அடிப்படை ஜனநாயக உரிமைகள் எவ்வாறு திட்டமிட்டு பிஜேபிஆட்சிக் காலத்தில் நசுக்கப்படுகிறது என்பதை பல சமயங்களில் புதுக் கோணத்தில் தன் எழுத்தால் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா. இதோ அவரின் வலி மிகுந்த சிறு கட்டுரை தங்களின் பார்வைக்காக…
நாம் சமீப காலமாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில்லை, மாறாக வெறுப்பையே பகிர்கிறோம். எல்லா திசைகளிலிருந்தும் வெறுப்பின் வீச்சு நம்மை ஒரு பெருஞ்சுழலில் தள்ளுகின்றது. அதில் சிக்கி காயம் படும்போது, நம்பிக்கைகள், அர்ப்பணிப்பு எல்லாமே வீணாகிப் போகிறதோ எனும் அச்சம் நம்மைக் கவ்வுகிறது.
எம் இனிய மக்களே ..
உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையா? உங்களில் சிலருக்குப் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம். அப்படியானவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம். இருந்தும் நான் இதை எழுதுகிறேன் என்றால், நீங்கள் இதைப் படித்து கடந்து போக வேண்டும் என்பதற்காக அல்ல, நான் தொடர்ச்சியாக இது போன்ற விசயங்கள் குறித்து சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. அதே போல் சக மக்களை நேசிப்பவர்கள் தங்களிடம் இதுபோன்ற உரையாடலை தொடர்ந்து செய்ய முடியுமா எனும் அச்சம் என்னுள் எழுகின்றது.
நாம் எங்கு, எப்படி இருக்கிறோம் என்பதைபற்றிய கவலையே என்னை இப்படி எழுத வைக்கிறது. அந்தக் கவலையே என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. ஒரு இருள் என்னை மூச்சுத் திணற வைக்கிறது.இருள்மூச்சுத் திணற வைக்குமா? அது உங்கள் தொலைநோக்குப் பார்வையை தடுக்கும். மூச்சுத் திணற வைக்காது. உங்கள் சுவாசத்தை நிறுத்த முற்படாது. ஆனால் நம்புங்கள்நிச்சயமாக அது செய்யும் திறன் கொண்டது. என்னைச் சுற்றி தினமும் நடக்கும் சொல்மற்றும் செயல் வன்முறைகள் என்னை கதிகலங்க வைக்கின்றன. திக்கு முக்காட வைக்கின்றன. அது எப்படியானது தெரியுமா? காற்றுஉள் புக முடியாத பிளாஸ்டிக் பைக்குள் நம்தலை சிக்குண்டதை போல.. அந்தப் பை சுவாசிக்கமுடியாத “வெறுப்பால்” சூழ்ந்துள்ளது.
தறிகெட்டு நிற்கும் சமூகம்
நான் திணறிப் போய் நிற்கிறேன் என்பதுதெரிந்தால் கூட உள்ளூர இது ஒரு தர்மசங்கடமான சூழல் என்பதை அறிந்தும் கூட தொடர்ந்து அப்படியே நிற்கிறேன். அப்படி நான் இருப்பதாலேயே மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, அதற்கு காரணமாகவும் இருக்கிறேன். வெறுப்பும் கோபமும் என்னுள் நுழைந்து விட்டதை என்னால் அறிய முடிகிறது. இந்த வெறுப்பும் கோபமும் நான் வெளிப்புறத்தில் காட்டிக் கொள்ளும் தொடர் இயல்புகள் அல்ல. மாறாக என்னுள் எழும் கோபமும், வெறுப்பும் என்னை முழுமையாக விழுங்கி விட்டன. அதனாலேயே என்னால்சாதாரணமான விவாதத்திற்கோ ,உரையாடலுக்கோ செவிசாய்க்க முடியவில்லை. அடுத்தவர்களின் வாதத்தை நான் ஏற்றுக்கொள்வதே இல்லை. அதனால் நான் தூண்டப்படுகிறேன், எதிர்வினையாற்றுகிறேன். நான் அப்படி நடந்து கொள்வது எம் எதிரிக்குதூண்டு கோலாக அமைகிறது. இதனால் நம்சமூகம் ஒத்திசைவையும், நல்லிணக்கத்தையும் இழந்து தறிகெட்டு நிற்கிறது.
இந்தியாவில் ஜனநாயகம், மதச்சார்பின்மை எனும் பேரில் இந்து கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும் சுதந்திரத்திற்கு பிறகு ஆட்சி செய்தவர்கள் துச்சமென மதித்து,காலில் போட்டு மிதித்து விட்டார்கள் எனும்எண்ணத்தை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் ஆகப்பெரும்பான்மையான ஆதிக்க சக்தி இந்துக்களின் சிந்தனையில் ஆழ விதைத்து விட்டார்கள். விமர்சனத்திற்குரிய பல அரசியல் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். மறுப்பதற்கில்லை. ஆனால் இப்படி தொடர்ந்து சொல்லி அவதூறு செய்வதாலேயே பலபத்தாண்டுகளாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நமக்குக் கிடைத்த குடியரசை நாம் சிறுமைப் படுத்திட முடியுமா? இப்படிதொடர்ந்து கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்ப ஒரே விசயத்தை சொல்லும் இவர்கள்,அதே சட்டம் வழங்கிய கருத்துச் சுதந்திரத்தின் காரணமாகத் தானே இன்று ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.
