தேர்தல் ஜனநாயகத்தின் எதிர்காலத்தை சூழ்ந்திடும் இருள்மேகங்கள்!
“பீகார் வாக்காளர் பட்டியல்களில் அயல்நாட்டினர்: தேர்தல் ஆணையம் கூறுகிறது; ‘இந்தியா’ கூட்டணி தரவு குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது” - என ஒரு பெரிய தேசிய நாளேடு தன் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக அலறியிருக்கிறது. உண்மையில் இது நம்பமுடியாததாகவே தோன்றுகிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஜூன் 24 தேதிய தலையங்கத்தில், இந்தியத் தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தத்திற்காக வெளியிட்டிருந்த முழுமையான காலக்கெடுவை நாம் கோடிட்டுக் காட்டி இருந்தோம். வாசகர்களின் நலனுக்காக மீண்டும் அதனை நாம் நினைவுகூர்ந்திடுவோம். “தேர்தல் வாக்குச்சாவடி அதிகாரிகள் (Booth Level Officers), படிவங்களை வீடு வீடாக விநியோகித்து, நிரப்பப்பட்ட படிவங்களை சேகரித்து, அவற்றைச் சரிபார்க்க வேண்டும். கூடுதலாக உயர் அதிகாரிகள் அவற்றைப் பகுத்தாய்வு செய்து மறுசீரமைப்பு மேற்கொண்டு இறுதிப்படுத்திட வேண்டும், வாக்குச்சாவடிகளின் பட்டியலை அங்கீகரித்திட வேண்டும், 2025 ஆகஸ்ட் 1க்குள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும், அதைத் தொடர்ந்து 2025 செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.
” உச்சநீதிமன்ற செயல்முறையை பாதிக்க பரப்பும் தவறான தகவல்
உண்மையில் இதுதான் நிலை என்றால், பீகார் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் இருப்பதாக தேர்தல் ஆணையம் எப்படிக் கூற முடியும்? செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு தேர்தல் ஆணையத்திடமிருந்து முறையான அறிக்கை எதுவும் வர வாய்ப்பில்லை என்பதால், ஜூலை 28ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நீதித்துறை செயல்முறையை பாதிக்க இந்தத் தவறான தகவலை ஆணைய அதிகாரிகள் சிலர் விதைத்துள்ளனர் என்பதே இதன் பொருளாகும். சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்ற அமர்வு எந்த குறிப்பிட்ட உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றாலும் (மனுதாரர்கள் அத்தகைய நிவாரணத்தைக் கேட்கவில்லை), எழுப்பப்பட்ட அடிப்படை கேள்விகளுக்கு இன்னும் தேர்தல் ஆணையத்திடமிருந்து தெளிவானமுறையில் பதில்கள் வரவில்லை.
குடியுரிமை பிரச்சனை : தேர்தல் ஆணையத்துக்கில்லை
முதல் கேள்வி: ஒரு வாக்காளரின் குடியுரிமை நிலையைத் தீர்மானிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா? இந்த விஷயத்தில், ஒரு தனிநபர் ஒரு குடிமகனா என்பதைத் தீர்மானிப்பது உள்துறை அமைச்சகத்தின் (MHA) அதிகாரம் என்று உச்சநீதிமன்றத்தின் அமர்வாயம் குறிப்பிட்டது. ஆதாரை செல்லுபடியாகும் ஆவணத்திலிருந்து விலக்குவதாக, தேர்தல் ஆணையம் கூறியபோது, “...குடியுரிமை என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அல்ல, மாறாக உள்துறை அமைச்சகத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனை” என்று அமர்வாயம் கூறியது.
குடியுரிமை - வாக்காளர் உறுதி செய்ய அவசரம் என்ன?
