articles

img

புதுச்சேரி ஜனநாயக அரசியலை விழுங்கும் பாஜகவின் ஆக்டோபஸ் பாணி அரசியல் - வெ.பெருமாள்

புதுச்சேரி: ஜனநாயக அரசியலை விழுங்கும்  பாஜகவின் ஆக்டோபஸ் பாணி அரசியல்

இந்திய ஒன்றியத்தில் பாஜக அதிகாரத்திற்கு வந்த பின் அரசியலமைப்புச் சட்டம் சிதைக்கப்பட்டு வருகிறது. கூட்டாட்சி  முறையும், ஜனநாயக அரசியலும் கேலிக்கூத்தாகி விட்டது. தேர்தல் ஆணையம், அமலாக்கப் பிரிவு, மத்திய புலனாய்வு அமைப்புகளை தனது அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துகிறது. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத பாஜக தனது கட்சி மற்றும் ஆட்சியை நிறுவுவதற்கு ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது . 2014 புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒரு நியமன எம்எல்ஏ-வாக நுழைந்த பாஜக, தற்போது கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு வந்துள்ளது. 2026இல் முழு அதிகாரத்தை கைப்பற்ற சொந்த கட்சிக்குள் நிலவும் பதவிச் சண்டையைத் தீர்ப்பதற்குப் புதிய தாக 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம், அமைச்ச ரவை மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இது சட்டம் மற்றும் நடைமுறை மரபுகளை மீறிய, சமூக நீதிக்கு எதிரான செயலாகும். பாஜகவின் ஆக்டோ பஸ் பாணி அரசியலை ஜனநாயக உணர்வு கொண்ட மாநில மக்கள் விரும்பவில்லை.

பின் வாசல் வழியாக பேரவையில் நுழைந்த பாஜக

13 ஆவது சட்டப்பேரவை காலத்தில் (2011-2016) என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. ஒன்றிய காங்கிரஸ் அரசு நியமன உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. 2014இல் ஒன்றிய பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்த பின்னணியில் ஒரு நியமன உறுப்பினர் பதவியை பாஜவுக்கு விட்டுக் கொடுத்தது. இரண்டு நியமன எம்எல்ஏக்கள் பதவியை என். ஆர். காங்கிரஸ் பெற்றது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் மூன்று நியமன எம்எல் ஏக்கள் பதவிகளையும் பாஜக பறித்துக் கொண்டது. மோடி அரசின் ஜனநாயக படுகொலையை எதிர்த்து 4.7.2021இல் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் இரவோடு இர வாக ஆளுநர் கிரண்பேடி நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மக்கள் பேராத ரவுடன் பந்த் போராட்டம் வெற்றி பெற்றது. இந்நிலை யில் நியமன எம்எல்ஏக்கள் விஷயத்தில் தனக்கு நேரடி தொடர்பு இல்லை என்ற உண்மையை ஆளுநர் கிரண்பேடி போட்டு உடைத்தார்.

பாஜகவின் ஆட்சிக்கவிழ்ப்பு சூத்திரம்

 காங்கிரஸ் -திமுக கூட்டணி ஆட்சி, ஒன்றிய பாஜக அரசு மற்றும் ஆளுநரால் முடக்கப்பட்டது. ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை பாஜக வளைத்தது. பதவியை ராஜினாமா செய்ய வைத்து காங்கிரஸ் அரசை பலவீனப்படுத்தியது. 2021 ஜனவரி 17இல் நியமன உறுப்பினர் சங்கர் மறைவைத் தொடர்ந்து 29.1.2021இல் தங்கவிக்ரமன் என்ற நபர் நியமன எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டார். கூடுதல் ஆளு நராக தமிழிசை சௌந்தர்ராஜன் 17.2.21 இல் பொறுப் பேற்றார். அன்றைய தினமே 22.2.2021இல் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டு உரிமை உண்டு என சபாநாயகர் அறிவித்த நிலை யில், ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்து ஆளுநரி டம் ராஜினாமா கடிதம் அளித்தனர். புதுச்சேரியில் ஒன்றிய பாஜக ஆட்சியில் 30 ஆண்டுகளுக்கு (1990க்கு) பின் ஆட்சியை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.  பிரதமர் மோடி 25.02.2021 அன்று புதுச்சேரி தேர்தல் பரப்புரைக்கு வருகை தந்தார். அவர் தனது உரையின் துவக்கத்தில் “புதிய திட்டங்களை துவக்க வும், காங்கிரஸ் கட்சியின் மோசமான நிர்வாகத்தில் இருந்து விடுதலை பெற்றதை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதை பார்ப்பதற்காகவும் வந்தேன்” என்று குறிப்பிட்டார். ஆட்சிக் கவிழ்ப்பு என்ற ஜனநா யகப் படுகொலை மேலிருந்து நன்கு திட்டமிடப் பட்டது என்பதை இதன் மூலம் உணர முடியும்.

