச் சரக்காக பாவிக்கும் முதலாளித்துவக் கொள்கைகள் இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியடைந்திருக்கிறது.
ஆனால் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பொதுவான சமூகத்திற்கு பயன்பட வேண்டுமென்ற சோஷலிச கொள்கைகள் இப்பிரச்சனையில்வெற்றி பெற முடிந்திருக்கிறது எனும் பேருண்மையைகொரோனா தொற்று உலகிற்கு எடுத்துக்காட்டியிருக்கிறது. அடிப்படை கொள்கைகளில் மாற்றமென்பதே தற்போதைய தேவை. அதைவிடுத்து வார்த்தைகளை மேலோட்டமாக அடுக்குவதென்பது மாற்றல்ல, அதுவொரு ஏமாற்று.
கட்டுரையாளர் : ஆர்.பத்ரி