சாதியம் எனும் சாபக்கேடு
இந்திய சமூகத்தின் மிகப்பெரும் சாபக்கேடு சாதிய படிநிலைகள்தான் என்பது அனைத்து சமூக முற்போக்காளர்களும் அங்கீகரிக்கும் உண்மையாகும். நவீன அறிவியல் வளர்ச்சியின் பொழுதும் சாதியம் தன்னை தகவமைத்து கொண்டு அழிவுகளை உருவாக்கி வருகிறது. எனவேதான் ஜன நாயகப் புரட்சி வெற்றிபெற பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுடன் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகி றது. சமீபத்தில் அரங்கேறிய தலைமை நீதிபதிக்கு எதிராக காலணி வீச்சு மற்றும் தில்லி முதல்வரின் உயர்சாதி ஆதரவு பேச்சு சாதியக் கொடுமைகள் எந்த அளவுக்கு புரையோடி நீடிக்கின்றன என்பதையும் இதற்கு இந்துத்துவா கருத்தியல் அடித்தளமாக உள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டி யுள்ளன.
தில்லி முதல்வரின் கொடூர உரை
தில்லி முதல்வர் ரேகா குப்தா சமீபத்தில் தனது உரையில் “சமூகத்தில் அறிவின் ஜோதியை ஏற்றி வைப்பவர்கள் பிராமண சமூகம்தான்” என திருவாய் மலர்ந்துள்ளார். பிராமண சமூகம் வன்முறையை தவிர்ப்பவர்கள் அல்ல என கீழ்க்கண்டவாறு அவர் கூறுகிறார்:
“அவர்கள் வேதங்களை மட்டுமல்ல; ஆயுதங்க ளையும் வணங்குகின்றனர். ஆயுதங்கள் மற்றும் வேதங்கள் மூலமாகவே இன்று சமூகத்தையும் நாட்டை யும் காக்க முடியும்”
அவர் மேலும் கூறுகிறார்:
“எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூ கத்தின் முன்னேற்றத்துக்காக செயல்பட வேண்டும்.”
சாதி மதங்களுக்கு அப்பால் செயலாற்ற வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தின் படி உறுதி மொழி யேற்று முதல்வர் பதவியில் அமர்ந்த இவரின் இந்த உரை நாடு முழுவதும் விமர்சனங்களை விளை வித்தது. இந்த உரையை ஆதரித்தும் பலர் கருத்து களை வெளிப்படுத்தினர் என்பதும் கவலையுடன் கவனிக்க வேண்டிய ஒன்று. இதுவரை பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ இதனை கண்டிக்க வில்லை. அதில் ஆச்சர்யமும் இல்லை. எனினும் இவ்வாறு பேசியது ரேகா குப்தா மட்டுமல்ல. அர்ச்சக ராக பிரதமரே முன்நின்று தொடங்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் விழாவின் பொழுது பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் “முதலில் பிறந்தவ னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறினார். முதலில் பிறந்தவர் யார் என மோகன் பகவத் கூறியது வர்ணாசிரமம் அறிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதே போல மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா “தமது பிறப்பின் சிறப்பாலேயே பிராமணர் கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைகின்ற னர்” என பேசினார். இத்தகைய உரைகள் வெறும் ஒரு சமூகத்தை உயர்த்துவது மட்டுமல்ல; அடிப்படையில் வர்ணாசிரமத்தையும் சாதியத்தையும் முன்னெடுக்கும் நோக்கமும் அதன் வழியாக இந்துத்துவா கருத்தி யலை நிலைநாட்டும் இலக்கையும் கொண்டது.
வர்ணாசிரமமும் சாதியமும்!
