world

பாலஸ்தீன குழந்தைகளுக்கு அழுவதற்கு கூட வலிமையில்லை

பாலஸ்தீன குழந்தைகளுக்கு அழுவதற்கு கூட வலிமையில்லை

காசா,ஆக.28- காசாவில் உணவின்றி பசியால் வாடும் குழந்தைகள் பேசுவதற்கும், அழுவதற்கும்  கூட வலிமையில்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஐ.நா.வில் பேசியுள்ளார். காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பதற்காக அப்பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதுடன் அனைவரையும் நாட்டை விட்டு வெளி யேற்றத் துடிக்கிறது இஸ்ரேல் ராணுவம். இதற்காக அவர்க ளுக்கு கொடுக்கப்பட வேண்டிய அத்தியாவசிய உணவுப்பொருட்களைக்கூட கொடுக்க விடாமல் தடுத்து வருகிறது. இதனால் காசாவில் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. சில நகரங்களில் பஞ்சம் உருவாகிவிட்டதை அதிகாரப்பூர்வமாக ஐ.நா அவை அறிவித்துள்ளது. மேலும் இந்த பஞ்சம் இயற்கைப் பேரிடரால் உருவானதல்ல, முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது. உணவு கிடைக்காமல் பச்சிளம் குழந்தைகள் உள்பட பலரும் பலியாகிக்கொண்டிருக்கின்றனர். உணவு மையங்க ளை நோக்கிச் செல்லும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுப் படுகொலை செய்கிறது.  இந்நிலையில் ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற சர்வதேச தொண்டு நிறுவன அமைப்பின் தலைவர் ஆஷிங், காசாவில் குழந்தைகளின் நிலை குறித்து ஐ.நா. கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் பேசும் போது, காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக்கூட வலிமை இல்லை. பசியில் இருந்தும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை.  உணவு இல்லாதபோது உடல், உயிர்வாழ்வதற்கு உடலில் உள்ள கொழுப்பையே செரிமானம் செய்யத் துவங்கு கிறது. கொழுப்பு கரையும்பட்சத்தில் அடுத்து தசைகள் மற்றும் முக்கிய உறுப்புகளையே நமது உடல் சாப்பிட ஆரம்பிக் கிறது. இதனால் படிப்படியாக அவர்கள் உடல் வலிமையை இழந்து வலியுடன் மடிந்து போகிறார்கள் என்றார்.