articles

img

மோகன் பகவத்துகள் உபதேசமும் மூண்டெழும் கோபாவேசமும் - அ.குமரேசன்

மோகன் பகவத்துகள் உபதேசமும்  மூண்டெழும் கோபாவேசமும்

“இந்துக்களே, குடும்பத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் போதுமென்று முடிவெடுப்பீர்களானால், இஸ்லாமியர்க ளும் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாகி விடு வார்கள், நாம் சிறுபான்மையாகிவிடுவோம். ஆகவே, இந்துப் பெண்கள் அதிகமாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும்.” மூளைச்சலவை ஏற்பாடாக இப்படி  மத ஆதிக்கவாதத் தலைகள் அவ்வப்போது பேசுகின்றன. “ஒவ்வொரு இந்துப் பெண்ணும்  10 குழந்தைகளாவது பெற்றெடுக்க வேண்டும்,” என்று ஒருவர் குறைந்தபட்ச எண்ணிக் கையை நிர்ணயித்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இம்மாதம் 8ஆம் தேதி மும்பையில் நடந்த அதன் நூற்றாண்டு விழாவில், கொஞ்சம் கரு ணையோடு அந்த எண்ணிக்கையைக் குறைத்தார். “

அறிவியல் ஆராய்ச்சிகளின்படி ஒரு சமூகம் அழியாமல் இருக்க வேண்டுமானால் குடும்பங்களில் சராசரியாக மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும்” என்கிறார் அவர். சில பேர் தங்களுடைய அபத்த மான கருத்துகளை நிறுவுவதற்கு, “விஞ்ஞானிகளே சொல்லியிருக்கிறார்கள்,” என்று அடித்துவிடுவார்கள். எந்த விஞ்ஞானி, எந்த ஆராய்ச்சி என்று கேட்டால் பதுங்கிவிடுவார்கள். அப்படித்தான் சர்சங்சாலக் பேச்சும் வருகிறது.

ஒரு தலையங்கம்

இது தொடர்பாக, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு (பிப்ரவரி 10) “டோண்ட் கிட் யுவர்செல்வ்ஸ்” (உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்) என்ற  தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது. “பகவத்தோ மற்ற பிரமுகர்களோ விரும்புகிறார்கள் என்பதற்காக இந்தியர்கள் ஏன் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றால்” எனக் கேட்டு  அந்தத் தலையங்கம் முன்வைக்கிற சுவையான வாதம் முக்கியமானவை.  “ஜப்பான், தென்கொ ரியா, இத்தாலி, போலந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடு களில் எந்தக் காரணங்களால் இது நடக்கவில்லையோ, அதே காரணங்களால் இங்கேயும் நடக்காது,” என்கி றது அந்தத் தலையங்கம். அமெரிக்க அரசின் துணைத்  தலைவர் ஜே.டி. வான்ஸ், பெருந்தொழிலதிபர் எலான் மஸ்க் போன்றோர் பிறப்பு விகிதம் அதிகரிக்க வேண்டும் என்று கூறி வருவதையும், அந்நாட்டு மக்கள் அதை ஏற்காததையும் குறிப்பிட்டிருக்கிறது. “

குழந்தைகள் இருப்பது இனிமையானதுதான். ஆனால் அவர்களை வளர்ப்பது கடினமானது. அவர்க ளைப் பள்ளியில் சேர்த்தாக வேண்டும். இந்தியாவில் கல்விச் செலவு ஆண்டுக்கு சராசரியாக 11–12 சதவீதம்  அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கு ஈடாக அம்மாக்க ளின், அப்பாக்களின் வருமானம் அதிகரித்துவிட வில்லை. ஒரு குழந்தையானால் உங்களுக்கு வயதாவ தற்கு முன்பே தலைமுடி நரைக்க வைத்துவிடும், இரண்டு குழந்தைகளானால் நிதி இருப்பைச் சூறை யாடிவிடும். மூன்றாவது குழந்தையை யார் விரும்பு வார்கள்?” –இவ்வாறு கேட்டிருக்கிறார் தலையங்க ஆசிரியர்.