பாஜகவின் துரோக அரசியல்

15ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் போக்குக் காட்டி வந்த என். ரங்கசாமி சுற்றி வளைக்கப்பட்டு, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆறு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. மேலும் ரங்கசாமி போட்டியிட்ட ஏனாம் மற்றும் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் சுயேச்சைகளை வெற்றி பெற வைத்து தன் பலத்தை அதிகரித்துக் கொண்டது. குற்ற உணர்வு இல்லாமல் கூட்டணி தர்மத்தை மீறி பாஜக துரோகம் இழைத்தது. ஆட்சி அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்வதில் இழுபறி நீடித்த நிலையில் 7.5.2021 இல் என்.ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுக்கவில்லை. முழு மையான ஆட்சி அமையவில்லை. கோவிட் பெருந் தொற்றால் முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 10.7.2021 இல் மூன்று நியமன உறுப்பினர் பதவிகளை பாஜக தன்னிச்சையாக நியமனம் செய்தது. ஆட்சியில் கூடுதல் பங்கை பெற பாஜக மீண்டும் துரோக மிழைத்தது. பாஜகவின் அதிகார வெறி அடங்க வில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் ஆட்சியைக் கைப்பற்ற அதிகா ரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. அதன் விளை வாகவே தற்போதைய அமைச்சரவை மாற்றமும், புதிய நியமன எம்எல்ஏக்கள் நியமனமும்  ஆகும்.

கோவில் நில மோசடி பேர்வழி அமைச்சரானார்

என்.ஆர் காங்கிரஸ், பாஜக ஆட்சியில் அரசு  அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூட்டுச் சேர்ந்து கோவில் நிலம் உள்பட தனிநபர் மற்றும் பொதுச் சொத்துக்களை அபகரிப்பது தீவிரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. புதுச்சேரி நகரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூபாய் 50 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவ ணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இவ் வழக்கில் மாவட்ட பதிவாளர், வட்டாட்சியர், சார்பதி வாளர் உட்பட பலர் கைது செய்யப்பட சென்னை உயர்நீதிமன்றம் நிலுவையில் உள்ள வழக்கில் தானாக முன்வந்து பாஜக எம்எல்ஏக்கள் ஜான் குமார்,  அவரது மகன் ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோரை சேர்த்தது. கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து பட்டாவும் பெற்ற அவரது குடும்பத்தினரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.  கோவில் நிலம் அபகரிப்பைக் கண்டித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு  உறுப்பினர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் தலைமை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போ ராட்டம் நடத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய ஜான்சன் குமார் மற்றும் ரிச்சர்ட் ஜான் குமாரை கைது செய்து விசாரிக்க வலியுறுத்தியது. இப்பிரச்ச னையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகள் அமைதி காத்தன. ஜான் குமார் எம்எல்ஏ சம்பந்தப்பட்ட நிலம் “காமாட்சி அம்மன் கோயில் நிலம்” என நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி சன்மானம் வழங்கப்படும் என சுவரொட்டி அச்சிட்டு வெளியிட்டார். மேலும், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என ஊடகத்திற்கு பேட்டியும் அளித்தார். மறுபுறத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஜான் குமார்,  அவரது மகன் ரிச்சர்ட் ஜான் குமார் மேற்படி நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க நீதி மன்றத்தில் உறுதி அளிக்கிறார்கள். பொதுவெளி யில் சவால் விடுவதும், நீதிமன்றத்தில் தண்டனை க்கு பயந்து தப்பிக்க முயற்சிப்பதும் ஜான் குமாரின் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.  நில மோசடியை உறுதி செய்த உயர்நீதிமன்றம், எம்எல்ஏக்கள் உறுதி அளித்தவாறு சொத்துக்களை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும். சிபிசிஐடி கண்காணிப்பாளரால் நடத்தப்படும் குற்றவியல் வழக்கு விசாரணையில் இருவரும் தங்களை உட் படுத்திக் கொள்ள வேண்டும் என 22.9.2023இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தர வுப்படி நில மோசடி தொடர்பான வழக்கில், ஜான்  குமார், ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் இணைக்கப் படவில்லை. ஜான் குமார் குடும்பத்தினர் பெயரில் பதியப்பட்ட மனைப்பட்டா இதுவரையில் ரத்து செய் யப்படவில்லை. இந்நிலையில் ஜான் குமார் எம்எல்ஏ 14.7.2025-இல் அமைச்சராக பொறுப்பேற் றது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மேலும் தலித் அமைச்சர் பதவியிலிருந்து விலக் கப்பட்டதன் மூலம் அதிகாரத்தில் தலித்துகளுக்கு இடமில்லாமல் போனது.

