articles

img

சாதியின் கோட்டைகளை உடைக்க... ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை முன்னெடுத்துச் செல்ல - பிருந்தா காரத்

சாதியின் கோட்டைகளை உடைக்க...  ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை முன்னெடுத்துச் செல்ல - பிருந்தா காரத்

“தமிழகத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களும் வெற்றிகளும்” (“The Struggles & Victories against Caste oppression in TamilNadu) என்ற தோழர் பி. சம்பத்  எழுதிய புத்தகம், தமிழ்நாட்டில் நிலவும் சாதிக் கொடுமைகளையும் தீண்டாமை யின் கொடூரத்தையும் 32 அத்தியா யங்களில் துல்லியமாக பதிவு செய்துள்ளது. எந்தவிதமான ஒப்பனை களும் இல்லாமல், நேரடியான எளிய வார்த்தைகளில் அம்பலப்படுத்தப் பட்டுள்ள இந்த வரலாறு, ‘வளர்ச்சி பெற்ற இந்தியா’ என்ற பெயரில் நடைபெறும் ஏமாற்றுத்தனத்தை வெளிப்படுத்துகிறது. இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ள விவாதங்கள் உறுதியான உதாரணங்கள், உண்மையான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும், தீவிர சமூக மாற்றத்திற்கான அனைத்துப் போராட்டங்களுக்கும் இந்நூல் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.  (இந்நூல், பி.சம்பத் எழுதிய, “சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள் - கள அனுபவங்கள்” என்ற நூலின் ஆங்கில மொழியாக்கம் ஆகும்.

வெற்றிக்கானப் போராட்டங்கள்: மக்களின் ஒற்றுமைதான் ஆயுதம்

இந்நூல், சாதியக் கொடுமை களுக்கு எதிராக கிராமம் கிராமமாக எதிர்ப்புக் குரலெழுப்பி, போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்ற சாமானிய மக்களின் கதையாகும். ஒடுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் உழைக்கும் மக்க ளின் ஜனநாயகத்திற்கான பரந்த போராட்டத்துடன் இணைத்து, சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக அமைப்பாகத் திரண்டதால் கிடைத்த வெற்றிகளை இது பதிவு செய்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக நடுத்தர-உயர் வர்க்கங் களில், “தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மிகைப்படுத்தப் பட்டவை” என்ற தவறான கருத்து நிலவுகிறது. பட்டியல் சாதி ஆணை யத்தின் ஒரு மூத்த அதிகாரியே, “தீண்டா மை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்டபோது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியை உருவாக்க என்ன தேவை?” என்று கேட்டதாக சம்பத் குறிப்பிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திய ஆய்வு களில், மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் 100க்கும் மேற்பட்ட தீண்டாமை வடிவங்கள் கண்டறியப் பட்டன. உதாரணமாக சில: l    தலித்துகள் பொதுச் சாலையில் நடந்து செல்லத் தடை l     காலணி அணியத் தடை l     சைக்கிள் ஓட்டத் தடை l     வேட்டியை மடித்துக்கட்ட மற்றும் பாலியஸ்டர் வேட்டிகளை அணியத் தடை l     துண்டை தோளில் அணியத் தடை l     முண்டாசு கட்டத் தடை l     அவர்களுக்கென தனி நாற்காலிகள் வழங்குதல்

மரணத்திலும் தொடரும் சாதியக் கொடுமை

இந்நூலில் உள்ள எடுத்துக் காட்டுகள், வளர்ச்சி என்று அழைக்கப்  படும் போலித்தனங்களை தோலு ரித்துக் காட்டுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் பாலசமுத்திரம் கிராமத்தில் தலித்துகளுக்கான சுடு காடு ஆற்றின் மறுகரையில் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக, தலித் மக்கள் தங்கள் உறவினர்களின் சடலத்தை ரப்பர் டயரில் கட்டி தண்ணீரில் வீசுவது வழக்கம். நீச்சல் தெரிந்த சில இளைஞர்கள் மூழ்கி உடலை ஆற்றின் அந்தப் பக்கம் தள்ளு வார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் போராட்டத்தால் இந்த அவ லத்திற்குத் தீர்வு காணப்பட்டது. இயக்கங்களுக்கு இது ஒரு முக்கியப் பாடம்: சிக்கல்களைக் கண்டறிய  ஆய்வின் மூலம் தரவுகள் மற்றும் விவரங்களைச் சேகரிப்பது, மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான உறுதியான போராட்டங்களைக் கட்டியெழுப்புவது, குறிப்பிட்ட பிரச்சி னைக்குத் தீர்வு காணப்படும் வரை போராடுவது ஆகியவை அவசியம்.

