world

img

பாக் -ஆப்கன் போரை தூண்டுகிறாரா டிரம்ப்?

பாக் -ஆப்கன் போரை தூண்டுகிறாரா டிரம்ப்?

வாஷிங்டன், பிப்.28-   பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியை பாராட்டியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் - ஆப்கன் இடையிலான போரில் தலையிடுவீர்களா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நான் தலையிடுவது குறித்து பரிசீலிப்பேன். ஆனால் நான் பாகிஸ்தானுடன் நன்றாகப் பழகுகிறேன். அவர்களுக்கு ஒரு சிறந்த பிரதமர், ஒரு சிறந்த ராணுவத் தலைவர் உள்ளனர். பாகிஸ்தானில் நான் மிகவும் மதிக்கும் இரண்டு பேர் தலைவர்களாக உள்ளனர். பாகிஸ்தான் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது” என்றும்  கூறியுள்ளார். அதேபோல இப்போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.  பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் அம்னா பலோச்சுடன் பேசியதாக அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் எம் ஹூக்கர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “நாங்கள் பாக்-ஆப்கன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும் தலிபான் அரசின்  தாக்குதல்களுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ளும் பாகிஸ்தானின் உரிமைக்கு ஆதரவை வெளிப்படுத்தினோம்” என்றும்  ஹூக்கர் கூறியுள்ளார். இது ஆசிய பிராந்தியத்தில் அமைதியைக் கெடுக்க டிரம்ப்பே இரு நாடுகளையும் மோதுவதற்கு தூண்டி விடுகிறாரா எனவும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.  ஆப்கனும் பாகிஸ்தானும் நீண்டகால நண்பர்களாக இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு அதிகரித்தது. குறிப்பாக ஆப்கனில் தற்போது ஆட்சியில் உள்ள தலிபான்கள் தங்கள் நாட்டில் செயல்பட பாகிஸ்தான் இடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக ஆப்கனில் செயல்படும் பயங்கரவாதக்குழுக்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் பிப்.22 அன்று ஆப்கன் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம் மீது பாக் குண்டு வீசியது. இதனைத்தொடர்ந்து ஆப்கனும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த மோதல்கள்  பிப்.27 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ போராக வெடித்தது.