மேலும் குறைந்த விலைக்கு ரஷ்ய கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 3-4 டாலர்கள் வரை ரஷ்யா குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா மிரட்டல் விடுத்த போது இந்தியா எண்ணெய் வாங்கும் நாடுகளின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துவிடக்கூடாதென ரஷ்யா விலையை குறைப்பதாகக் கூறப்படுகிறது.
பாரம்பரிய ரயிலில் சீனா சென்ற கிம் ஜோங் உன்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் சீனா வின் ராணுவப் பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்க அந்நாட்டின் பாரம்பரிய பச்சை நிற ரயிலில் சென்றுள்ளார். அந்நாட்டு முன்னாள் ஜனா திபதிகள் இந்த பச்சை நிற ரயிலில் தான் வெளி நாடுகளுக்கு செல்வார்கள். டிரம்ப்பின் முதல் ஆட்சியில் அவரை சந்திக்கவும், கடந்த ஆண்டு ரஷ்யா சென்ற போதும் கிம் இந்த ரயிலைதான் பயன் படுத்தினார். கிம் ஜோங் உன்னின் 14 ஆண்டு கால ஆட்சியில் சர்வதேச அளவில் நடைபெறும் மிகப் பெரிய நிகழ்வில் பங்கேற்க வெளிநாடு செல்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் : 14 பேர் பலி
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் சர்தார் அட்டாவுல்லா மெங்கா லின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பேரணி பொதுக் கூட்டம் நடத்தப் பட்டுள்ளது. அப்போது, நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா்கள் முதலிடம்
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிக ளின் எண்ணிக்கையில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இலங்கை சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு 1,98,235 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 2024 இல் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,64,609-ஆக இருந்தது. அதில் இந்தியர்கள் 46,473 பேர் என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன், ஜெர்மனி, சீனா, இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தோனேசிய தூதரக அதிகாரி சுட்டுக் கொலை
பெரு நாட்டிற்கான இந்தோனேசிய தூதரக அதிகாரியான செட்ரோ லியோனார்டோ என்பவர் அந்நாட்டு தலைநகர் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தனது பணியை முடித்துக்கொண்டு இல்லத்திற்கு இரவு நேரம் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அவரை மறித்து மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படுகொலைக்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
புலம்பெயர் மக்களை கைது செய்யும் காவலர்களுக்கு ஊக்கத்தொகை: இனவெறியை தூண்டும் வகையில் திட்டம் அறிவிப்பு
வாஷிங்டன், செப். 3- அமெரிக்காவில், குடியேற்ற விதிகளை மீறுபவர்களைக் கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் 1,000 டாலர் வரை ஊக்கத்தொகை வழங்கப் படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினரை அமெ ரிக்காவில் இருந்து துரத்துவதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக தனிப் பிரிவுகளை உரு வாக்கி அதிகாரிகளை நியமித்து நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அதிக நபர்களை கைது செய்து நாடு கடத்தும் அதிகாரிகளுக்கு வெகுமதிகளை அறி வித்துள்ளது அமெரிக்க அரசு. இதற்காக 287(ஜி) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்த அதிகாரிகளின் சம்பளம், சலுகை கள் மற்றும் சில கூடுதல் நேரச் செலவுகளை அமெரிக்க அரசாங்கமே செலுத்தும். மேலும் இதற்காக 10,000 புதிய அதிகாரிகள் மற்றும் முகவர்களை நியமிக்க, 50,000 டாலர் வரை நியமன ஊக்கத்தொகையையும் அறி வித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் அதிகாரிகளால் கைது செய்யப்படும் வெளிநாட்டவரின் எண் ணிக்கை மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப் பட்ட இலக்குகள் எவ்வளவு சதவீதம் அடை யப்படுகிறது என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு அதிகாரிக்கும் 500 டாலர் முதல் 1,000 டாலர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். 2025 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 23 வரை நாடு முழுவதும் சுமார் 1,68,000 வெளி நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் சுமார் 1,50,000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஊக்கத்தொகை திட்டமானது இனவெறியை அதிகரிக்கும் வெறுப்பு ணர்வை மேலும் அதிகரித்து விடும் என பல தரப் பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.