அருந்ததியர்களுக்கான உள்-ஒதுக்கீடு

அருந்ததியர் சமூகத்தினருக்கு எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக் கீட்டில் உள்-ஒதுக்கீட்டுக்கான போராட்டம் குறித்த சுவாரஸ்யமான அத்தியாய மும் இந்நூலில் உள்ளது. அரசு சேவை கள் மற்றும் வேலைகளில், தனியார்மய மாக்கல் மற்றும் ஒப்பந்தமயமாக்கல் காரணமாக, எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்கான இடஒதுக்கீடு என்ற அரசி யலமைப்பு உரிமை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இடஒதுக்கீட்டிற்குள் உள்ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தின ரிடையே பிளவை உருவாக்கக்கூடும் என்ற கவலையைப் போக்க முதலில், பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு  விரிவான ஆய்வு தேவை; இந்நிலை யில் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தலித்துகளிலேயே மிகக் கீழான நிலையில் உள்ள அருந்ததியர் சமூகத்தின் அவல நிலைகள் குறித்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளை நடத்தி யது. அருந்ததியர்கள் மலத்தைக் கையால் அள்ளுவது உள்ளிட்ட மனித  கண்ணியத்திற்கு மிகக் குறைவான வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், கல்வி நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் இடஒதுக்கீட்டுப் பலன் கள் அருந்ததியர்களுக்கு மறுக்கப் படுவதைக் காட்டின. உறுதியான போராட்டத்திற்குப் பிறகு, 2008-ல் கலைஞர் கருணாநிதி அரசால் அருந்த தியர் சமூகத்தினருக்கு எஸ்.சி. ஒதுக்கீட்டில் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது பிற இயக்கங் களுக்கு வழிகாட்டும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

சாதியும் முதலாளித்துவமும்: ஒடுக்குமுறையின் இரட்டை ஆயுதங்கள்

இந்நூலில் உள்ள அனுபவங்கள், அரசியலமைப்பினால் உத்தரவாதம் செய்யப்பட்ட உரிமைகளை அளித்தல், பாகுபாட்டைத் தடைசெய்தல் ஆகிய வற்றில் அடைந்த தோல்விக்குக் காரணமான சாதி அமைப்பின் உட் கூறாகப் பொதிந்துள்ள, கெட்டிப்படு த்தப்பட்ட பாகுபாட்டை சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவியுள்ள முதலாளித்துவம், சாதி அடிப்படையிலான சமூக உறவு களுடன் இணைந்து, தலித்து களின் உழைப்பைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தும் கருவியாக வடி வமைத்துள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டுள்ள தலித்து களுக்கான நிலவுரிமை, இழிவான வேலைகளான கையால் மலம் அள்ளுதல், சடலங்களை அகற்றுதல், கழிவுகளை அகற்றும் பணிகள் ஆகியவை தலித்துகளுக்கு “ஒதுக்கீடு” செய்யப்படுகின்றன. அரசாங்க அறிக்கைகளின்படி, முறைசாரா தொழிலாளர்களின் விகிதம் தலித்துகளிடையே 84% ஆக வும், ஆதிக்க சாதியினரிடையே 54% ஆகவும் உள்ளது. 2018-19 காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தலித் முறைசாரா தொழி லாளர்களின் சராசரி தினசரி ஊதியம் ரூ.269 ஆகும்; இது தேசிய சராசரி யான ரூ.315, மற்றும் ரூ.357 பெறும் உயர் சாதியினரை விட மிகவும் குறைவாகும். இந்தியாவில் முத லாளித்துவ வளர்ச்சியின் வடிவம், சாதி  அமைப்பால் உருவாக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களின் உழைப்பைச் சுரண்டுவதுடன் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளது.

