articles

img

தன்னையே ‘சதிகாரர்’ என்கிறாரோ எடப்பாடி? - க. கந்தசாமி

தன்னையே ‘சதிகாரர்’ என்கிறாரோ எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்த பின்னர், அவரது நிலைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தென்படுகின்றன. அவருக்கு சில விஷயங்கள் மறந்து விட்டது போல் இருக்கிறது. திடீரென்று கோவையில் பிரச்சார பயணத்தில் “கோவில் நிதியை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள், மக்கள் இதை சதிச் செயலாக பார்க்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.   இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கல்வி நிலையங்கள் துவங்குவது என்பது 1960 இல் இருந்தே துவங்குகிறது. 1960 இல் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் 13.04.1960 இல் பண்பாட்டுக் கல்லூரிக்கு அறநிலையத்துறை ஆணையராக இருந்த உத்தண்டராமன் அடிக்கல் நாட்டினர். அறநிலையத் துறை அமைச்சர் பக்தவத்சலம் 23.07.1960 இல் கல்லூரியைத் திறந்தார். இதன் கூடுதல் கட்டிடத்தை சி.பி.ராமசாமி ஐயர் 09.06.1961இல் திறந்தார்.  இந்நிலையில் பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி காமராஜர் ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பக்தவச்சலம் அவர்களால் 19.01.1963இல் அடிக்கல் நாட்டப்பட்டு 17.07.1965இல் திறக்கப்பட்டது. குற்றாலம் பராசக்தி கல்லூரி பூம்புகாரில் 1964இல் துவக்கப்பட்டது. கன்னியாகுமரியில் ஸ்ரீதேவி குமரி மகளிர் கலைக் கல்லூரி 1965இல் துவக்கப்பட்டது. இந்த நான்கு கல்லூரிகளும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது. இன்று வரை இந்த நான்கு கல்லூரிகளிலும் பட்டம் பயின்று வெளியே வந்த மாணவர் மாணவியர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும்.  பழனி ஆண்டவர் பெண்கள் கல்லூரி 1970 இல் கலைஞர் அவர்களால் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 1981இல் பழனி ஆண்டவர் பெண்கள் பாலிடெக்னிக், 1982இல் ஆண்கள் பாலிடெக்னிக் கட்டப்பட்டது. இந்த இரண்டு பாலிடெக்னிக் கட்டப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்.பழனிவேல் அவர்களின் கோரிக்கையின் காரணமாக எம்.ஜி.ஆர்.,  பண்பாட்டு கல்லூரி ஆக இருந்த கட்டிடத்தை ஆண்கள் பாலிடெக்னிக்காக மாற்றிக் கொடுத்தார்.  மேலும் அறநிலையத்துறையின் சார்பில் மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், இசை பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயில -  என பல்வேறு வகையான கல்வி நிறுவனங்கள் அறநிலையத்துறையின் சார்பில் துவக்கப்பட்டன. இந்த கல்வி நிறுவனங்கள் துவக்கப்பட்ட காலத்தில் அரசின் சார்பில் குறைவான கல்வி நிறுவனங்களே இருந்தன. கோவில் நிதியை வைத்து அந்தப் பகுதி பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் துவங்கப்பட்டது.  எடப்பாடியின் முரண்பாடுகள் இந்தக் கல்வி நிறுவனங்கள் துவங்கப்படுவதற்கு நன்கொடையாளர்கள் தங்களுடைய இடத்தை தங்கள் பகுதி மாணவர்கள் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் கொடுத்தார்கள். கட்டிடத்தை அறநிலையத்துறை கட்டியது. அங்கு பணியில் அமரும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவருக்கும் அரசு ஊதியம் வழங்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த பகுதிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றார்கள். ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தது.   இதில் ஏதாவது சதிச் செயல் இருக்கிறதா என்று பூதக் கண்ணாடியை வைத்துத் தான் எடப்பாடி பழனிசாமி பார்க்க வேண்டும்.  அறநிலையத்துறையைப் பொறுத்தவரை கல்வி நிலையங்களுக்கு கட்டிடங்கள் கட்டிக் கொடுப்பது மட்டும்தான். பல்கலைக்கழக மானிய நிதியின் கீழ் நிதி உதவி என்பது வந்து கொண்டிருக்கிறது. அரசும் நிதியுதவி அளிக்கிறது பணியாளர்களுக்கு.  அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்.தான் பழனியில் பாலிடெக்னிக் துவக்கினார். எடப்பாடியின் கருத்துப்படி, அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம். ஜி.ஆர்.தான் சதியின் தலைவராக இருந்திருக்கிறார் என்று பொருள்படுகிறது.  இடஒதுக்கீட்டை வலியுறுத்தக்கூடிய திராவிட இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தால் கல்வி நிலையங்கள் துவக்குவதை வரவேற்க வேண்டும். ஆனால் பாஜக பேர்வழிகள் கல்வி நிறுவனங்கள் துவங்குவதை வரவேற்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் கை ரேகை வைக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தைப் போல், குஜராத்தைப் போல் தாய் மொழியிலேயே தோல்வி அடைபவர்களாக இருக்க வேண்டும். அப்படி தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாரா?  