articles

img

கலப்படமற்ற பொய்கள் - பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

கலப்படமற்ற பொய்கள்

பிப்ரவரி 1, 2026 அன்று ஒன்றிய நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். ஏழை கள் மீது முழு கவனம் செலுத்துவதாகவும், வளர்ச்சி யின் பயன் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்வதாகவும் அவர்  கூறினார். இவ்விரு கூற்றுகளும் கலப்படமற்ற பொய்கள். இந்த நிதிநிலை அறிக்கையில், விவ சாயிகளுக்கும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக, அறிக்கைக்கு முந்தைய மாதங்களில் கூட, அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்துள்ளது.  

விவசாயிகள் - தொழிலாளர் நலன் புறக்கணிப்பு

 எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் பரிந்து ரைத்த குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க  ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. வேளாண் துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் விதமான மசோதாக்கள் கொண்டு வரப்படுகின்றன. 2022-23 மற்றும் 23-24 ஆகிய இரு நிதி ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் 25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கொள்ளை லாபம் ஈட்டும் இந்நிறுவனங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் கடன் ரத்து செய்த அரசு, விவசாயிகளுக்கு கடன் ரத்து செய்ய மறுக்கிறது. தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் கிடைத்துவந்த வேலை உத்தரவாதமும் மறுக்கப்பட்டு, விவசாயிகளும் ஊரகத் தொழிலாளிகளும் போராட்டக் களத்தில் உள்ளனர். தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மூலம், பல ஆண்டுகால போராட்டங்களால் பெற்ற உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து  நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் வெடித்துள்ளன. பன்னாட்டு நெருக்கடி, வேலையின்மை மற்றும் வாழ்வாதார நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொள்ள இந்த நிதிநிலை அறிக்கை எந்த வகையிலும் உதவாது.

வளர்ச்சிக்கு ஊக்கம் இல்லை

2025-26 இல் ஒன்றிய அரசின் மொத்த செலவு (திருத்தப்பட்ட மதிப்பீடு) ரூ. 49.65 லட்சம் கோடி. 2026-27க்கு ரூ. 53.4 லட்சம் கோடி செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. இது வெறும் 6-7% அதிகரிப்பே ஆகும். விலைவாசி உயர்வைக் கணக்கிட்டால் இது உண்மையில் தேக்கநிலையே. ஜிடிபி 8%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சூழலில், தேசிய வருமானத்தின் விகிதமாக அரசின் ஒதுக்கீடு பெரிதும் குறைந்துள்ளது. இதன் விளைவாக, வேலையின்மையும் வறுமையும் வரும் ஆண்டிலும் தொடரும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

செல்வந்தர்களைப்  பாதுகாக்கும் பட்ஜெட்

2014 முதல் பாஜக அரசு சமர்ப்பிக்கும் அனைத்து பட்ஜெட்டுகளும் பெருமுதலாளி களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வரிச்சலுகைகளை வாரி வழங்கியுள்ளன. 2019-20 நிதியாண்டில் முதலாளிகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு உயர் வருமானம் பெறுவோரின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு ரூ. 1 லட்சம் கோடி வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டது. 2025-26 இல், கார்ப்பரேட் வரியை விட தனிநபர் வருமான வரியே அதிகமாகக் கிடைத்துள்ளது. உழைப்பாளிகளின் உழைப்பால் கொழுக்கும் நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அளிக்கும் பங்கு குறைந்து கொண்டே செல்கிறது. இந்த இழப்பை ஜிஎஸ்டி மூலம் ஏழை மத்தியதர மக்களைத் தாக்கி ஈடுகட்ட அரசு முயல்கிறது. வேலையின்மையும் கொடிய வறுமையும் அதிகரித்ததற்கு ஒன்றிய அரசே பொறுப்பு. பன்னாட்டு அரங்கில் ஏகாதிபத்தியம் நெருக்கடியில் உள்ளது. அதன் சுமைகளை வளரும் நாடுகள் மீது திணிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்திய அரசு ஏகாதி பத்தியத்தை எதிர்க்கத் தவறி, பல அரங்குகளில் அதனுடன் கைகோர்க்கும் அவலம் நிகழ்கிறது.  பாஜக அரசின் தீவிர தாராளமயக் கொள்கை களும், ஏகாதிபத்தியத்தின் மீதான மென்மை யான அணுகுமுறையுமே இதற்குக் காரணம். 2026-27 பட்ஜெட்டும் இதையொட்டியே அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்குப் புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ‘தொழில் நடத்துவதை எளிதாக்குவது’ என்ற மந்திரத்தின் ஒரு பக்கம் இச்சலுகைகள் என்றால், மறுபக்கம் உழைக்கும் மக்களின் உரிமைகள் அழிக்கப்படுகின்றன. விவசாயிகள் மூன்று கருப்புச் சட்டங்களைத் தோற்கடித்த வரலாறு மறக்கப்பட்டு, வேளாண் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைப் புகுத்த இந்த பட்ஜெட்டும் ஒரு கருவியாகிறது.

தாராளமயத்தின் அறுவடை

பாஜக அரசின் அதிதீவிர தாராளமயம் பல அம்சங்களில் வெளிப்படுகிறது. நடப்பு ஆண்டில் அரசின் ‘நடப்பு வருவாயில்’ ஒரு கணிசமான பகுதி, எடுத்த கடன்களுக்கான வட்டியாகவே செலவாகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் ரூ. 12.75 லட்சம் கோடி வட்டியாகச் செலவாகிறது. செல்வந்தர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் வரி விதிப்பதற்குப் பதிலாக, இந்தப் பாதையில் தாராள மயம் பயணிக்கிறது. உரம், உணவு, எரிபொருள் மானியங்களின் மொத்த மதிப்பு ரூ. 4.7 லட்சம் கோடிதான். ஆனால், செல்வந்தர்களுக்கு வட்டி யாக வழங்கப்படும் தொகை இதைப் போல் மூன்று மடங்கு. இதுதான் தாராளமயம்: “உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறி! விவசாயிகளின் வயிற்றில் அடி! நலத்திட்டங்களை வெட்டு!”

நிதிநிலை அறிக்கையும் நலத்திட்ட ஒதுக்கீடுகளும்

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் நலத்திட்ட ஒதுக்கீடுகள் பின்னர் குறைக்கப்படுவது வழக்கம். சில உதாரணங்கள்:    துறை                            2025-26           2025-26                           (மதிப்பீடு)     (திருத்தப்பட்ட மதிப்பீடு) கல்வி    1,28,650    1,21,949 ஊரக வளர்ச்சி     2,65,817     2,12,750 அறிவியல் துறைகள்     55,679     37,014 சமூக நலம்     60,052     50,053 நகர்ப்புற வளர்ச்சி     96,777     57,204 மாநிலங்களுக்கான நிதி     5,55,100     4,98,159 பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம்     10,831     526 நலத்திட்ட ஒதுக்கீடுகளே குறைவு. அவை கூட முழுமையாக அமலாக்கப்படுவதில்லை. பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் நிலைமை இதற்குச் சான்று.

இறுதியாக...

பாஜக அரசு, அதிதீவிர தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றும் அரசு. இன்றைய சிக்கலான பன்னாட்டுச் சூழலை எதிர்கொள்ளத் துணிவின்றி, ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மறுத்து, தாராளமயப் பாதையிலேயே இந்த நிதிநிலை அறிக்கையும் தொடர்கிறது. பொருளாதார ஆய்வறிக்கையில் சுயசார்பு பேசப்பட்டாலும், நிதிநிலை அறிக்கையில் அதற்கு இடமில்லை.