 நடைமுறை மரபுகளை மீறிய பாஜக  

புதுச்சேரி யூனியன் பிரதேச ஆட்சிப் பரப்புச் சட்டம் 1963 பிரிவு கீழ் நியமன உறுப்பினர் பதவி நியமிக்க வழிவகை செய்கிறது. யூனியன் பிரதேசச் சட்டம்1963 நிறைவேற்றப்படும் போது நாடாளு மன்றத்தில் நியமனம் தொடர்பாக ஆழமான நீண்ட  விவாதம் நடைபெற்றது. சிறுபான்மையை பெரும்பான் மையாக மாற்றவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் பயன்படுத்தக் கூடும் என்று கவலை எழுந்தது.  மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் விவாதங்களுக்கு விளக்கம் அளித்து சட்டம் நிறைவேற்றப்படுகிற போது கீழ் கண்ட வாக்குறுதிகளை அளித்தார். நியமன உறுப்பி னர் பதவி அவசியமானது. அதற்கான முன் நிபந்த னைகள் சட்டத்தில் இல்லை. ஆனால் விதிகளில் நியமன உறுப்பினர் பதவிக்கான தகுதிகள் சேர்க்கப் படும் என உறுதி அளித்தார். துரதிஷ்டவசமாக நியமன உறுப்பினர் பதவி தொடர்பான வழிகாட்டு விதிகள் ஏதும் இதுவரை உருவாக்கப்படவில்லை.  ஆனால் 1991- 1996 ஆட்சிக் காலம் தவிர்த்து, 1985 முதல் 2016 வரையில் நியமன உறுப்பினர்கள் மாநில அரசால் முன்மொழியப்படுகிறது. ஆளுநர் வழியாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நியமிக்கப்படுவது வழக்கமாகும். மேலும் நியமன உறுப்பினர்களின் நன்னடத்தை, நம்பகத்தன்மை உள்ளிட்ட விவரங்களும் அனுப்பி வைக்கப்படும். இத்தகைய நடைமுறை மரபுகளை பாஜக ஆட்சிக் காலத்தில் பின்பற்றவில்லை.  

நீதிமன்ற பரிந்துரைகளை அலட்சியப்படுத்துதல்

ஒன்றிய பாஜக அரசு தன்னிச்சையாக நியமன எம்எல்ஏக்களை நியமிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. டபுள்யு.எண்/16275,18788, 29591 ஆப் 2017 எண்ணிட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் முந்தைய நடைமுறை மரபுகளை பின்பற்ற வலியுறுத்தவில்லை. மாறாக, 23.3.2018இல் வழங்கிய தீர்ப்பில் நியமன உறுப்பி னர்கள் நியமனம் செல்லும் என்றும் நியமன உறுப்பி னர்களை நியமிக்க தெளிவான வரையறை உரு வாக்க நான்கு பரிந்துரைகளை நீதிமன்றம் முன்மொ ழிந்தது. ஆனால் பாஜக அரசு கடந்த ஏழு ஆண்டு களாக  நீதிமன்ற பரிந்துரைகளை  சட்டமாக்க முன்வர வில்லை. மாநில அரசும் உரிய சட்டத்திருத்தம் செய்யவோ (அ) சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றி ஒன்றிய அரசை வலியுறுத்தவோ தயாரில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் தான் ஒரு மாத காலத்திற் கான நியமன உறுப்பினர் பதவி, சுழற்சி முறையில் நியமன உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படுவது புதிய நடைமுறையாகும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் கள் ஓய்வூதியம் பெறுவதற்கான தெளிவான வழி காட்டுதல் இல்லை. மிக  குறுகிய நாட்கள் நியமன உறுப்பினராக இருந்தாலே ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் பெற முடியும். மேலும் கூட்டணி கட்சிக் குள் தொகுதி பங்கீட்டை சமன் செய்யவும், கட்சிக்குள் நிலவும் பதவிச் சண்டையை தீர்ப்பதற்கும், சுழற்சி முறையில் நியமன எம்எல்ஏக்களை நியமிப்பது ஜன நாயக விரோதச் செயலாகும். மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது.  இவ்வாறு பாஜக தனது அரசியல் மற்றும் ஆட்சியை நிலைநிறுத்த ஜனநாயக அரசியலை விழுங்கிவருகிறது. இரட்டை இன்ஜின் ஆட்சியில் புதுச்சேரி பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும் என்பது பொய்த்துப் போனது. கூடுதல் நிதி உதவி, மாநில அந்தஸ்து கிடைக்கப் பெறவில்லை. தேர்தல் வாக்கு றுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வேலையின்மை  அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் புழக்கம் மாநிலத்தில் அமைதியைச் சீர்குலைத்து வருகிறது. ஊழல் முறைகேடு, கோவில் மற்றும் பொதுச்சொத்துக்கள் அபகரிப்பு தீவிரப் பிரச்சனையாக மாறியுள்ளது. அமைச்சரவை மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றம் செய்து கட்சிக்குள் பதவிச்சண்டையை தணித்தா லும் அதிகாரத்தில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அகற்றப்படுவது தவிர்க்க முடியாது.