வாக்குறுதியும் வஞ்சகமும்: ஜிஎஸ்டி குறைப்பின் உண்மை முகம்!
மதுரையில் அண்மையில் நடந்த விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி சீரமைப்பு மூலம் மக்களின் கைகளில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும்” என்று பெருமையாகக்கூறினார். ஆனால், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மக்கள் ஒரே குரலில் சொல்வது - “வரி குறைத்தாலும், எங்களுக்கு பலன் கிடைக்க வில்லை!” என்பது தான். பாஜக அரசின் வாக்குறுதிக்கும் உண்மை நிலைமைக்கும் இடையே உள்ள இந்த பெரும் இடைவெளிதான் அவர்களின் வஞ்சகத்தின் அடையாளம். எட்டு ஆண்டு கொள்ளை 2017-இல் ஜிஎஸ்டி அறிமுகமானபோது, மருந்து முதல் காலணி வரை அன்றாடத் தேவை களுக்கு கடுமையான வரிச்சுமை விதிக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக மக்கள் மருந்துகளுக்கு 12% வரியும், காலணிகளுக்கு 12% வரியும் செலுத்தி வந்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்ரமணியம் கணக்கிடு கிறார்: “ஒரு குடும்பம் மாதம் 500 ரூபாய் மருந்துக்கு செலவிட்டால், 8 ஆண்டுகளில் ரூ.5,760 அதிகமாக வரியாகச்செலுத்தியுள்ளது. 30 கோடி குடும்பங்கள் என்றால், மொத்தம் ரூ.1.73 லட்சம் கோடிக்கு மேல் கூடுதலாகச் செலுத்தி யுள்ளனர். இந்த பணம் திரும்பக் கிடைக்குமா? கிடைக்காது.” இப்போது 2025-இல், தேர்தல் நெருங்கி யதும் திடீர் வரி குறைப்பாம். இப்போதாவது குறைத்தார்கள் என்பது ஒரு புறம்; ஆனால், இது மக்கள் நலனா? அல்ல. அப்பட்டமான தேர்தல் ஆதாய அரசியல் நோக்கம் கொண்டதே! காகிதத்தில் மட்டும் குறைப்பு செப்டம்பர் 2025 முதல் மருந்து, காலணி, துணிகளுக்கு 12% இலிருந்து 5% ஆக வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், கள நிலையில் உண்மை வேறாக உள்ளது. சென்னை மருந்துகடை முருகன் சொல் கிறார்: “வரி குறைந்தது உண்மை. ஆனால் கம்பெனிகள் விலையைக் குறைக்கவில்லை. எம்ஆர்பி (MRP) அப்படியே இருப்பதால் மக்களுக்கு பயன் இல்லை.” செருப்புக் கடை செல்லப்பாண்டி புலம்பு கிறார்: “மொத்த விற்பனையாளர்கள் விலை யைக் குறைக்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள், நாங்கள் என்ன பதில் சொல்வது?” வரியைக் குறைத்துவிட்டதாக ஒன்றிய அரசு கோடிக்கணக்கில் விளம்பரம் செய்கிறது. ஆனால் வரிக் குறைப்பின் பலனை நிறுவனங் கள் லாப மாக எடுத்துக்கொள்கின்றன. ஒன்றிய அரசின் கண்காணிப்பு எங்கே என்ற கேள்வி எழுகிறது. தினக்கூலி தொழிலாளி கருப்பையா சொல்கிறார்: “என் மகனுக்கு சர்க்கரை நோய். மாதம் 800 ரூபாய் மருந்து. வரி குறைச்சிட்டாங் கன்னு சொல்றாங்க, ஆனா எனக்கு ஒரு ரூபாய் கூட குறையலை.” அங்கன்வாடி ஊழியர் பார்வதி: “செய்தியில் பார்த்து மகிழ்ச்சி. ஆனால், 500 ரூபாய் காலணி வரியுடன் இன்னும் 535 ரூபாய்தான். எங்கே குறைந்தது?” மளிகைக் கடை பழனிவேல் பொருமுகிறார்: “ஒவ்வொரு பொருளுக்கும் வேறு வேறு வரி. நினைவில் வைத்துக் கொள்வதே கஷ்டம். தவறு நடந்தால் பெனால்டி. வருமானம் குறைவு, சிரமம் அதிகம்.” “பசித்த பிள்ளைக்கு படம் காட்டினால் பசி தீருமா?” - இதுதான் பாஜக அரசின் வரி குறைப்பு நாடகம்! அன்றாடச் சுமை தொடர்கிறது தொலைபேசி, மின்சாரம், வங்கிச் சேவை களுக்கு 18% வரி தொடர்கிறது. சமையல் எண் ணெய், சர்க்கரை, பால், ஹோட்டல் உணவு - இவையெல்லாம் அத்தியாவசியம் அல்லவா? ஆனால், பாஜக அரசு இவற்றை ஆடம்பரமாக பார்க்கிறது. மேலும், சுங்கச்சாவடி கட்டணம் அதிகரித்து அனைத்துப் பொருட்களின் விலை யும் ஏறுகிறது. “ஒரு பக்கம் குறைக்கிறேன், மறு பக்கம் உயர்த்துகிறேன்” - இதுதான் வஞ்சகம். தமிழகத்தின் மீதான இரட்டை அடி ஜிஎஸ்டி அறிமுகத்தால் தமிழ்நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளது. விற்பனை வரி வருவாய் குறைந்துள்ளது. இழப்பீடு வாக்குறுதி முறையாக வழங்கப்படவில்லை. இந்நிலையிலும் தமிழக அரசு இலவச பேருந்து பயணம், மாத நிதியுதவி, இலவச எரிவாயு இணைப்பு என பல நலத்திட்டங்களை செயல் படுத்துகிறது. திருவள்ளூர் மீனாட்சி: “இலவச பஸ் மூலம் மாதம் 1000 ரூபாய் மிச்சம். குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் உதவி. இதெல்லாம் தமிழக அரசு செய்கிறது. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலம் தமிழகத்தின் வருமானத்தை பறித்துவிட்டு, பின் வரிக் குறைப்பு என்று பெருமை பேசுகிறது- இது நியாயமா?” என்ற அவரின் கேள்வி நியாயமானது! இதுதான் வஞ்சகம்: தமிழகத்தின் வருவாயை பறித்துக்கொண்டு, பின் சிறிது குறைத்துவிட்டு நன்மை செய்வதாக பாசாங்கு! “தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துவிட்டு, தண்ணீர் ஊற்றி ஹீரோவாகும்” நாடகம் இது. முகமூடி கிழிந்தது! நிர்மலா சீதாராமன் சொல்லும் ரூ.2 லட்சம் கோடி காகிதத்தில் மட்டுமே உள்ளது. வரி குறைப்பின் பலன் நிறுவனங்களின் லாபமாக மாறியுள்ளது, மக்களைச் சென்றடையவில்லை. சிறு வியாபாரிகளின் சிக்கல் தீரவில்லை. ஏழைகளுக்கு விடிவு இல்லை. அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக வரி தொடர்கிறது. பாஜக அரசு தேர்தல் நாடகம் நடத்துகிறது - இது உண்மையான நிவாரணம் அல்ல. இதுதான் பாஜக அரசின் முகமூடி!