world

img

நேபாளம்: சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம்

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து, 26 சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கியது அந்நாட்டு அரசு.

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு உட்பட்டு அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. பதிவு செய்யாத நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இதில், சீனாவின் டிக் டாக் நிறுவனம் மட்டும் பதிவு செய்திருந்தது.

பதிவு செய்யாத, யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின்போது, காத்மாண்டுவில் ஆயுத காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக், வேளாண் அமைச்சர் ராம்நாத் அதிகாரி, நீர் வழங்கல் துறை அமைச்சர் பிரதீப் யாதவ், சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை துறை அமைச்சர் பிரதீப் பவுடல் ஆகியோர் தங்கள் பதிவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், 26 சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கியது அந்நாட்டு அரசு. ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேபாளத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.