செவித்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பள்ளி பழனியில் அறநிலையத் துறை சார்பில் துவங்கப்பட்டது. இவர் சொல்வதைப் போல் இது சதி செயல் என்றால், இந்த எளிய சிறப்புக் குழந்தைகள் எப்படி படிப்பார்கள்?   ஆண்கள் பாலிடெக்னிக் நிர்வாக கட்டிடம்  எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் 2017இல் 08.03.இல் திறந்து வைக்கப்பட்டதே; அதுவும் சதிச் செயல் தானா?  பழனி ஆண்டவர் ஆண்கள் பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விடுதிகளில் தங்கி பயிலக்கூடிய மாணவர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு காலை மாலை கட்டணமில்லா உணவு வழங்கப்படுகிறது. ஒரு மாணவர் உணவு இல்லாமல் கல்வியில் கவனம் செலுத்த முடியாது. கிராமப்புற மாணவர்கள் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இரண்டு வேலை உணவும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு விடுதியில் வழங்கப்பட்டால் அந்த மாணவன் மகிழ்ச்சியாக கல்வியைப் படித்து வாழ்க்கையில் முன்னேறுவான். இதையும் சதிச் செயல் என்று சொல்லி மாணவர்கள் பட்டினி கிடக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறாரா?  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முதலமைச்சர், சரியான பதிலடி கொடுத்ததன் காரணமாக “நான் கல்வி நிலையங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, வசதிகள் இருக்காது என்று தான் சொன்னேன்” என்று மாற்றி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்  அடிக்கடி குரலை மாற்றுவது போல் உள்ளது, எடப்பாடி பழனிசாமியின் பேச்சு.  ஜெயலலிதா சொன்னதைப் போல் செலெக்ட்டிவ் அம்னீசியா எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதோ, என்னவோ!  சமூக சேவை திட்டங்கள்  இன்றைக்கு சமூகம் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை முதியவர்களை காப்பது. இது மிக சிரமத்திற்குரியதாக மாறிக்கொண்டு வரக்கூடிய நிலையில் பழனியில் ரூ. 90 கோடியில் முதியோர் காப்பகம், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முதியவர்களை பாதுகாக்க கூடிய இல்லமாக மாறும். மாற்றுத்திறனாளிகளை, கவனிக்கப்படாமல் விட்டவர்களை, மனநிலை பாதித்தவர்களை பாதுகாக்கக் கூடிய இல்லம் என்பது பழனியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது.  இசைக்கல்லூரி  இன்றைக்கு அனைத்து திருமணங்களுக்கும் விழாக்களுக்கும் முதலில் வாசிப்பது நாதஸ்வரம் தான். அந்த நாதஸ்வரக் கல்லூரி இன்றைக்கு பழனியில் சிறப்பாக செயல்படுகிறது. மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகிறது.  அறநிலையத்துறையின் சார்பில் சுமார் 59 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 22,450 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பெண்கள் கல்லூரி மட்டும் 4 உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை நன்கொடைகள் சட்டம் பிரிவு 36 படியும் பிரிவு 66 (1)(f) படியும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தொடங்கலாம். இதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் அவர்களால் நான்கு கல்லூரிகள் துவங்கப்பட்டிருக்கின்றன.  தமிழகத்தின் கல்வித் தரம்  தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் முதன்மை மாநிலமாக இருக்கிறது. இந்த நிலையை சீர்குலைத்து,  கல்வியில் தமிழ்நாடு பின் தங்கிய மாநிலமாக மாற வேண்டும், அதுதான் பாஜகவின் குரலாக இருக்கிறது. அதற்கு ஏற்பத்தான் எடப்பாடி குரலும் இன்றைக்கு ஒலித்து இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களை ஒழித்து கட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்லி இன்றைக்கு ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாடும் கேரளாவும் அதை எதிர்த்து இன்றைக்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன.  இப்படிப்பட்ட நிலையில் தான் எடப்பாடி பேசியதை பார்க்க வேண்டும். அவர்களது ஒரே நோக்கம் கல்வியில் யாரும் முன்னேறி விடக்கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ்-சின் தத்துவத்தை அமல்படுத்துவது தான்.  எனவே எண்ணற்ற தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகளால் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட சமூக நீதியுடன் கூடிய சிறந்த உயர் கல்வி நிலையங்களை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே அறநிலையத்துறையில் பயின்ற மாணவர்கள், அந்த குடும்பங்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். பாஜகவுக்கு எதிராக, அறநிலையத்துறையை பாதுகாக்க வேண்டும்; கல்வி நிலையத்தை பாதுகாக்க வேண்டும். அதிமுக - பாஜகவை தோற்கடிக்க வேண்டும்.