சிந்து சமவெளி நாகரிகம் மறையத் தொடங்கிய பின்னர் உருவான ஆரிய நாகரிகம் வர்க்கச் சுரண்ட லை நியாயப்படுத்த முதலில் ஆரியர்- ஆரி யரல்லாதோர் எனும் பிரிவினையையும் பின்னர் நால் வர்ணத்தை நிலைநிறுத்தும் வர்ணாசிரமத்தை யும் உருவாக்கியது. அடித்தட்டில் இருந்த சூத்தி ரர்களின் உழைப்பை முற்றிலும் சுரண்ட உருவாக்கப் பட்டு நிலைநிறுத்தப்பட்ட வர்ணாசிரமத்தின் முதல் இரு படிநிலைகளை பிராமணர் பிரிவும் சத்திரியர் பிரிவும் ஆக்கிரமித்துக் கொண்டன. எனினும் கி.பி நான்காம் நூற்றாண்டில் குறிப்பாக குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் வர்ணாசிரமம் வலுவிழந்தது என டி.டி. கோசாம்பி தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். வர்ணா சிரமம் அழியவில்லை. எனினும் பின்னுக்கு சென்றது. நிலக்கொடைகள் மூலம் பெற்ற தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற பிராமணர்கள் சூத்திரர்களின் உழைப்பை பயன்படுத்தினர். இதன் விளைவாக சூத்திரர்களில் ஒரு பிரிவினர் (அனை வரும் அல்ல) வர்ணாசிரமத்தின் பிடியிலிருந்து விடு தலை பெற்றனர். எனவே வர்ணாசிரமம் சற்று பின்னுக்கு சென்றது. அந்த இடத்தை சாதியம் ஆக்கிர மித்துக் கொண்டது. நூற்றுக்கணக்கான சாதிகளும் உட்சாதிகளும் உருவாயின. வர்ணாசிரம கட்ட மைப்புக்குள் சிக்கியிருந்த சூத்திர உழைப்பாளிகள் இப்பொழுது சாதிய கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டனர். ஒன்றோடொன்று இணைந்த வர்ணா சிரமம்/ சாதியம் ஆகிய இரு கட்டமைப்புகளிலும் பிராமணியம் மற்றும் சத்திரியம் ஆளும் வர்க்கங்க ளின் பிரிவினராக உயர் இடத்தை தக்க வைத்துக் கொண்டன. இன்றைய இந்தியா என அறியப்படும் பூகோளப் பகுதியை ஆண்ட எவரும் வர்ணாசிரமத்தையோ அல்லது சாதியத்தையோ அகற்ற முன்வரவில்லை. இந்து மதம்- இஸ்லாமின் ஒற்றுமைக்காக தன் சொந்த சன்னி பிரிவின் பல ஆன்மீகவாதிகளுடன் முரண்பட்ட அக்பர் பேரரசர் கூட சாதியத்தையோ அல்லது அது முன்வைத்த உடன்கட்டை ஏறுதல் போன்ற நடை முறைகளையோ தடுக்கவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் ராஜபுத்திரர்கள் போன்ற சத்திரிய பிரிவினரின் எதிர்ப்பை அவர் சந்திக்க நேரி டும். தனது ஆட்சியையும் அரசியல் மேலாதிக்கத்தை யும் தக்க வைத்துக் கொள்ள அக்பரே கூட சாதியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்த்தார். வர்ணாசிர மத்தால் பாதிக்கப்பட்ட பிரிவினரையும் இஸ்லாமியர்க ளையும் தன் படையின் கீழ் திரட்டிய மராட்டிய வீரர் சிவாஜியும் இதனை செய்ய இயலவில்லை. நவீன உலக நாகரிகத்தின் பிதாமகர்கள் என தம்மை அழைத்துக் கொண்ட ஐரோப்பியர்களும் இந்தியா வை ஆண்ட பொழுது அங்கொன்றும் இங்கொன்றும் சில நடவடிக்கைகள் எடுத்ததை தவிர அடிப்படையில் சாதியத்தை அகற்ற முன்வரவில்லை. இந்த அனைத்து கட்டங்களிலும் பிராமணர்க ளும் சத்திரியர்களும் ‘உயர்ந்த’ இடத்தையே பெற்றி ருந்தனர். ஜோதிபா பூலே/ பெரியார்/ அம்பேத்கர், பொதுவுடமை இயக்கம் உட்பட பல அமைப்புக ளின் முனைப்புகள் வர்ணாசிரமத்தையும் சாதியத்தை யும் ஓரளவு தடுத்து நிறுத்தினாலும் இந்த ஆழமான கருத்தியல் பாஜக ஆட்சியில் மீண்டும் வன்மத்தோடு முன்னெடுக்கப்படுகிறது. வர்ணாசிரமம் இந்து மதத்தின் முக்கிய கட்டமைப்பு எனும் கோல்வால்கரின் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது. இதன் வெளிப் பாடுதான் மோகன் பகவத்/ ஓம் பிர்லா/ ரேகா குப்தா ஆகியோரின் உரைகள். சங் பரிவார கருத்தியல் என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டு மல்ல; இந்துக்களிலேயே பிற்படுத்தப்பட்ட/ தலித்/ ஆதிவாசி மக்களுக்கும் எதிரானது எனும் உண்மை யை ரேகா குப்தாவின் உரை வெளிப்படுத்துகிறது.
