ஞாயிறு, நவம்பர் 29, 2020

tamilnadu

img

புதியதோர் உலகை உணரச் செய்த ‘அறம்’

திருநெல்வேலியில் 1965 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் மாலைப் பொழுதில் கல்லூரியிலிருந்து விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த என்னை சந்தித்த  பள்ளி சரித்திர ஆசானும், அரசியல் ஆசானுமாகிய தோழர் அறம்அவர்கள், நெல்லை சந்திப்பிலுள்ள ம தி தா இந்து கல்லூரி உயர்நிலைப்பள்ளிக்கு எதிரேயிருந்த இளங்கோ ஸ்டோருக்கு அழைத்துச் சென்றார் .

அவர் நெல்லைக்கு வரும் போதெல்லாம்  தோழர்கள் ஏ. நல்லசிவன் , சு. பாலவிநாயகம், வே. மீனாட்சி சுந்தரம் , தொ. மு. சி. ரகுநாதன், பேரா. நா. வானமாமலை , வழக்கறிஞர் என். டி. வானமாமலை, சிந்துபூந்துறை அண்ணாச்சி சண்முகம் பிள்ளை , ஓவியர் இசக்கி அண்ணாச்சி போன்றோரிடம் என்னை அறிமுகம் செய்து வைப்பது  வழக்கம் .அன்றும் அதே  போன்று இளங்கோ ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் தோழர் பரமசிவம், சிந்துபூந்துறை கிட்டு என்ற தோழர் கிருஷ்ணன் ஆகியோரிடம்  என்னை அறிமுகம் செய்து வைத்தார்.எப்போதும் பரபரப்பாக  இயங்கிக் கொண்டிருக்கும்,  மக்கள் நடமாட்டமுள்ள பாதையிலிருக்கும் இளங்கோ ஸ்டோரில்  தாமரை, ஜனசக்தி, தீக்கதிர் உள்ளிட்ட  இடதுசாரி இலக்கிய - அரசியல் ஏடுகள், புத்தகங்கள் கிடைக்கும்.
அக்காலத்தில் தீக்கதிர் வண்ணங்கள் எதுவுமற்ற வாராந்தரியாக வந்து கொண்டிருந்தது. அன்று வந்திருந்த தீக்கதிரை எங்களிடம் கொடுக்குமாறு பரமசிவம் அண்ணாச்சி சொன்னதும் கடைக்குள் நின்றிருந்த தோழர் கிட்டு ஓடிவந்து பேப்பரை உருவி எடுத்து எங்களிடம்தந்தார்.அதுவரை அப்பத்திரிக்கையை நான் எங்குமே பார்த்ததில்லை. வியப்போடும் ஆர்வத்தோடும் அதன் முதல் பக்கத்தைப் பார்த்தபடி நின்றிருந்த என்னிடம் தீக்கதிரையும் அம்மாதத்திய “ தாமரை” ஏட்டையும் கொடுத்துப் படிக்க சொல்லிவிட்டு தோழர் அறம் அவர்கள்   கழுகுமலைக்குச் செல்லும் கடைசி பஸ்ஸைப் பிடிக்க வேகமாகப் புறப்பட்டுச் சென்றார் . நானும் விடுதிக்குத் திரும்பினேன்.

இரவு வெகுநேரம் படித்த பின்பும் தீக்கதிரை முடிக்க முடியவில்லை.  கட்டுரைகளின் சில பாராக்கள் புரியவில்லை. ஆனாலும் புதியதொரு உலகத்தை உணரத் துவங்கினேன் . ஓரிரு தினங்களில் தீக்கதிரையும் தாமரையில் வந்த சிறுகதைகளையும் படித்து முடித்து விட்டேன்.பாளை வாய்க்கால் பாலம் அருகிலிருந்த அரசினர்  கல்லூரி மாணவர் விடுதியில் சேவியர்ஸ், ஜான்ஸ் ,ம.தி. தா .இந்துக் கல்லூரி ஆகிய மூன்று  கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வந்தனர். அவர்களில் இறுதியாண்டு படிப்பவர்கள்  சிலரும் இருந்தனர் .எனது அறையில் தங்கியிருந்த ஓரிரு மாணவர்கள் அப்பத்திரிக்கையை ஒரு புரட்டு புரட்டி விட்டு  “ இதென்ன பேப்பர் .. புதுசா இருக்கு..! உள்ளே படமேயில்லை..! ஒரே கட்டுரைகளா இருக்கு ...!! “ என்று சொல்லி என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள் .இரவு உணவுக்குப் பின்,  இரவுப் படிப்பு அமைதியாக ஒருமணி நேரம் நடக்கும்  . ஒன்பது மணிக்கு மேலே விடுதி வராந்தாவில் நடக்கும் சினிமா , அரசியல் விவாதங்களில் அனல் பறக்கும். திரைவசனங்களைப் பேசி மிமிக்ரி செய்யும் நண்பர்களும் திரைப் பாடல்களை இனிமையாகப் பாடுபவர்களும் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வார்கள் . தீக்கதிர் வாசிப்பு  அரசியல் விவாதங்களில் என்னை ஈடுபட வைத்தது. 

நாள் செல்லச் செல்ல எங்கள் விவாதங்களில்திரைப்படங்களின் ஆக்கிரமிப்பு குறைந்து, அரசியல் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துக்கொண்டது. விவாதங்களில் எனது குரல் ஓங்கி ஒலிக்கலாயிற்று.தீக்கதிரில் வரும் கட்டுரைகளே அதற்கான பின்புலம் என்று   மற்ற நண்பர்கள் உணர சில தினங்கள் பிடித்தன. அதன்பின்பு சிலர் என்னிடமிருந்து தீக்கதிரை எடுத்துச் சென்று படிக்கவும் ஆரம்பித்தனர் .புதிய உலகை எங்களைப் போன்ற மாணவர்களுக்கு தீக்கதிர் வாயிலாக உணர்த்திய ஆசிரியர் தோழர் அறம் என்ற அறம்வளர்த்த நாதன் அவர்கள், 2020 அக்டோபர் 17 அன்று தமது 90வது அகவையை எட்டியுள்ளார். ஆசிரியராக இருந்த போதிலும், பணி ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து தீக்கதிரின் கட்டுரையாளராக மிளிர்ந்தவர். எளிமையான நடையில் அரசியல் கட்டுரைகளை இடைவிடாமல் மொழிபெயர்த்து அளித்தவர். ஆசிரியர் இயக்க முன்னோடிகளில் ஒருவராகவும் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் அர்ப்பணிப்புமிக்க கம்யூனிஸ்ட்டாகவும் திகழ்ந்த தோழர் அறம் அவர்கள், தற்போது, திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். அவரது 90வது பிறந்த நாளையொட்டி ஏராளமான தோழர்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

===ஆர்.எஸ்.மணி===
 

;