இந்துத்துவமும் சாதிய கட்டமைப்பும்: ஓர் ஆபத்தான கூட்டணி

சாதியப் பண்பாட்டு ஆதிக்கத் திற்கு சவால் விடுவதன் முக்கியத்து வத்தை இந்நூல் வலியுறுத்துகிறது. கருத்துலகில் பிராமணிய ஆதிக்கத் திற்கு எதிராக வெற்றிகரமாக நடத்தப் பட்ட சமூக சீர்திருத்த இயக்கங் களின் வரலாற்றில் தமிழ்நாடு முக்கிய மான பங்கு வகிக்கிறது. பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் தலைமையில், நால்வருண ஆதிக்கத் திற்கும், பெண்களை தரம் தாழ்த்தி நடத்தும் அடிமைத்தனத்திற்கும் எதி ரான போராட்டத்தை தமிழகம் வழி நடத்தியது. ஆனால் பிராமண ஆதிக்கத்தின் அடுக்குகள் தங்களை உடனுக்குடன் புதுப்பித்துக் கொண்டு மனுவாதி களின் சித்தாந்தங்களில் பிரதிபலிக் கின்றன. ஆய்வுகளின் முடிவுகளி லிருந்தும், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஓ.பி.சி. பிரிவி னர் அணிதிரட்டப்பட்டதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் இது தெரிகிறது. தமிழ்நாட்டில், சாதிமறுப்புத் திரு மணங்களில், ஆண் தலித் அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகவும், பெண் உயர் சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் ‘சாதி ஆணவக் கொலைகள்’ நடந்துள்ளன. ஹரியானாவின் “காப்” பஞ்சாயத்துகளைப் போன்ற குற்றங் கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன. இது திராவிட இயக்கங்களின் முந்தைய சமூக சீர்திருத்தத்தின் அடித்தளத்தில் ஏற்பட்டுள்ள சரிவைக் காட்டுகிறது. இந்துத்துவ அரசியலின் வளர்ச்சி யானது, சாதிய அமைப்பிற்குள் சாதிகள் “ஒத்துப்போதல்” என்பதை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. இந்துத்துவ சித்தாந்தத்தின் அடிப்படை யில் சிறுபான்மையினர் ‘எதிரி’ என்று குறிப்பிடப்படுவதும், மநு ஸ்மிருதியின் அடிப்படையில் இந்துத்துவ அடை யாளத்தை உயர்த்துவதும் கொடுமை யானது. மநு ஸ்மிருதியில், சூத்திரர்கள், தலித்துகள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான அருவருப்பான வசனங்கள் உள்ளன என்பதை அறிந்தும், தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் அர சியல் சக்திகள் இத்தகைய பிற்போக்கு சித்தாந்தங்களை ஊக்குவித்து வருகின்றன.

தொழிலாளர் ஒற்றுமையும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும்

நடைமுறை அனுபவங்கள், கொள்கைகள், சித்தாந்தங்களின் அடிப்படையில் வர்க்கப் போராட்டம், சமூகப் போராட்டம், பண்பாட்டுப் போராட்டம் ஆகியவற்றுக்கு இடையே யான தொடர்பைப் புரிந்துகொள்வது, நச்சுத்தன்மை வாய்ந்த சாதிய அமைப்பை அடித்து நொறுக்குவதற்கு மிக முக்கியமானதாகும். இந்த இணைப்புகளைப் புரிந்து கொள்வதற்கான வழிகாட்டியாக இந்தப் புத்தகம் விளங்குகிறது. உழைக்கும் மக்களில் ஒரு குறிப்பிட்ட  பிரிவினரின் மீதான அதீத ஒடுக்கு முறையைச் சுட்டிக்காட்டி, அதற்கு எதிராக அனைத்து சுரண்டப் படும் மக்களையும் ஒன்றிணை க்கும் நடைமுறை உத்தியின் முக்கி யத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளிக்கு எதிராக தொழி லாளியை சாதியின் பெயரால் நிறுத்து வது அல்ல - தொழிலாளர்களை சாதிக்கு எதிராக ஒருங்கிணைப்பது; தலித் தொழிலாளர்கள் எதிர்கொள் ளும் பாகுபாட்டுக்கு எதிராக அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடுவதே தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் மையக்கருவாகும்.

போராட்டத்தின் அனுபவத்திலிருந்து பிறந்த நூல்

இந்நூல், தோழர் பி.சம்பத் அவர் களின் இதயத்திலிருந்தும், மூன்று தசாப்தங்களாக தீண்டாமைக்கு எதிராகக் களத்தில் நடத்திய கடுமை யான போராட்டத்தின் அனுபவத்தி லிருந்தும் எழுதப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகத் தொடங்கி, 2007-18 வரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிறுவன அமைப்பாளராகவும், தலைவராகவும், பின்னர் 2018-22 வரை சிறப்புத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னராகவும் பணியாற்றிய அவரது அனுபவம் இந்நூலில் பிரதிபலிக்கிறது. சாதியின் கோட்டையை உடைக்க, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும், சமூக மாற்றத்திற்காகவும் அக்கறையுடன் உழைக்கும் அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.  பி.சம்பத் எழுதிய ஆங்கில நூலுக்கு பிருந்தா காரத் எழுதியுள்ள முன்னுரையின் சுருக்கம்.