articles

img

இந்திய ஜனநாயகம் மீதான கருத்தியல், கார்ப்பரேட் ஆதிக்கம் - நிலோத்பல் பாசு

இந்திய ஜனநாயகம் மீதான கருத்தியல், கார்ப்பரேட் ஆதிக்கம்

தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) என்பது இந்தியக் கல்வி அமைப்பில் ஒரு சாதாரண ‘சீர்திருத்தம்’ அல்ல; மாறாக, இது இந்தியச் சமூகத்தின் ஆழமான ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகளைத் தலைகீழாக மாற்றும் ஒரு சந்தைப் பொருளாதாரச் செயல்பாடு மற்றும் கருத்தியல் தாக்குதல் ஆகும். கோவிட்-19 பெருந்தொற்றால் நாடே மூடப் பட்டிருந்த அசாதாரணமான சூழ்நிலையில், எவ்வித மான விரிவான பொது விவாதமும் இன்றி இக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில், மறைந்திருக்கும் அபாயகரமான நோக்கங்களை நாம் ஆராய்வது அவசியம். இந்தக் கொள்கை, நமது தேசிய உணர்வின் உருவாக்கத்திற்கு அடிப்படை யாக இருந்த விடுதலைப் போராட்டத்தின் விழுமி யங்களை அப்பட்டமாக மறுக்கிறது.

1   கல்வி விவாதத்தின் மறுப்பும்   ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும்

தேசிய கல்விக் கொள்கை 2020, நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் பொதுவெளியில் கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற தொரு தொலைநோக்கு ஆவணம், ஒரு பெரிய பொது விவாதத்துடனும், ஆழமான கொள்கை ஆய்வுக ளுடனும் வந்திருக்க வேண்டும். ஆனால் கெடு வாய்ப்பாக, நாட்டின் கல்வி நிலையங்கள் மூடப்பட்டி ருந்ததால், இந்தக் கொள்கை குறித்து நாடு தழுவிய ஒரு பெரிய விவாதம் நடைபெறவில்லை. இதன் விளைவாக, இந்தக் கொள்கையின் சமூக மற்றும் பொருளாதார ரீதியான பாதகமான விளைவுகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லவும், அதைக் கூட்டாக எதிர்ப்பதற்கான மக்கள் திரட்டல் (Public Mobilisation) நடத்தவும் முடியாமல் போனது. கல்விக்கான போராட்டத்தைப் பற்றிப் பேசும் போது, நமது விடுதலைப் போராட்டத்தின் தியாகிகள் கொண்டிருந்த இலட்சியங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 45 (வழிகாட்டும் கோட்பாடுகள்), கல்வியை ஒரு உரிமையாக வரையறுத்தது, சலுகை யாக அல்ல. இது, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் கருத்தாழமான விளைவுகளில் ஒன்றாகும். கல்வி என்பது, விடுதலை, ஜனநாயகம், மதச்சார் பின்மை ஆகியவற்றுக்கான கருவியாகச் செதுக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் போராடினர்.

