அதிகாரமற்ற அன்பின் உரையாடல்
கல்வியாளர் கே. கிருஷ்ணகுமார் எழுதி, முனைவர் என். மாதவன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள “குழந்தை மொழியும் ஆசிரியரும்” என்ற நூல், சமகாலக் கல்விப்புலத்தில் மிக முக்கியமான ஒரு திறப்பினை வழங்குகிறது. குழந்தைகளை வெறும் ‘மாணவர்களாக’ மட்டும் பார்க்காமல், அவர்களைத் தனித்திறன் கொண்ட மனிதர்களாகப் பார்க்கத் தூண்டும் ஒரு வழிகாட்டியாக இது அமைகிறது. ஒரு ஆசிரியர் வகுப்பறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைத் தாண்டி, ஒரு குழந்தை இயல்பாக எவ்வாறு கற்கிறது என்பதை ஆசிரியர் எப்போது புரிந்து கொள்வார் என்ற அடிப்படையான கேள்வியை இந்நூல் முன்வைக்கிறது. மொழியும் மழலையின் மனமும் மொழி என்பது வெறும் பாடமோ அல்லது தகவல் பரிமாற்றக் கருவியோ மட்டு மல்ல; அது குழந்தையின் சிந்தனையை வடிவமைக்கும் ஒரு உயிர்நாடி என்பதைப் பல்வேறு உதாரணங்களுடன் நூலா சிரியர் விளக்குகிறார். பாடப்புத்தகத் தமி ழுக்கும், குழந்தைகள் பேசும் இயல்பான மொழிக்கும் இடையே உள்ள இடைவெளி யை ஆசிரியர் எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் இவர் காட்டும் நெகிழ்வுத்தன்மை போற்றுதலுக்குரியது. குழந்தைகள் மொழியைப் பிழையாகப் பேசும்போது அதைத் திருத்துவதை விட, அவர்கள் எதைச் சொல்ல வருகிறார்கள் என்ற ‘பொருளை’ ஆசிரியர்கள் கவ னிக்க வேண்டும் என்பதை இந்நூல் வலி யுறுத்துகிறது. மௌனமாக இருக்கும் குழந்தை கூட உள்ளுக்குள் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்ற உள வியல் உண்மையை ஆசிரியர் சமூகம் உணர வேண்டியது அவசியம். தோழமையுடன் கூடிய கற்றல் ஆசிரியர் என்பவர் அதிகாரத்தைச் செலுத்துபவர் அல்ல, மாறாகக் குழந்தை களுடன் இணைந்து பயணிக்கும் ஒரு தோழர் என்பதே இந்நூலின் மையக் கருத்து. இயந்திரத்தனமான எழுத்துப் பயிற்சி களுக்கு முன், கதைகள் மற்றும் உரை யாடல்கள் மூலம் மொழியின் மீதான ஆர்வத்தை உருவாக்க வேண்டும் என இது வழிகாட்டுகிறது. இன்றைய தேர்வு சார்ந்து இயங்கும் கல்வி முறையில், ‘சுதந்திரமான கற்றல்’ முறையைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி யும் இந்நூல் உரையாடுகிறது. பெற்றோர் களும், ஆரம்பக் கல்வித் துறையில் இருப்பவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய இந்தப் படைப்பு, குழந்தைகளின் மழலை மொழியில் ஒளிந்துள்ள ஆழமான அறிவியலைப் புரிய வைக்கும் ஒரு நடைமுறைக் கையேடாகும். குழந்தை மொழியும் ஆசிரியரும் நூலாசிரியர்: கே. கிருஷ்ணகுமார் (தமிழில்: முனைவர் என். மாதவன்) வெளியீடு: நேஷனல் புக் ட்ரஸ்ட் (NBT) இந்தியா,சென்னை 600034. விலை: ₹ 100/ தொடர்பு: 9840262917
