சினிமாவும், அரசியலும், சுதந்திர மனிதர்களும்!
எனது கிராமம், பழைய ஒருங் கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூர் பகுதியைச் சேர்ந்தது. இடது சாரி மற்றும் திராவிட இயக்கங்கள் செழித்து வளர்ந்த நிலப்பரப்பு. என் சிறுவயதில் ஒரே நாளில் நான் கண்ட இருவேறு சம்பவங்கள் இன்றும் என் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளன. ஓர் அதிகாலையில், பக்கத்து ஊரில் விவ சாயக் கடன், கந்துவட்டிப் பிரச்சனை காரணமாக ஒரு எளிய மனிதர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் அவரது உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடனடியாக, மருத்துவமனைக்கு வெளியே கூடிய சிவப்பு துண்டணிந்த இடது சாரித் தோழர்கள், அந்த மரணத்திற்கு நீதி கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்குடும்ப மும், இருபது முப்பது தோழர்களும் மட்டுமே இருந்தனர். பொதுஜனம் யாரும் அதில் பங்கேற்கவில்லை. கடந்து சென்ற பலரும் வேடிக்கை பார்த்தனர், சிலர் முகம் சுளித்து அதிருப்தியுடன் சென்றனர். அழுகுரலும் கோஷங்களும் மட்டும் காற்றில் கரைந்தன.
கரகாட்டமா, கல்வியா? அதே நாளின் மாலையில், அதே டவுனில், மருத்துவமனைக்கு அருகிருக்கும் ஜங்ஷனில் ஜெயலலிதா அவர்களின் பிரச்சாரக் கூட்டம். அவர் அப்போதுதான் கட்சி அரசியலுக்கு வந்தி ருந்தார். அந்த ஜங்ஷனில் மக்கள் வெள்ளம். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து திரண்டு வந்து நின்றனர். டியூப் லைட் வெளிச்சத்தில், வேனின் மேல் பாதி தெரிய நின்ற ஜெயலலிதா கைய சைக்க மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. அது ஒரு திறந்தவெளி திரையரங்கைப் போலத்தான் இருந்தது. மக்கள் அவரை ஒரு சினிமா நட்சத்திர மாகவே கொண்டாடினர். அப்போது எனக்கு ஆச்சரியம், காலையில் சக மனிதர் ஒருவர், பல ரின் பொதுவான பிரச்சனையில் சிக்கிச் செத்த தற்கு வராத இந்த மக்கள், மாலையில் ஒரு சினிமா நட்சத்திரத்தைப் பார்க்க மொத்தமாக ஏன் திரண்டிருக்கிறார்கள்? என்னைக் கூட்டிப் போயிருந்த சுப்ரமணியம் தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னார்: “பள்ளிக்கூடம் இருக்கும்போது கரகாட்டம் வெச்சா, நீ எதுக்கு போவ? கரகாட்டத்துக்குத்தான போவ! அது மாதிரி தான் இந்தப் பயலுவளும்... எல்லாம் ஜிகினா கட்ற எடமாப் பாத்துதா திமுதிமுன்னு கூடும்ங்க.” அவரது வார்த்தைகள் எனக்குக் குழப்பத்தை அளித்தது. மெய்யான நாயகர்கள் அதன் பிறகு, வாசிப்பும் இடதுசாரி இயக்கத் தோழர்களுடனான தொடர்பும் என் பார்வையை மாற்றின. வெகுநாட்களுக்குப் பிறகு தோழர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்கள்’ புத்தகங்களைப் படித்தபோது குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
களப்பால் குப்பு, ஜாம்பவானோடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் என எண்ணற்ற தோழர்கள் மக்களுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றிய அறிமுகமோ விபரமோ அப்பகுதி மக்களுக்கே இல்லை. தங்கள் வாழ்வில் சிறு மாற்றத்தையும் ஏற் படுத்தாத, எங்கோ இருக்கும் சினிமா நடிகர் களைக் கொண்டாடும் இந்த மக்களுக்கு, தங்க ளுக்காகப் போராடி உயிரையே கொடுத்த தோழர்களைப் பற்றித் தெரியாதது எவ்வளவு பெரிய அவலம்! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மக்கள் பணியைத் தங்கள் அன்றாட இயல்பு களில் ஒன்றாகச் செய்துவரும் தோழர்களை பெரும்பான்மையான மக்கள் கண்டுகொள்வ தில்லை, மதிப்பதில்லை, சமயங்களில் புறக் கணிக்கிறார்கள். ஆனால், தங்கள் வாழ்வில் அபத்தங்களை நிகழ்த்தும், அறியாமையை விதைத்து மோசடி செய்யும் நபர்களைக் கொண்டாடுகிறார்கள். இது ஒரு பெரும் துன்ப முரண். எதிர்காலத்தை இழக்கலாமா? சித்தார்த்தன் புத்தனானதும், மார்க்ஸ் நாடற்றவராக வாழ்ந்தபோதும் மனித குலத்துக் காகச் சிந்தித்துக் கொண்டே இருந்ததும், பெரி யார் கடைசி மூச்சு வரை பேசிக் கொண்டிருந்த தும், அம்பேத்கர் இறப்பதற்கு மூன்று நாட் களுக்கு முன்புவரை எழுதிக் கொண்டிருந்ததும் அறியாமை இருளிலிருந்து மக்களை விடு விக்கத்தானே! இன்னமும் மக்கள் அரசியல்மயப் படாமல், அறிவு விடுதலை அடையாமல் இருப் பது வருத்தத்தையும் கோபத்தையும் தருகிறது. சமூக ஊடகங்கள் ஒரு புதிய ஜனநாய கத்தை உருவாக்கும் என நம்பினோம்.
