world

img

தீக்கதிர் உலக செய்திகள்

4.3 லட்சம் அர்ஜெண்டினர்கள்  வேலை இழக்கும் அபாயம்

அர்ஜெண்டினாவின் உள்நாட்டு உற்பத்திக்கும் சந்தைக்கும் பாதுகாப்பு உத்தரவாதமின்றி தாராளமயக் கொள்கையை மிலேய் தலைமையிலான அரசு மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனால் அந்நாட்டின் இறக்குமதி 12.4 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும். நாட்டின் மொத்த உற்பத்தி 2.6 சதவீதமாகவும், மொத்த கூடுதல் மதிப்பு 2.2 சதவீதமாகவும் (உற்பத்தி துறை) வீழ்ச்சியடையும். இதனால் அந்நாட்டில் சுமார் 4,30,000 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

டிரம்ப் வரி : அமெரிக்கர்களுக்கு  குடும்பச் செலவு எகிறுகிறது

அமெரிக்கா பிற நாடுகளின் பொருட்களுக்கு விதித்துள்ள அதிக இறக்குமதி வரி காரணமாக இவ்வாண்டு முதல் அந்நாட்டு மக்களுக்கு கூடுதலாக 2,400 டாலர்கள் வரை செலவாகும் என்று ஒரு ஆய்வில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேலையின்மை, அதிக வீட்டு வாடகை, குறைந்த ஊதியம், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு இது பெரும் சுமையாக மாறியுள்ளது. டிரம்ப் வர்த்தகப் போரை துவங்கிய போதே அது சாமானிய மக்களையே பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டது.

டெக்சாஸ் வெள்ளம் : பலி எண்ணிக்கை உயர்வு 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஜூலை 4 அன்று பெய்த கனமழையால் சில மணி நேரத்தில் குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் பயணிகளை  சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் 

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்ற 9 பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். அம்மாகாணத்தில் பல ஆண்டுகளாக பிரிவினைவாத அமைப்புகளின் மூலமாக பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

டீப் பேக் காணொலிகளை  கட்டுப்படுத்த தனியுரிமைச்சட்டம்

செயற்கை நுண்ணறிவு மூலமாக டீப் பேக் (Deepfake) ஒருவரை தவறாகவோ பாலியல் ரீதியாகவோ சித்தரித்து வெளியிடப்படும் வீடியோக்களை கட்டுப்படுத்தும் வகையில்  டென்மார்க் அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது.  இதன் மூலம் ஒரு தனிநபரின் உருவத்தையோ, முகத்தையோ, குரலையோ பயன்படுத்தி வீடியோ, புகைப்படங்களை தயா ரித்தால் அந்த தனிநபர் காப்புரிமையின்படி அதை அகற்றவும், இழப்பீடு பெறவும் கேட்கும் வகையில் தனியுரிமை சட்டத்தை இயற்றுகிறது அந்த அரசு.   

பிரேசில் மீது அமெரிக்கா வர்த்தகப் போர் : நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த முன்னாள் ஜனாதிபதி போல்சானரோ  

பிரேசிலியா, ஜூலை 11-  பிரேசில் மீதான 50 சதவீத வரிக்கு ஆதரவாக அந்நாட்டின் தீவிர வலதுசாரியும் அமெரிக்க ஆதரவாளருமான முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ ஆதரவு தெரிவித்துள்ளார்.  பிரேசிலின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்தும் வகையில் அந்நாட்டின் மீது டிரம்ப் விதித்த 50 சதவீத வரிக்கு எதிராகவும் தன் நாட்டின் இறையாண்மைக்கு ஆதரவாகவும் பேச வேண்டிய போல்சானரோ டிரம்ப்பின் பேச்சையும் வரியையும் வழிமொழிந்து அறிக்கை வெளியிட்டார்.   இந்நிலையில் ஆட்சிக்கவிழ்ப்பு குற்றவாளி யான அவருக்கு ஆதரவாக தான் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் பிரேசிலின் இறையாண்மைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஜெய்ர் போல்சானரோ அப்பட்டமான துரோகம் இழைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லூலா ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆட்சியை கவிழ்க்க பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ முயற்சி செய்த காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை காப்பாற்ற அமெரிக்கா தலையிட வேண்டும் என போல்சானரோ எதிர்பார்த்து வந்தார்.  அவரது மகன் எட்வர்டோ போல்சானரோ கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு டிரம்ப் நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பை உருவாக்கிக்கொண்டு தனது தந்தைக்கு ஆதரவாக டிரம்ப் நிர்வாகம் தலையிட வேண்டும் என்று தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் போல்சானரோவின் பிறந்த நாளுக்கு முன்னதாக டிரம்ப் அந்நாட்டின் மீது ஜூலை 9 அன்று 50 சதவீத வரியை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  போல்சானரோ மீதான ஆட்சிக்கவிழ்ப்பு குற்றச்சாட்டு வழக்கை “சூனிய வேட்டை” என டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார். மேலும் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரேசிலின் உள்நாட்டு அரசியலுக்குள் அத்துமீறி, தற்போது ஜெய்ர் போல்சானரோவுக்கு ஆதரவாக தலையிட்டுள்ளார்.  இந்த நடவடிக்கை பிரேசிலில் உள்ள தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவாகவும் பலம் சேர்க்கும் வகையிலும் உள்ளது. எனினும் பிரேசில் ஜனநாயகத்திற்குள் அமெரிக்காவின் அத்துமீறிய தலையீடு லூலாவுக்கு ஆதரவான கருத்துகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது கவனிக்கத்தக்கதாகும். இந்த வரிவிதிப்புக்கு காரணம் பிரேசில் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. அமெரிக்காதான் பிரேசிலிடம் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்துள்ளது என டிரம்ப் குற்றம் சாட்டினார்.  ஆனால் இது டிரம்பின் வழக்கமான ஒரு பொய்ப் பிரச்சாரம் எனவும் பிரேசில் தான் அமெரிக்காவிடம் அதிகம் வர்த்தகம் செய்கிறது. எனவே இந்த வரிகளுக்கு எந்தப் பொருளாதார நியாயமும் இல்லை என லூலா குறிப்பிட்டுள்ளார்.  மேலும் நாங்கள் டிரம்ப்பின் மிரட்டல்களுக்கு அடிபணியப்போவதில்லை. போல்சானரோ மீதான சட்ட நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை. அமெரிக்காவுக்கு பிரேசிலின் சட்டப்படி பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.   டிரம்ப் மற்றும் போல்சானரோவால் உரு வாக்கப்பட்ட இந்த குழப்பத்தை அவர்கள்தான் தீர்க்க வேண்டும் என்பதே பிரேசில் அரசின் நிலைப்பாடு.  இந்த வரி விதிப்பால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க, இந்தோனேசியா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த பிரேசில் அரசு திட்டமிட்டுள்ளது.