உலக கம்யூனிஸ்ட் நாயகன் ஜார்ஜ் டிமிட்ரோவ்
இன்று (ஜூலை 2) உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீர தலைவர் ஜார்ஜ் டிமிட்ரோவின் நினைவு நாள். பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவராக தொடங்கி உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு வரை உயர்ந்த இந்த மாவீரன், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கினார். 1920களில் சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடுகளில் பங்கேற்று பால்கன் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றிணைத்தார். உயிருக்கு ஆபத்து நிலவிய போதும் கருங்கடலில் மீன்பிடி படகில் பயணித்து சர்வதேச கம்யூனிஸ்ட் கடமையை நிறைவேற்றினார். 1933ல் ஜெர்மனி நாடாளுமன்ற தீவைப்பு சம்பவத்தில் ஹிட்லரின் நாஜிக்களால் கைது செய்யப்பட்ட டிமிட்ரோவ், நீதிமன்றத்தில் சிங்கம் போல் முழங்கினார்: “நான் பயங்கரவாதியல்ல. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு ஆதரவாளன். ஆனால் தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்ப்பவன்!” சர்வதேச கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளராக பாசிச எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை வழிநடத்தினார். எத்தியோப்பியா மீதான பாசிச தாக்குதலுக்கு எதிராக சர்வதேச ஒற்றுமையை கட்டியெழுப்பினார். டிமிட்ரோவின் வீரம், துணிச்சல், அர்ப்பணிப்பு ஆகியவை இன்றும் நம் உத்வேகமாக விளங்குகின்றன. அவரது நினைவை போற்றி, பாசிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் உறுதியாக நிற்போம்!
ஜூலை 2 ஜார்ஜ் டிமிட்ரோவ் நினைவு நாள்