world

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யாவில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்த  உக்ரைன் பகிரங்க அழைப்பு 

ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த உக்ரைன் பகிரங்கமாக தனது கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் முக்கியமான மலைப்பகுதி நகரமான சாசிவ் யாரைக் கைப்பற்ற பல மாதங்களாக இரு ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடந்து வந்தது. தற்போது அந்நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில் ரஷ்யாவில் ஆட்சியை கவிழ்க்க ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். 

எல் சால்வடார் ஜனாதிபதி பதவிக்கால வரம்பு நீக்கம்

எல்சால்வடார் நாட்டில் ஜனாதிபதி பதவிக்கால வரம்புகளை நீக்குவதற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி நயீப் புக்கேலின் கட்சி முழுப்பெரும்பான்மையுடன் உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டித்துள்ளதுடன் இரண்டாம் கட்ட தேர்தல்களையும் நீக்கும் வகையில் அந்நாட்டு   அரசியலமைப்பு சட்டத்தை திருத்தியுள்ளது.

ஒரு பில்லியன் டாலர்:  உக்ரைனுக்கு ராணுவ உதவி 

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கு அமெரிக்கா மேலும் ஒரு பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி கொடுப்பதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு ஒதுக்கப்பட்ட 852 பில்லியன் டாலர்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்கவே முதன்மை என சர்வதேச அமைப்புகளுக்கு கொடுத்து வந்த அத்தனை உதவிகளையும் வெட்டிய அமெரிக்கா தற்போது பெருமளவிலான பணத்தை போருக்கு கொட்டி வருகிறது.

மியான்மரில்  அவசரநிலை நீக்கம் 

கடந்த 4 ஆண்டுகளாக மியான்மரில் அமலில் இருந்த அவசரநிலை  தற்போது நீக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு  ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான அவசியமான நடவடிக்கையாக இந்த அவசர நிலை நீக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்காண்டு ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் விதித்துள்ள வரிகளால்  அமெரிக்க நிறுவனங்கள் நட்டம் 

டிரம்ப் விதித்துள்ள வரிகளால் அமெரிக்க பெரு நிறுவனங்கள் பல நூறு கோடி டாலர்கள்  நட்டத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனை காரணம்காட்டி இதுவரை 8,00,000 தொழிலாளர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளன. ஃபோர்டு நிறுவனம் டிரம்ப் வரிகளால் இந்த ஆண்டு 2 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனக்கு 4 முதல் 5 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜெர்மி கோர்பின் புதிய கட்சி துவக்கம் ;  6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆதரவு

லண்டன்,ஆக.1- பிரிட்டன் லேபர் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய சுயேச்சை எம்.பி.,யுமான ஜெர்மி கோர்பின் துவங்கிய கட்சிக்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போதைய பிரிட்டன் பிரதமராக உள்ள கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மி கோர்பினின் தலைமை யில் இடதுசாரித் தன்மையில் செயல்பட்ட லேபர் கட்சியைக் கைப்பற்றி தலைமை பதவியை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அங்கு நடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட கோர்பின் வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த மாதம் புதிய இடதுசாரி அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு ஜெர்மி கோர்பினுக்கு ஜாரா சுல்தானா என்ற எம்பியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.    இந்நிலையில் “உங்கள் கட்சி” (Your Party) என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள  இடதுசாரிக் கட்சியை அவர்கள் துவங்கியுள்ளனர். கட்சி துவங்கப்பட்ட சில நாட்களிலேயே சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்  அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த புதிய அரசியல் கட்சியானது  ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி மற்றும் நைஜல் ஃபராஜின் ரிஃபார்ம் யுகே என்ற இரண்டு கட்சிகளுக்கும் நேரடியாக சவால் விடுக்கும் எனவும் அடிமட்ட அளவில் இருந்து அதிகாரம் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் கட்சியை துவக்குவது குறித்து பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், பாலஸ்தீன ஆக்ஷன் என்ற பாலஸ்தீன  ஆதரவுக் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க லேபர் கட்சி மேற்கொண்ட பிரச்சாரத்தைத் தொடர்ந்து  அக்கட்சியிலிருந்து ஜாரா சுல்தானா எம்.பி., விலகி கோர்பினுக்கு ஆதரவு கொடுத்தார் அதன் பிறகு தான் புதிய கட்சி துவங்கும் முயற்சி வேகம் பெற்றது.  பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தாலும் பாலஸ்தீன ஆதரவு அமைப்பு களை முடக்குவது, இனப்படுகொலைகளை தடுக்காமல் அதனை ஊக்குவிப்பது, போருக்கும் ஆயுதங்களுக்கும் அதிகமாகச் செலவு செய்து விட்டு சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வறுமையை மேலும் அதிகரிக்கும் வகையில், நலத்திட்டங்களுக்கான  நிதிகளை வெட்டுவது என மக்கள் விரோத நடவடிக்கைகளையே லேபர் கட்சி செய்து வருகிறது. இதனால் மக்களுக்கு லேபர் கட்சியின் மீது அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்த அதிருப்தியானது ரிஃபார்ம் யுகே என்ற கட்சிக்கே சாதகமாக அமையுமே தவிர போதிய தீர்வுகளை வழங்காது என்பதால் புதிய கட்சியை கோர்பின் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் இந்த புதிய கட்சி தேர்தலில் வெற்றி பெரும் திட்டத்தோடு மட்டும் உருவாக்கப்பட வில்லை.மக்களுக்கு அதிகாரத்தை மீட்டுத் தரும் ஒரு பரந்த முயற்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என ஜெர்மி கோர்பின் மற்றும் ஜாரா சுல்தானா ஆகிய இருவரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.