தலைமை நீதிபதி மீது தாக்குதல்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணியை வீசியவர் சனாதனத்தை பாதுக்காக்கவே அந்த செயலை செய்ததாகவும் அந்த செயலை செய்யுமாறு கடவுள்தான் தன்னை தூண்டி னார் எனவும் கூறியுள்ளார். இவர் உயர்சாதியை சேர்ந்தவர் என பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. தலித் பிரிவை சேர்ந்த ஒருவர் நீதித்துறையின் தலை மைப் பொறுப்பில் இருப்பதை இவர்களால் பொ றுத்துக் கொள்ள இயலவில்லை. காலையில் நிகழ்ந்த இந்த கொடுமைக்கு இரவில்தான் பிரதமர் கண்டனம் தெரிவித்தார். இந்த நிகழ்வு திடீரென நடந்தது அல்ல; இதற்கு முன்பு “தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய் யுங்கள்” எனும் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு கவாய் அவர்களை இழிவுபடுத்தியும் மிரட்டியும் ஏராளமான பதிவுகள் போடப்பட்டன. உதாரணத்துக்கு அஜீத் பார்தி எனும் வலதுசாரி ஆதரவாளர், கவாய் இந்துக் களை வெறுக்கும் மோசமான நபர் என குறிப்பிட் டார். மேலும் விஷ்ணுவை எதிர்த்த பிரகலாதனின் தந்தையை பிரகலாதனுக்கு ஆதரவாக கடவுள் அழித்தார் என்பதை குறிப்பிட்டு “நீங்கள் ஒரு சாதா ரண அம்பேத்கரிய மனிதர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என பதிவு போடப்பட்டது. இதே நபர் காலணி வீச்சுக்கு பின்னர் “திரு கவாய் அவர்களே! நூலிழையில் நீங்கள் தப்பித்து விட்டீர்கள். இது தொடக்கம்தான்! நீதிபதிகள் திருந்தவில்லை எனில் அடுத்து வீதிகளில்தான் நிகழ்வுகள் நடக்கும்” என பதிவு போட்டார். இப்படி ஏராளமான பதிவுகள் சுற்றில் இருந்தன.
மோடியையே விமர்சித்த சங் பரிவாரத்தினர்
பிரதமரின் கண்டனம் சங் பரிவாரத்தினரை கட்டுப்படுத்தவில்லை. மாறாக மேலும் மேலும் தலைமை நீதிபதியை இழிவுபடுத்தினர். “ஒவ்வொரு இந்தியனும் இந்த நிகழ்வு குறித்து கோபத்தில் உள்ள னர்” என பதிவிட்ட மோடியைக் கூட அவர்கள் “உங்களது கருத்தைக் கூறுங்கள்; மற்ற இந்தியர்க ளுக்காக பேசாதீர்கள்” என விமர்சித்தனர். காலணியை வீசிய ராகேஷ் கிஷோர் தனது செயலுக்கு சிறிது கூட வருந்தவில்லை என்பது மட்டுமல்ல; மாறாக தனது செயலை நியாயப்படுத்தினார். கவாய் ஒரு இந்து அல்ல; அவர் புத்த மதத்தவர் எனவும் விமர்சித்தார். இந்துத்துவா கருத்தியல் இந்திய மதங்களான பவுத் தம்/ சமணம்/ சீக்கியம் ஆகியவற்றுக்கும் எதிரானது என்பதை ராகேஷ் கிஷோரின் பேச்சு நிலைநாட்டுகிறது. இந்துத்துவா கருத்தியல் வெற்றி பெற வேண்டு மானால் அது சாதாரண மக்களின் பொதுச் சிந்தனை யின் பிரிக்க முடியாத பகுதியாக மாற வேண்டும், அதற்கான முயற்சி மேற்கொள்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநாட்டு தீர்மானம் குறிப்பிடு கிறது. அப்படி பொதுச் சிந்தனையின் ஒரு பகுதியாக மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையே ரேகா குப்தாவின் உரையும் தலைமை நீதிபதி மீதான தாக்குதலும் நிரூபிக்கின்றன. இவற்றுக்கு காரண மான இந்துத்துவா கருத்தியலை முறியடிக்க பன் மடங்கு கூடுதல் முனைப்புடன் செயலாற்ற வேண்டிய சவாலும் அவசியமும் முற்போக்காளர்களுக்கு உள்ளது என்பதை கூறத் தேவையில்லை.