articles

விளிம்புநிலை மக்களின் அறிவியல் குரல் - வே.மீனாட்சி சுந்தரம்

விளிம்புநிலை மக்களின் அறிவியல் குரல்

வழக்கறிஞர்  பா.ஹேமாவதி எழுதிய “சரி, தவறு யார் முடிவு செய்வது” என்ற நூல், சமூகம் அருவருப்போடும் ஒவ்வாமையோடும் அணுகும் திருநர்களின் வாழ்வியலை அறிவியல் வெளிச்சத்தில் விவா திக்கும் உணர்ச்சிமிகு உரையாடல். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் களப்பணிகள் ஊடாக, திருநர்களின் அன்றாட வாழ்க்கைச் சோகங்களையும் போராட்டங்களையும் மிக நெருக்கமாகக் கண்டுணர்ந்த ஆசிரியர், நெஞ்சில் தைத்த அந்த வலிகளை இப்புத்தகத்தில் எழுத்தாக வடித்துள்ளார். 28 தலைப்புகளில் 155 பக்கங் களைக் கொண்ட இந்த நூல், திருநர்களைப் பற்றிய பொதுச்சமூகத்தின் பார்வையை அறச் சீற்றத்துடன் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.  வலி மிகுந்த வாழ்க்கையின் வாக்குமூலம்  திருநர்களை வெறும் மனநோயாளி களாகப் பார்த்து இரக்கப்படுபவர்களும், அவர் களைக் குற்றவாளிகளாகக் கருதி ஒடுக்க நினைக்கும் ‘ஆணாதிக்க மனநிலையும்’ சரியான புரிதலைப் பெற இந்நூலின் சில அத்தியாயங்களே போதுமானது. குறிப்பாக, ‘டா---டி’ என்ற தலைப்பிலான பகுதி, திருநங்கைகள் தங்கள் உடலைப் பெண்ணாக மாற்றிக்கொள்ள எதிர்கொள்ளும் கடுமையான உடல் ரீதியான வேதனைகளையும், அறுவை சிகிச்சையின் போது தங்களுக்குத் தாங்களே நிகழ்த்திக்கொள்ளும் சித்திரவதைகளையும் ஒரு வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளது. மற்ற பாலினத்தவரால் கற்பனை செய்தும் பார்க்க முடியாத உயிர் பிழியும் கொடுமை இது. அதேபோல், ‘புள்ளிவிவரங்களே இல் லாத ஒரு இனம்’ என்ற பகுதி, குடும்பத் தால் துரத்தப்பட்டு, சட்டத்தால் குற்றவாளி யாக்கப்பட்டு, காவல்துறையின் வன்முறைக்கு பலியாகும் அவர்களின் அவலநிலையை உரக்கப் பேசுகிறது.  சமூக நீதி நோக்கிய பயணம்  திறமை இருந்தும் பிச்சை எடுப்பது அல்லது பாலியல் தொழில் செய்வது என்ற இரு நிலைக்குள் திருநர்களைச் சமூகம் முடக்கி வைத்திருப்பதை இந்நூல் வன்மையாகச் சாடுகிறது. கடந்த நூற்றாண்டிலேயே பல நாடுகளில் கம்யூனிஸ்டுகளின் வர்க்கப் போராட்டங்கள் மூலம் திருநர்கள் கண்ணிய மான வாழ்வைப் பெற்றுவிட்டனர். ஆனால், நம் நாட்டில் விடுதலைக்குப் பிறகும் பிரிட்டிஷ் காலத்து சனாதன நிர்வாகக் கோட்பாடுகளே தொடர்வதால், 2014-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் ஏட்டளவிலேயே முடங்கிக் கிடக்கிறது. திருநர்களின் கண்ணியத்தையும் வாழ்வுரிமையையும் மீட்டெடுக்க விழிப்புணர்வு எவ்வளவு அவசியமோ, அதே அளவு அவர்களின் உடல் ரீதியான சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் சமூகத்திற்குத் தேவை. ஒரு சமூகப் பிரச்சினையை அறிவியல் பார்வையோடு அணுகுவதற்குத் தேவையான பக்குவத்தை வழங்கும் இந்நூல், ஜனநாயகத்தை நிமிர்த்தப் போராடுவோர் கைகளில் இருக்க வேண்டிய அவசியமான ஆயுதமாகும்.  சரி, தவறு யார் முடிவு செய்வது? நூலாசிரியர்:  வழக்கறிஞர் பா. ஹேமாவதி வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 155 / விலை: ரூ.180 தொடர்பு: 9789002929