ஆனால் நடந்தது என்ன? நாயக வழிபாட்டின் உச்சமாக வும், பொய்ச் செய்திகளின் கூடாரமாகவும், அபத்த ங்களும் வன்மங்களும் நிறைந்த தலைமுறை யின் களமாகவும் அல்லவா இணைய உல கம் ஆக்கிக் கொண்டி ருக்கிறது! மக்களுக்கான உண்மையான ஊடகங் கள் எத்தனை இருக்கின்றன? பணத்திற்காகவும் ஆதாயங்களுக்காகவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும் கேவலமான வேலையைத்தானே பலர் செய்து கொண்டிருக்கிறார்கள்? இதன் உச்சமாக, ஒரு நடிகரின் கூட்ட நெரிச லில் சிக்கி அநியாயமாக நாற்பத்தியொரு பேர் சாகிறார்கள். இந்த மோசமான சூழலில்தான் நாம் இருக்கிறோம். இந்த மக்கள் பலியாடுகள். அதிகார பீடத்திற்காகக் காலகாலமாக அறுக்கப் படும் பலியாடுகள். அந்த அதிகாலையில் தூக்கிட்டுத் தொங்கியது ஒரு மனிதரல்ல... நமது எதிர்காலம் என்றே இப்போது தோன்றுகிறது. மக்களைப் படி! உங்களை மகிழ்விக்கும் ஒரு நடிகரையோ, திரைக் கலைஞரையோ கொண்டாடுவதோ, போய்ப் பார்ப்பதோ தவறில்லை.
ஆனால், உங்களுக்கான அரசியலை, தலைவரை வெறும் கொண்டாட்டங்களில், புல்லரிப்புகளில், பிம்பங்களில் மட்டுமே தேடாதீர்கள். அது வேறு, இது வேறு என்ற தெளிவு கொள்ளுங்கள். உங்களின், உங்கள் பிள்ளைகளின், இந்த நிலத்தின் எதிர்காலத்தைத் தனிமனித பிம்ப மயக்கத்தில் தொலைக்காதீர்கள். அரசியல் என்பது மக்களுக்கான பெரும் தத்துவத்தை உருவாக்கி, அதை விழுது களாக்கும் மாபெரும் செயல்பாடு. அதனால் தான் மாவோ ‘மக்களைப் படி’ என்றார். இடதுசாரி இயக்கங்களில் உறுப்பினராகச் சேரக்கூட, முதலில் களத்தில் மக்கள் பணியாற்றிப் பயிற்சி எடுத்த பின்னரே அட்டை பெற முடியும் என்பது விதியாக உள்ளது. மக்களைப் படிக்காமல், அவர் களின் பிரச்சனையின் வேர்களை அறியாதவர் எப்படி அவர்களுக்காகப் பேச முடியும்? வாச்சாத்தி மாதிரி வழக்குகளில் பணபலம், அதிகார பலம் எதுவுமில்லாமல், முப்பதாண்டு களுக்கும் மேலாக உறுதியாகப் போராடி நீதியை வென்றெடுப்பதெல்லாம், மக்களைப் படித்து நேசிப்பதை வாழ்வாகக் கொண்ட தோழர்களால் மட்டுமே சாத்தியம்.