அசிங்கப்படுத்திடும் அருவருப்பான செயல்
இப்படி நான் சொல்வதால் முந்தைய ஆட்சிக் காலங்களில் நடந்தவை எல்லாமே “ சரி” என வக்காலத்து வாங்கவில்லை. ஏராளமான தவறுகள், வரலாற்றுப் பிழைகள் நடந்துள்ளன. அதில் ஒன்று எமர்ஜென்சி காலக் கொடுமைகள். ஆனால் நாட்டை நேசித்தவர்களை எல்லாம், இது போன்ற எல்லாவற்றிற்கும் காரணம் காட்டி, அவதூறாகச் சித்தரித்து, உண்மையாக உழைத்தவர்களை அசிங்கப்படுத்திடும் வேலையை திட்டமிட்டுச் செய்கிறார்கள். மகாத்மாவோடும் நேருவோடும் பல முரண்பாடுகள் உண்டு. அவர்களை நான்வானளாவப் பாராட்டவில்லை. ஆனால் அவர்களின் பங்கை குறைத்து மதிப்பிடுவதும், தேச விரோதிகளென சித்தரிப்பதும் மிக அருவருப்பான செயல். காந்தியோடு சமரசமற்ற கருத்துப் போராட்டத்தை நடத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர். ஆனால் அதில்ஒரு நேர்மையும் நாகரீகமும் இருந்தது. அதனால் தான் பல சிக்கலான பிரச்சனைக்கு தொடர் உரையாடல்கள் ,விவாதங்கள் நடந்துகொண்டே இருந்தன.
ஆயுதங்கள் கொண்டுவிதண்டாவாதம்
ஆனால் இன்றோ, நாம் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் நம் நாட்டின் பன்முகத் தன்மையை, ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். காரணம்அவர்களுக்கு மேற்கண்ட எதுவுமே பிடிக்காது.ஏனென்றால் பன்முக ஜனநாயகத்தின் நுணுக்கங்களை, அதன் அழகியலை ரசிக்கதெரியாத மூடர்கள். அவர்களோ நம்மை ஒற்றைத் தன்மையோடு இருக்கச் சொல்கிறார்கள். வழிபடச் சொல்கிறார்கள் . உண்மைகளை மறுக்க முடியாமல் முன் பாதியை ஏற்றுக் கொண்டு வாதிப்பார்கள். இப்போதுகேட்கவே வேண்டாம். அவர்கள் உணர்ச்சிவயப்படும் விசயங்களையும், நம்பிக்கை சார்ந்த விசயங்களையும் ஆயுதம் கொண்டு விதண்டாவாதம் பேசுகிறார்கள். அதே போலஆன்மீகத்தைப் போர்வையாகக் கொண்டு செயல்படும் சாமியார்கள், தங்களை பின்பற்றுபவர்களிடம் முதலில் நீங்கள் யாரென அறிந்து கொள்ளுங்கள், உங்களிடத்தில் முதலில் அன்பு செலுத்தி கொள்ளுங்கள் என உபதேசம் செய்கின்றனர். மற்றவர்களை வெறுத்து ஒதுக்குங்கள் என்பதே அதன் பொருள்.
தங்களின் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா? பேசாத விசயத்தை பேசியதாகக்கூறுவது, பொய்யான வீடியோக்களை உருவாக்குவது, திரித்து உருவாக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, அதை ஒரு பெரும் பிரச்சனையாக மாற்றுவதுஎன மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில் நீதிபதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள தீர்ப்புகளை வழங்காமல், அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இதெல்லாம் நம்மைச் செவிடாக்கும் அளவுக்கு நடந்து கொண்டிருக்க, கவலைப்படாத பெருமுதலாளிகள், சாமியார்கள் சொல்லும் தன்னைத் தானே நேசித்தலுக்கு பெரும் பணத்தை செலவழிப்பதும், பகைமையை, வெறுப்பைத் தூண்டிவிடுவதற்கு பேராதரவு தருகிறார்கள். காரணம் வெறுப்பரசியல் அவர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தருகிறது.
துளிர்க்கும் நம்பிக்கை
இதையெல்லாம் நோக்கும் போதே தான் நான் சிக்குண்டு தவிக்கிறேன். இதெற்கெல்லாம் நானுமொரு காரணமென நினைக்கிறேன். அடுத்தவரை வெறுப்பது ,தன்னைச் சார்ந்து பெருமை பேசுவது என்னுள்ளும் பதுங்கி இருந்தது போல, அந்த எண்ணம் கடந்த காலங்களில் அரசியல் சூழலால் வெளிக் காட்டாமல் இருந்து கொண்டது. தற்போது அந்த மாதிரியான கீழ்த்தரமான எண்ணங்களை கொண்டோரின் அதிதீவிர நடவடிக்கைகளாலும், நம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டும் கூட்டத்தின் அசிங்கமான நடவடிக்கைகளினால் அதுசூடேற்றப்படுகிறது. அப்படியான கீழ்த்தரமான எண்ணங்கொண்டோர் யாரென அப்பட்டமாக தெரியத் துவங்கியுள்ளது. ஆனாலும் நேசமாக இருக்க வேண்டுமெனும் எண்ணமும் நம்முள் இன்னமும் இருக்கத் தானே செய்கிறது, அதனால் தான் நம்பிக்கையும் துளிர்க்கிறது.