2சமூக நீதியின் புறக்கணிப்பும்  வரலாற்றின் சிதைப்பும்

சுதந்திரத்திற்குப் பிந்தைய கல்வி அமைப்பில் சமூக நீதி (Social Justice) ஒரு மையக் கருத்தாக இருந்தது. ஆனால் இன்று, சமூகத்தின் ஒரு பகுதி வரலாற்று ரீதியாக அனுபவிக்கும் பின்னடைவைப் புரிந்துகொள்ள மறுக்கும் ஒரு போக்கு நிலவுகி றது. குறிப்பாகப் பழங்குடியினர், பட்டியல் சாதிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் ஆகி யோருக்கு நீதியை நிலைநாட்டத் தேவையான ‘ஆக்கப் பூர்வமான பாகுபாடு’ (Positive Discrimination) குறித்த தயக்கம் நீடிக்கிறது. கல்வியின் மூலம் அனை த்துப் பிரிவினரையும் உள்ளடக்கும் (Inclusive) சுதந்திரப் போராட்டத்தின் கருத்தியலை இது சிதைக்கிறது. அத்துடன், தேசிய கல்விக்கொள்கை (NEP) 2020-இன் மைய நோக்கங்களில் ஒன்று, இந்திய வரலாற்றைத் திரித்து, நமது தேசிய அடையா ளத்தை இந்துத்துவக் கண்ணோட்டத்தில் மறுவடிவ மைப்பதாகும். இவர்கள் இந்தியாவை அதன் “புகழ்பெற்ற கடந்த காலத்திற்கு” அழைத்துச் செல்வதாகப் பேசுகி றார்கள். ஆனால் உண்மையில், இது இந்தியாவின் கூட்டுத் தன்மையையும் (Composite Nature) பன்முகத்தன்மையையும் அழிக்கும் முயற்சியாகும். உதாரணத்திற்கு: H முகலாயர் காலம் போன்ற பல முக்கியமான வரலாற்றுப் பகுதிகள் என்சிஇஆர்டி (NCERT) பாடத் திட்டங்கள் மற்றும் பாடத்திட்டக் கட்டமைப்பி லிருந்து நீக்கப்படுகின்றன. H இந்திய வரலாறு என்பது தொல்லியல் மற்றும் மரபணு ஆய்வுகளை (Genomic Studies) அடிப்ப டையாகக் கொண்ட ஒரு சமூக அறிவியல் என்ற நிலையில் இருந்து, புராணங்களின் தொகுப்பாக மாற்றப்படுகிறது. வெளியிலிருந்து உள்நாட்டில் மக்கள் குடிபெயர்ந்ததைக் காட்டும் மரபணு ஆய்வு களின் அறிவியல் உண்மைகள் கூடப் புறக்க ணிக்கப்பட்டு, இந்தியாவே ஜனநாயகத்தின் தாய் என்ற கட்டுக்கதை முன்வைக்கப்படுகிறது. H மிக முக்கியமாக, பல்லாயிரம் ஆண்டுகளாக ஜன நாயகம் இருந்ததாகக் கூறுவதன் மூலம், சாதி அமைப்பின் படிநிலை (Caste Hierarchy) மற்றும் அதனால் ஏற்பட்ட உள்ளார்ந்த சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை முற்றிலும் மறைக்க முயற்சிக்கிறார்கள்.

3 கார்ப்பரேட் ஆதிக்கமும்  சந்தைப்படுத்துதலும்

1990களில் தொடங்கிய தாராளமயப் பொருளா தாரச் ‘சீர்திருத்தங்கள்’ (அதாவது, சீர்திருத்தம் என்ற பெயரிலான சீர்குலைவுகள்), கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளை சந்தைச் சக்திகளின் கட்டுப் பாட்டிற்குக் கீழ் கொண்டு வந்தன. இன்று இது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

H லாபத்திற்கான பொறுப்புக்கூறல்: புதிய யுஜிசி (UGC) வழிகாட்டுதல்களின்படி, ஒரு ஆசிரியரின் முக்கியப் பொறுப்பு கல்விப் பணி மட்டுமல்ல, நிர்வா கப் பணிகளிலும் ஈடுபடுவதுடன், கல்வி நிறு வனத்தை நடத்துவதற்குத் தேவையான வளங்களை உருவாக்குவது மற்றும் கார்ப்பரேட் லாபத்தை உறுதி செய்வதுமே ஆகும் என்று வரையறுக் கப்படுகிறது.

H பணி நேர மாற்றம்: ஒரு ஆசிரியரின் பணி நேரம் மூன்று முழு வகுப்பு நேரத்திலிருந்து குறைந்தது எட்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது, இதுவும் கல்வி  சாராத நிர்வாகப் பணிகளுக்காகப் பிரிக்கப்படுகிறது.

H கூட்டுக் களவு முதலாளித்துவம்: அதிதீவிர தாராள மயக் கொள்கைகளின் கீழ், ஆளும் வர்க்கத்துடன் நெருக்கம் கொண்ட ஒரு சிறிய கூட்டுக் களவு முத லாளித்துவ (Crony Capitalism) பிரிவினரின் லாப நோக்கமே கொள்கைத் தீர்மானங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.

H கல்வி ஒரு வர்த்தகக் களம்: உயர்கல்வி நிறுவனங்க ளை ஒன்றிணைத்தல் மற்றும் கல்வி மையங்க ளாக (Education Hubs) மாற்றுதல் போன்ற கொள் கைகள் மூலம், ஏராளமான சிறிய கல்வி நிறுவ னங்கள் மூடப்பட்டு, பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் நிலை அதிக ரிக்கிறது. கல்வி நிறுவனங்களின் தணிக்கை அதன் லாபம் ஈட்டும் திறன் கொண்டே நிர்ணயிக்கப் படுகிறது. இவ்வாறாக, கல்வி என்பது பழமையின் பிடிகளில் இருந்து மனித மனங்களை விடுவிக்கும் ஒரு செயல்பாடு அல்ல, மாறாக, லாபத்தை ஈட்டு வதற்கான ஒரு கருவியாக, பயிற்சி (Training) மற்றும் திறன் மேம்பாடு என்ற குறுகிய வரையறைக்குள் மட்டுமே சுருக்கப்படுகிறது.