உங்களை ஒரு பண்டமாக, ஓட்டாகப் பார்க்கும் தேர்தல் வியாபார அரசியல் சூழலில், உங்களது அரசியல் தேர்வு மிக மிக முக்கியம். உங்களை உயிரோடும் உணர்வோ டும் பார்க்கும் இதயப்பூர்வமான நல்லரசியல் பாதையை நோக்கிச் செல்லுங்கள். அதுவே உங்களை உயிருள்ள, உணர்வுள்ள, மானமுள்ள மனிதராக்கும்! சினிமாவும் அரசியலும்! சினிமா ஒரு தொழில், பொழுதுபோக்கு, வியாபாரம் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அந்தக் கலைக்கென சில அடிப் டை நோக்கங்கள் உண்டு என்பதும் உண்மை. 1916-இல் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ‘பர்த் ஆஃப் த நேஷன்’ என்ற மௌனப்படம், தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் அலையை உருவாக்கியது. ஆனால், கருத்தியல் ரீதியாக கறுப்பினத்தவரை கொடூரமாகச் சித்தரித்து, நிறவெறியைத் தூண்டுவதாக இருந்தது. இதனால் பல மாநிலங்களில் படத்தைத் தடை செய்ய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சினிமா எவ்வ ளவு நேர்மையாக இருக்க வேண்டும் என்ற உண்மையை அன்றே உலகுக்குச் சொன்னது. இதன் இயக்குநர் டி.டபிள்யூ.கிரிபித் பொது வெளியில் மன்னிப்புக் கோரி, பிராயச்சித்தமாக ‘இன்டாலாரன்ஸ்’ என்ற இன்னொரு படத்தை எடுத்தார். மற்றொரு படம், 1925இல் ரஷ்யாவில் எடுக் கப்பட்ட ‘பேட்டில்ஷிப் போத்தம்கின்’. 1905இல் ஜார் மன்னனுக்கு எதிரான எழுச்சியை அப்படியே ஆவணப்படுத்தியிருந்தது. மக்க ளின் உணர்வுகளை ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்த இந்தப் படத்தை ரஷ்ய அரசாங் கமே தயாரித்தது.
புரட்சியின் முக்கியத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறையினரும் உணர வேண்டும் என்பதற்காகவே இதைப் பயன் படுத்தினர். இது ஒரு பிரச்சாரப் படம். ஆனால், கலை ரீதியாக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தது. ‘ஒரு சாதாரண குடிமக்களைக் கூட போல்ஷ்விக் காக மாற்றக்கூடிய சக்தி இந்தப் படத்திற்கு உண்டு’ என ஹிட்லரின் தளபதிகளில் ஒருவ ரான கோயபல்ஸ் சொல்லுமளவிற்கு இருந்தது. சினிமா என்ற கலை, ஒரு சமூகத்தை எப்படி அரசியல்மயப்படுத்தத் துணை செய்ய முடியும் என்பதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே நமக்கு உதாரணங்கள் இருக்கின்றன. சினிமா என்பது வெறும் கவர்ச்சி மட்டுமல்ல, அது நம்மை அரசியல்மயப்படுத்தும் கலை ஆயுதம் என்பதையும் உணரும்போதுதான் அந்தக் கலை அதன் நோக்கத்தையும் மேன்மையையும் அடைகிறது! சுதந்திர மனிதர்கள் மறுபடியும் நான் மக்களிடமே வருகிறேன். இது எல்லாவற்றுக்குமான தீர்வு என்பது நம்மை நாம் அறியும் சுய விழிப்புணர்வில்தான் இருக் கிறது.
1936இல் பம்பாயில் அம்பேத்கர் ஆற்றிய மதமாற்றப் பிரகடன மாநாட்டு உரையில் உள்ள இந்தச் சொற்கள் முக்கியமானவை: “சுய உணர்வோடு தன்னுடைய உரிமைகள், பொறுப்புகள், கடமைகளை எவர் உணர்கிறாரோ ... சூழ்நிலையின் அடிமையாக எவர் இல்லையோ அவரையே நான் சுதந்திரமானவர் என்பேன். பகுத்தறியும் தன்மையை இழக்காதவர் எவ ரோ, பிறரின் கைப்பாவையாக இல்லாமல் அறி வும் சுயமரியாதையும் உள்ளவரோ அவரே சுதந் திரமானவர் என்பேன்... சுருக்கமாக தனக்குத் தானே எஜமானன் யாரோ அவரே சுதந்திர மனிதர்.
” சாதி, மதம், கடவுளின் பெயரால் மட்டுமல்ல, அறிவுச் சுரண்டல், பிம்ப மோசடி எதன் பெயரால் நடந்தாலும் அது ஒடுக்குமுறையே. அரசியல் விழிப்புணர்வு அடையாத இந்த தேசத் தின் அத்தனை மக்களும் ஒடுக்கப்பட்டோரே. உங் கள் விடுதலைக்கான சாவி உங்களிடம்தான் உள்ளது. இந்த கும்பல் மனோபாவம், ஆட்டுமந்தைத் தனம், நாயக வழிபாடு எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, எப்போது நீங்கள் சுய அறிவோடு பகுத்தறிந்து உங்களுக்கான அரசியலைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அப்போதுதான் எல் லாம் மாறும். அதற்கான பணிகளைத் தான் பல்வேறு வடிவங்களில் இடதுசாரி இயக்கங்கள் செய்கின்றன. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற மார்க்சின் வார்த்தைகள் உங்கள் ஒவ்வொருவரிடமும்தான் இருக்கிறது!