“அப்புறம், அவர்களின் தலைகளுக்கு மேல் கூரை இருக்க வேண்டும். இந்தியாவின் முன்னணி 10 நக ரங்களில் வீட்டு விலைகள் ஆண்டுக்கு 9 சதவீதம் அதி கரித்து வருகிறது. எல்லோரும் குடியேற விரும்பிடும் தில்லி நகரில் 24 சதவீதம் அதிகரித்திருக்கிறது. குடும் பத்தில் யாருக்காவது உடல் நலம் குன்றுமானால், மருத்துவச் செலவு10 முதல் 12 சதவீதம் வரை அதிகரித்தி ருப்பது வலுத்த குத்தாக விழுகிறது. எனவே, தம்பதி களின் கண்ணோட்டப்படி குழந்தைகள் ஒரு செலவு மிகுந்த ஆடம்பரம்தான்,” என்கிறது அந்த ஏடு. இன்றைய ஏஐ யுகத்தில் வேலைவாய்ப்புகள் வெகுவாகச் சுருங்கிக்கொண்டிருக்கும்போது,  ஒவ் வொரு குழந்தையும் பெண்ணின் தன்னாளுமைக்கு ஒரு தடைதான். ஏனென்றால் குழந்தைப் பேற்றின் உடல் சார்ந்தும் வேலை சார்ந்தும் விலை கொடுப்பது பெண்தான்.

 இதனைச் சுட்டிக்காட்டுகிற அந்தத் தலையங்கம், இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் பல நாடு களிலும் மக்கள்தொகை வீழ்ச்சி நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது என்று தெரிவிக்கிறது. அதை ஈடுகட்ட “தம்பதிகள் அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள  அறிவுறுத்துவது, ஒரு தொழிற்சாலையின் உலைக்குத் தேவையான எரிபொருளைத் தொழிலாளர்களே வாங்கிவர எதிர்பார்ப்பது போல இருக்கிறது. அது நியாயமுமல்ல, அது நடக்கவும் நடக்காது,” என்று  முடிகிறது.

மாறுபடும் நோக்கங்கள்

நிச்சயமாக, மேற்படி கனவான்கள் அதிகக் குழந்தைகள் பெறுமாறு சொற்பொழிந்து கொண்டி ருப்பதற்கு இதுவொரு நல்ல எதிர்வினைதான். ஆயினும், அவர்களுடைய பேச்சுகள், தலையங் கத்திற்கு அப்பால் செல்கின்றன. முதலில் குறிப்பி டப்பட்டுள்ள நாடுகளில் அரசாங்கங்களே கூடுதலா கக் குழந்தைகள் பெற ஊக்கமளிப்பது உண்மை. ஆனால், அவர்களின் நோக்கம் அந்தந்த நாடுகளின் மக்கள்தொகையை அதிகரிப்பதேயாகும் (அதுவே  கூட ஏற்கத்தக்கதுதானா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது). இந்தியாவில் இந்தக் கூட்டத்தினரின் நோக்கமோ,  இந்தியாவுக்கு உள்ளேயே இந்து மக்க ளின் எண்ணிக்கையைப் பலமடங்காக்குவதுதான்.

மதப்பற்று உள்ளவர்கள் தங்கள் மதத்தை வளர்க்க எண்ணுவதில் என்ன தவறு? ஒரு தவறு மில்லை. ஆனால், இவர்களுடைய இலக்கு, மதத்தை வளர்ப்பதல்ல, சிறுபான்மை மக்களுக்கு எதிரான பகைமையை வளர்ப்பதுதான். நல்லிணக்க மாண்பைச் சிதைத்து மதம் பிடிக்கச் செய்வதுதான். ஆகவேதான், இஸ்லாமும் கிறிஸ்தவமும் பெரும் பான்மையாகிவிடும், இந்துக்கள் சிறுபான்மையாகி விடுவார்கள் என்று நெருப்புக் கங்கில் சாம்பிராணி தூவுகிறார்கள்.

1951இல் முஸ்லிம் மக்கள்தொகை 9.8 சதவீதமாக இருந்தது, 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 14.2 சதவீதமானது உண்மைதான். ஆனால் இது ஆண்டுதோறும் அதிகரித்து வந்த  விகிதம் அல்ல. மாறாக, இந்தியா–பாகிஸ்தான் பிரி வினையின்போது ஏராளமானோர் பாகிஸ்தானுக்குச் சென்ற நிலையில் 1951 கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் மக்கள்தொகை குறைவாகப் பதிவானது. ஆனால் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் இயல்பு நிலை மீண்டதையொட்டி அவர்களின் மக்கள்தொகை கூடுதலாகப் பதிவானது.