பாதுகாக்குமா? இழப்பு ஏற்படுத்துமா?
வெறித்தனமும்,மற்றவர்களை நகைப்பாக ஏளனமாகக் கருதுவதும் வெறுத்து ஒதுக்குவதும் நம்மைப் பாதுகாக்குமா? அல்லது அதனால் நமக்கு ஏதும் இழப்பு ஏற்படுத்துமா? மற்றவர்களிடமிருந்து நம்மை,(இந்து) நம் தர்மத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனும் கோஷமே தினந்தோறும் ஒலித்துக் கொண்டேஇருக்கிறது. இந்நாட்டில் இருக்கும், மதச் சிறுபான்மையினர், வெளிநாட்டவர், சீனர்கள், அமெரிக்கர்கள் என எல்லோரும் அவர்கள் நாட்டுக்கே போக வேண்டும்,அல்லது வெளியேற்றப்படவேண்டும். கம்யூனிஸ்ட்டுகள், நடுநிலையாளர்கள், சோசலிஸ்ட்டுகள், நாத்திகர்கள், மதச்சார்பின்மைக்காக குரல் கொடுப்போரை வெறுத்து ஒதுக்க வேண்டும். ஆதிக்க வெறிக்கு எதிராகப் போராடும் பட்டியலின மக்கள் எல்லோரும் தேச விரோதிகள். பத்திரிகையாளர்கள் அனைவரும் பொய் சொல்வோராக சித்தரிக்கப்படுகிறார்கள். பிரபலமானவர்கள் அரசுக்கு எதிராகவோ, பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவோ கருத்துக் கூறினால்அவர்கள் சதி வேலைகளில் ஈடுபடுகிறார் என்றும், அரசை சீர்குலைக்கும் முயற்சியில்அவருக்குத் தொடர்பு உள்ளது என்றும் அவதூறு செய்யப்படுகிறார்கள். கண்டிப்பான நடவடிக்கைகள் வேண்டுமென குரல் கொடுப்போர் குரல் நசுக்கப்படுகிறது, சுதந்திரமான பெண்கள் கலாச்சாரத்தை சீரழிப்பவர்கள், நீதி, நியாயத்திற்காக போராடும் இளைஞர்கள், மாணவர்கள் தறிகெட்டவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.
இப்போது உண்மையாகச் சொல்லுங்கள் இவர்கள் யாரைத் தான் விட்டு வைத்திருக்கிறார்கள்? இந்துத்துவாவை நிறுவ முயற்சிக்கும் ஒரு சிறு மதவெறிக் கூட்டத்தின் அனைத்துச் செய்கைகளையும் ஆதரிக்க வேண்டும். எதிர்க்கவே கூடாது என்பது என்னவகை நியாயம்? நம் நாடு அந்த கொடும்நிலைக்கு போக வேண்டும் என நினைக்கிறோமா?
இந்தியா இந்தியாவாக இருக்காது
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே புரிவதில்லை. அவர்கள் காட்டும் பாதையில் போனால், இந்தியா இந்தியாவாக இருக்காது. தேசத் துரோகம், மத நம்பிக்கையை அவமானம் செய்கிறார்கள், நாட்டுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் எனும் சொல்லாடலை தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். விளிம்புநிலை மக்களுக்காகப் போராடி, எதிர்க் குரல் எழுப்பினாலோ அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதைப் பற்றியெல்லாம் நாம் கிஞ்சிற்றும் கவலைப் படாமல், கேலிச் சித்திரங்களையும், மீம்ஸ் ( MEMES ) களை உருவாக்குகிறோம். அப்படித் தான் எதிர்க் குரல் எழுப்பிய திஷா ரவியை புதுதில்லிக்கு அழைத்துச் சென்றதையும், அவருக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் கடந்து போனோம். அவரின் இந்த கைது நடவடிக்கையை பலர் நியாயப்படுத்தினர். இளைஞர்களின் பெற்றோர்களும் எதுவுமே நடக்காதது போலவும், திஷாவின் மீது விஷத்தை உமிழ்ந்தனர்.
இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் குரல்எழுப்பாமல் இருப்பது என்ன வகை உணர்வு?நான் அந்தத் தவறுகளை கடந்த காலங்களில் செய்துள்ளேன். நான் தவறி விட்டேன். நீங்களாவது என்னை போல “ தவறு” செய்யாமல் இருக்க விழைகிறேன்.
கட்டுரையாளர் : டி.எம்.கிருஷ்ணா
நன்றி: தி வயர் (இணைய இதழ் 18/02/2021)
தமிழில்: என்.சிவகுரு