articles

img

தொழிலாளர் உழைப்பு திருடப்படுவதை தடுக்க போராட வேண்டும் - அ.சவுந்தரராசன் பேச்சு

தொழிலாளர் உழைப்பு திருடப்படுவதை தடுக்க போராட வேண்டும்

தருமபுரி, ஜூலை 18 – தொழிலாளர்களின் உழைப்பு திருடப்படுவதை தடுக்க உறுதிமிக்க போராட்டத்தை நடத்த வேண்டும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.  சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 16- ஆவது மாநில மாநாடு சிறப்புக் கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு  மாவட்டத் தலைவர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன்,  சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி. ரகுபதி உள்ளிட்டோர் உரையாற்றினர். அ.சவுந்தரராசன் பேசுகையில், தொழிலாளர்களின் உழைப்பையும் ஊதியத்தை திருடுவதுதான் முதலாளித்துவம். இதனை திருட்டு என்று தொழிலாளர்கள் நினைப்பதில்லை. முதலாளிகள் சுரண்டினால் அது திறமை என பேசப்படுகிறது. உழைப்புச் சுரண்டலை ஊதியச் சுரண்டலை திருட்டு என்று சிஐடியு சொல்கிறது. போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.800 வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளிக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பு திருடப்படுகிறது.  அதே போல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஒன்னே கால் லட்சம் பேருக்கு ரூ.500 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகவும் தொழிற்சங்கம் வைக்க அனுமதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் போராட்டத்தை முடக்கும் விதமாக காவல்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இதனை முறியடித்து தொழிலாளர்கள் ஒற்றுமையாக போராட்டம் நடத்தியதன் விளைவாக அது வெற்றிகண்டது.  உலக நாடுகளில் யுத்தம் இல்லை என்றால் செத்து விடுவோம் என்ற எண்ணத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா கல்வி, மருத்துவத்தை தாண்டி பாதுகாப்புக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. முதலாளித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் யுத்தம் நடத்துகிறது. பேச்சை கேட்காத நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிப்பது போன்ற செயல்களில் அமெரிக்கா ஈடுபடுகிறது. அப்படிதான் கியூபா நாட்டிற்கு தடைவிதித்துள்ளது. இராக் நாட்டில் பொருளாதாரத் தடைவிதிப்பால் கடந்த 10 ஆண்டுகளில் 15 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் இறந்துள்ளன. தற்போது நாட்டில் இளைஞர்களே இல்லை என்ற நிலையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. மருத்துவத்துறையில் மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து வரும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி அமெரிக்காவை எதிர்க்கிற நாடுகளை பொருளாதாரத் தடைவிதித்து பழிவாங்கி வருகிறது. இதற்கு எதிராகப் போராட வேண்டிய அவசியம் உள்ளது என்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிஐடியு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு ஆகஸ்ட் 5,6,7 ஆகிய தேதிகளில் தருமபுரியில் நடைபெறுகிறது. 7ஆம் தேதி தருமபுரி நகரில் செஞ்சட்டை பேரணி நடைபெறும். தமிழகம் முழுவதுமிருந்து செஞ்சட்டை பேரணிக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்தோடு வருவார்கள். இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளோம் என்றார்.