4 இந்துத்துவச் சித்தாந்தப் பிடி: மறுவடிவமைக்கப்பட்ட ‘தேச’ உணர்வு

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ உருவாக்கு வதில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மற்றும் கார்ப்பரேட் நலன்களே மிக ஆழமாக ஈடு பட்டிருந்தன. நமது அரசியல் சட்டத்தை வடிவமைத்த சுதந்திரப் போராட்டத்தின் விழுமியங்களில் துளி யும் நம்பிக்கை கொள்ளாத ஆர்எஸ்எஸ், அதன் இந்துத்துவக் கண்ணோட்டத்தில் ஒரு புதிய இந்திய அடையாளத்தை உருவாக்க விழைகிறது.

H மனுவாதம் மற்றும் பெண் சமத்துவ மறுப்பு: இவர்கள் வலியுறுத்தும் “ஒழுங்கமைக்கப்பட்ட இந்துத் துவம்” என்பது இந்து மதத்தின் பன்முகத்தன்மை யை மறுத்து, பிராமணியம் மற்றும் மனுவாதச் சிந்த னையை முன்னிறுத்துகிறது. பெண்கள் சமத்து வத்தை மறுக்கும் அடிப்படைவாதக் கண்ணோட் டம், முஸ்லிம் பெண்களுக்குப் பொருந்தும் எனப் பேசும்போது கூட, நடைமுறையில் அது பொதுச் சமூகத்தில் எதிரொலிப்பதைக் காண்கிறோம்.

H கூட்டாட்சியின் மீதான தாக்குதல்: இந்தியாவைப் பன்முகத்தன்மையுடன் அங்கீகரித்த கூட்டாட்சி அமைப்பு (Federal Structure), மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகிய அடிப்படைக் கோட்பாடுகள் இன்று கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

H சித்தாந்த யுத்தம்:இந்த அரசாங்கம், “சிந்தனை களின் யுத்தத்தில்” ஆதிக்கம் செலுத்தி, ஆளும் சித்தாந்தத்தை மக்களின் மனதில் திணிக்கிறது. இந்தியா, “ஜனநாயகத்தின் தாய்” என்ற சித்தாந்தக் கருத்தை நிறுவ இந்திய வரலாற்றியல் ஆராய்ச்சி மையம் (ICHR) போன்ற வரலாற்று நிறுவனங்களை இரண்டு மாத கால அவகாசத்தில் ஆவணம் தயா ரிக்கப் பணித்தது இத்தகைய சித்தாந்தத் திணிப்பு க்கு ஒரு சிறந்த உதாரணம்.

5 பரந்த சமூகக்  கூட்டணி தேவை

இன்று இந்தியாவின் கல்வி அமைப்பு ஒரு முழு மையான மறுவடிவமைப்பின் விளிம்பில் உள்ளது. நமது அடிப்படை ஜனநாயகக் கட்டமைப்பைச் சிதை த்து, கல்வியைச் சந்தையின் கைகளில் ஒப்படைக் கும் இந்த பாசிசப் போக்கையும், சித்தாந்தத் தாக்குதலை யும் எதிர்த்துப் போராடுவது காலத்தின் கட்டாயம். கல்வியை, மனித சிந்தனையின் கருவியாகப் பார்க்கும் ஆசிரியர், மாணவர் மற்றும் கல்விச் சமூகம் அனைவரும் இந்த ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இந்தச் சவாலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, வெறும் அரசியல் ஒற்றுமை மட்டுமல்ல, இந்தக் கருத்தியல் மற்றும் கார்ப்பரேட் சவாலை எதிர்கொண்டு முறியடிக்கக் கூடிய ஒரு பரந்த சமூகக் கூட்டணியும் (Broadest Possible Social Coalition) கட்டியெழுப்பப்படுவது அவசியம். நமது குடியரசின் அடிப்படை விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டத்தில் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். மதுரையில் அக்.11 அன்று நடைபெற்ற மூட்டா கல்வி மாநாட்டில் ஆற்றிய உரையின் தமிழ் சுருக்கம்  தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்