இரண்டாவது கேள்வி: இப்போது இதற்கு ஏன் அவசரம்? தேர்தல் ஆணையம் குடிமக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய விரும்பினால், “இந்த செயல்முறையை அது மிகவும் முன்னதாகவே தொடங்கியிருக்க வேண்டும்” என்று அமர்வாயம் கூறியது. நீதிமன்றம் இவ்வாறு இப்போது அவசரகதியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பியது. மேலும் பீகார் தேர்தல்களில் இந்த நடவடிக்கைகளைத் துவக்கி இருப்பதைத் துண்டிக்க முடியுமா என்றும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
நீதிபதியின் சந்தேகங்கள் கேள்விகள்
தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் வினாக்களுக்கான விடைகளை அளிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை மிகவும் தெளிவாகவே நீதிபதி அடிக்கோடிட்டிருக்கிறார். “தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் தகவல்களை என்னாலேயே அளிக்க முடியாது,” என்று கூறியிருக்கிறார். “2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவரின் வாக்குரிமையை நீக்கும் உங்கள் முடிவு, அந்த நபரை அந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கட்டாயப்படுத்தும். மேலும் இந்த முழு மோசடியையும் கடந்து, அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும்.” தேர்தல் ஆணையம் வலியுறுத்தும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான, நடைமுறையைக் காட்டுங்கள், காலவரிசையைக் காட்டுங்கள் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தும் ஆவணங்கள் குறித்தே நீதிபதி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
வாய்மொழி விசாரணையா...
இறுதியாக, மூன்றாவது கேள்வி: தேர்தல் ஆணையம் என்ன நடைமுறையை பின்பற்றும்? ஒரு வாக்காளர் வாக்குரிமையை இழக்கும் சந்தர்ப்பத்தில் அது பின்பற்றும் செயல்முறையை தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேட்டனர். நீதிபதி துலியா ஒரு கூர்மையான கேள்வியை எழுப்பினார்: “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஒரு ‘சுருக்கமான திருத்தம்’ ஒரு வாக்காளரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முன்பு வாய்மொழி விசாரணையைக் கோரினால், ‘தீவிர’ திருத்தம் அந்த செயல்முறையைக் கொண்டிருக்க முடியாது என்று கூற முடியுமா?”
ஆதார், வாக்காளர், ரேசன் அட்டை செல்லுபடி ஆதாரமில்லையா?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின் கீழ், உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு வழக்குகளைத் தவிர, முன்மொழியப்பட்ட வாக்காளர் நீக்கம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், வாக்காளருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும், இது வாக்காளருக்கு கேட்க நியாயமான வாய்ப்பை வழங்குகிறது. இந்தக் கேள்வி வரிசையின் ஒரு பகுதியாக, சில ஆவணங்களின் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையையும் அமர்வாயம் எழுப்பியது. ‘சிறப்பு தீவிர திருத்தம்’ செயல்பாட்டில் ஆதார், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை ஏன் செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது.
கால நடைமுறையிலிருந்து விலகிச் செல்லும் தேர்தல் ஆணையம்
இவைதான் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கேள்விகளாகும். சாதாரணமான காலத்தில், சுதந்திர மான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வ தற்குத் தேவையான அனைத்தையும் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் ஜூன் 24 ஆம் தேதி உத்தரவும், ஆணையம் நிர்ணயித்துள்ள முறையும் காலக்கெடுவும் கடந்த கால நடைமுறையிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றன. இதுபோன்று முன்னெப்போதும் நடந்ததில்லை.
கொல்லைப்புற சூழ்ச்சி
இப்போது தேர்தல் ஆணையம் கொண்டுவந்திருக்கும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எந்தவிதமான சட்டப்பூர்வ விதிகளும் கிடையாது. இது தேசிய குடிமக்கள் பதிவேட்டு நடவடிக்கையை (NRC), கொல்லைப்புற வழியாகக் கொண்டுவரும் சூழ்ச்சிநடவடிக்கையாகவே தோன்றுகிறது. இதன் விளைவாக, மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக பொருளாதார ரீதியாகவோ அல்லது சமூக ரீதியாகவோ ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் டிஜிட்டல் முறையில் அதிகாரம் இழந்தவர்கள் தங்கள் வாக்குரிமையை இழப்பார்கள். இதே போன்ற ‘சிறப்பு தீவிர திருத்த’ செயற்முறை இதர மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், இதனை நாட்டிலுள்ள அனைத்துத்தரப்பினரும் ஆழமான முறையில் எடுத்துக்கொண்டு, இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். இல்லையேல், தேர்தல் ஜனநாயகத்தின் எதிர்காலமே ஆபத்தில் சிக்கக்கூடும்.