அசாம்: இந்திய மாநிலமா? இந்து ராஷ்டிரமா?
அசாம் மாநிலம் இந்தியாவில் தான் இருக்கிறதா? இந்தக் கேள்வி விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், அந்த மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு காணொலி, இக்கேள்வியை நம்முன் எழுப்பியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, சிறுபான்மை முஸ்லிம் மக்களைக் குறிவைத்துத் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஒரு காணொலியைத் தனது சமூக வலைதளத்தில் ‘கம்பீரமாக’ப் பதிவிட்டுள்ளார். ஒரு முதல்வர் இப்படிச் செய்யலாமா என்ற ஆச்சரியம் நமக்குத் தேவை யில்லை. ஏனெனில், அவர் பாஜகவின் பிரதிநிதி. வெறுப்புப் பேச்சுகளையும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்மத்தையும் பரப்புவதையே அவர் தனது அரசியல் அடையாளமாகக் கொண்டுள்ளார்.
அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்
“பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்ற வள்ளலாரின் வரிகளை மெய்ப்பிப்பது போல, மதவெறி எனும் பேய் அசாமை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்ற ஒரு முதலமைச்சரே, அதே சாசனத்தைக் காலில் போட்டு மிதிப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும். மக்களாட்சி தத்துவத்தைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்கள் சில சமயங்களில் கேட்டும் கேளாததுபோல் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்திலும் கூட இத்தகைய போக்கை நாம் கண்டிருக்கிறோம்.
இடதுசாரிகளின் சட்டப் போராட்டம்
இந்த அநீதியைத் தட்டிக்கேட்க வேறு எந்தக் கட்சிகளும் முன்வராத சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டியுள்ளன. சிபிஎம் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆனி ராஜா ஆகியோர் அசாம் முதல்வர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். மூத்த வழக்கறிஞர் நிஜாம் பாஷா முன்னெடுக்கும் இந்த வழக்கில், அசாம் முதல்வரின் கிரிமினல் நடவடிக்கைகள் எவ்வாறு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பது ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை வைத்துக்கொண்டு, தன் மீதான புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதியவிடாமல் தடுத்து வரும் முதல்வரின் அதிகார துஷ்பிரயோகம் இதில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் மன்றத்தில் எழுந்த கண்டனம்
நீதிமன்றத்தில் மட்டுமல்லாது, மக்கள் மன்றத்திலும் இதற்கான எதிர்ப்பு வலுத்துள்ளது. தில்லி ஜந்தர் மந்தரில் சிபிஎம் தில்லி மாநிலக்குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிருந்தா காரத், “இது முஸ்லிம் மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் சாசனத்தையே தீயிட்டுக் கொளுத்துவதற்குச் சமம்” என்று எச்சரித்துள்ளார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு, அசாம் முதல்வர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “இந்து ராஷ்டிரம் என்பது உண்மையாகிவிட்டால், அது இந்த நாட்டிற்கு ஏற்படும் மிகப்பெரிய பேரழிவாக அமையும்” என்று அண்ணல் அம்பேத்கர் அன்று எச்சரித்தது, இன்று அசாமில் நிஜமாகி வருவதை நாம் காண்கிறோம்.
தமிழகத்திற்கான எச்சரிக்கை
“அசாமில் நடப்பதால் நமக்கு என்ன?” என்று நாம் கடந்து போய்விட முடியாது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் இயக்கப்படும் பாஜக, எந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் அங்கு இதுபோன்ற ‘சர்மாக்கள்’ தான் உருவாவார்கள். ‘இரட்டை என்ஜின்’ அரசு பற்றிப் பேசும் மோடியும் அமித்ஷாவும், முதலில் அசாமில் ஒரு ஜனநாயக ஆட்சியை நடத்திவிட்டுத் தமிழகத்திற்குள் வரட்டும். அதேவேளையில், ‘திருக்குறளை எழுதியவர் சேக்கிழார்’ என்று மேடையில் உளறிய எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, அசாம் என்ற மாநிலம் இந்தியாவில் இருப்பது தெரியுமா என்பதே சந்தேகம்தான். அடிமை அரசியலில் மூழ்கியிருக்கும் அதிமுக தொண்டர்கள், நாட்டைச் சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை உணர்ந்து விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. - கே. வசந்தன்