இந்திய அறிவியல் வானின் 75 நம்பிக்கை நட்சத்திரங்கள் : ஒரு வரலாற்றுப் பயணம்
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த நிலையில், நம் தேசத்தின் அறிவியல் வளர்ச்சிக்குத் தங்களின் வாழ்வை அர்ப்பணித்த 75 ஆளுமைகளைச் சிறப்பிக்கும் விதமாக அரியதொரு தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். கோவிட்-19 பொது முடக்கக் காலத்தில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் அறிவியல் பலகை இணைந்து நடத்திய இணைய வழித் தொடரில், அறிவியல் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் ஆற்றிய உரைகளின் எழுத்து வடிவமே இந்தப் படைப்பு. வெறும் அறிவியல் தகவல்களின் குவியலாக மட்டுமில்லாமல், சாதனைகளுக்குப் பின்னால் இருந்த தியாகங்களையும், கடும் உழைப்பையும் இது உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது. அறிவியல் மேதைகளின் உன்னதப்பயணம் சர். சி.வி. இராமன், ஹோமி பாபா, அப்துல் கலாம் போன்ற உலகப் புகழ்பெற்ற முன்னோடிகள் தொடங்கி, ஷியாம் சுந்தர் குப்தா போன்ற சமகால அறிஞர்கள் வரை இயற்பியல், மருத்துவம், விண்வெளி எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர்களின் வாழ்வை இந்நூல் ஆவணப்படுத்துகிறது. சிக்கலான அறிவியல் உண்மைகளைக்கூட ஆயிஷா நடராஜன் தனது கவித்துவமான எளிய தமிழ் நடையில் சாமானியர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் வழங்கியுள்ளார். ஒவ்வொரு விஞ்ஞானியும் எதிர்கொண்ட வாழ்வியல் போராட்டங்களும், சவால்களைக் கடந்து அவர்கள் அடைந்த வெற்றியும் இளம் தலைமுறையினருக்குப் பெரும் உந்துசக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை. பெண் ஆளுமைகளின் அரிய பங்களிப்பு ஒட்டுமொத்த இந்திய அறிவியல் வளர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டும் இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம், பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பிற்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ஆகும். தாவரவியல் அறிஞர் ஜானகியம்மாள், வானிலை ஆய்வுக் கருவிகளைக் கண்டறிந்த அண்ணா மணி, மலேரியா மருந்து கண்டறிந்த அசிமா சாட்டர்ஜி மற்றும் இந்தியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டி.எஸ். கனகா எனப் பல ஆளுமைகளின் சாதனைகளைத் தனித்துவத்துடன் இது பதிவு செய்துள்ளது. இந்தியாவின் அறிவியல் வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்நூல் ஒரு மிகச்சிறந்த கையேடு. அறிவியல் மனப்பான்மையையும், தேசப் பற்றையும் ஒருசேர விதைக்கும் இந்த ‘75 நம்பிக்கை நட்சத்திரங்கள்’ ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம். இந்திய அறிவியல் வானின் 75 நம்பிக்கை நட்சத்திரங்கள் நூலாசிரியர்: அறிவியல் அறிஞர் ஆயிஷா நடராஜன் வெளியீடு: அறிவியல் பலகை, சென்னை - 600085. விலை: ₹ 120/- தொடர்பு: 9840969757