உண்மை நிலைமைகள்

பொதுவாக மற்ற மதத்தினரை விட அவர்களது பிறப்பு விகிதம் சற்றுக் கூடுதலாக இருந்ததும் உண்மையே. அதன் பின்னணி மதத்தை வளர்க்கும் நோக்கமல்ல, கல்வியின்மை, வறுமை உள்ளிட்ட காரணங்களேயாகும். மேலும், முஸ்லிம் பிறப்பு விகிதம் 4.4 ஆக இருந்தது, தற்போது 2.3 ஆகச் சரிந்து விட்டது. அதற்குக் காரணம் கல்வியும் பொருளாதார வாய்ப்புகளுமே. இந்த விகிதம் வேகமாகக் கீழிறங்கி வருவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப் எச்எஸ்) அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களிலிருந்து  தெரிய வருகிறது. இந்துக்களின் பிறப்பு விகிதம் 1.9  கிறிஸ்தவர்களின் பிறப்பு விகிதம் 1.88.

ஆக, பிறப்பு விகிதத்தின்படி இஸ்லாமோ கிறிஸ்த வமோ சில நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட பெரும் பான்மை மதங்களாகப் பெருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று, மதம் சாராத ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

பெண்களின் குரல்

பிறப்பு விகிதங்களைத் தாண்டி, பெண்களின் உடல் நிலை, மகப்பேறு உரிமை, முடிவெடுக்கும் சுதந்தி ரம் ஆகியவற்றோடு தொடர்புள்ளதாக  இது இருக்கி றது. தலைக்குள் மதம் ஏறியவர்கள் தங்களுடைய வகுப்புவாத அரசியலுக்காகப் பாஞ்சாலிகளின் உட லையும் உணர்வையும் மறுபடி மறுபடி பகடைக்காய்க ளாக உருட்டுகிறார்கள். அதை நாகரிக சமுதாயம்  ஏற்க முடியுமா? “

உலகத்தில் பெண்கள் இன்று எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்தி  முன்னுக்கு வருகிறார்கள். ஆனால் இந்தக் கூட்டங்கள் மறுபடியும் பின்னுக்குத் தள்ளி, வீட்டோடு முடக்குவதற்கு முயல்கின்றன. மனிதப் பிறவியாகவே மதிக்காமல், போகப் பொரு ளாகவும் பிள்ளை பெறும் எந்திரமாகவும் கருதுகிறார் கள். அதற்காகப் பெரும்பான்மை, சிறுபான்மை என்று மத உணர்வைக் கிளறுகிறார்கள்,” என்று அந்தப் பெண்களின் குரலாக ஒலிக்கிறார் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் ராதிகா.  

“சாதிய, மதவாதத்தோடு பெண்ணை ஒடுக்கி வைப்பதும் இதற்குள் இருக்கிறது. பெண்களின் உடல்நிலை பற்றிய எந்த மனிதநேய அக்கறையும் இல்லை. போதுமான ஊட்டச்சத்து உள்ள பெண்கள் குறைவாகவும், ரத்த சோகை உள்ளவர்கள் அதிக மாகவும் உள்ள நாடுகளில் இந்தியா இடம் பிடித்தி ருக்கிறது. ஒவ்வொரு பிரசவமும் பெரும்பாலான பெண்களுக்கு ஒரு மறுவாழ்வுப் போராட்டம்தான். இந்த நிலைமையில், அறிவியலுக்குப் புறம்பாக இப்படிப் பேசுகிறார்கள். பெண்ணின் உடல் ஆரோக்கி யத்தையும், மன நலத்தையும் விட இவர்களுக்கு மக்கள் ஒற்றுமையைக் குலைப்பதே முக்கியமாக இருக்கிறது. அதனால்தான் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கச் சொல்கிறார்கள். இந்தப் பேச்சுக ளைத் தள்ளுபடி செய்கிறோம், எதிர்க்கிறோம்,” என்றும் ராதிகா கூறுகிறார்.

குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட குடும்பக் கடமை களை நிறைவேற்ற மறுக்கிறார்கள் என்று இந்தக் குரல்களைக் கூசாமல் கொச்சைப்படுத்துவார்கள் கலாச்சாரக் காவலர்கள். ஆனால், குழந்தைகளை மறுப்பதல்ல, எப்போது குழந்தை, எத்தனை குழந்தை என முடிவெடுக்கிற உரிமையை, சமூகச் செயல்பாடு களில் பங்கேற்கும் சுதந்திரத்தை வலியுறுத்துகிற பெண்களின் ஜனநாயக குரல்களே இவை. காதுகளை அடைத்துள்ள மதவெறிப் பஞ்சை அகற்றி னால்தான் இந்தக் குரல்கள் கேட்கும்.