world

img

தாய்லாந்து - கம்போடியா எல்லை பிரச்சனை! ராணுவ மோதலாக வெடித்தது

தாய்லாந்து கம்போடிய நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை ராணுவ மோதலாக வெடித்துள்ளது. இந்த தாக்குதலில் பொது மக்கள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மிகவும் மோசமடைந்து வந்த நிலையில் ஜூலை 23 வியாழன்று காலை இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே துப்பாக்கி சூடு நடத்துள்ளது.

துப்பாக்கி சூடு நடந்த உடன் கம்போடிய பிரதமர் ராணுவ ரீதியாக பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என தாய்லாந்துக்கு எச்சரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் தாய்லாந்து மீதான தாக்குதலை கம்போடியா ராணுவம் துவங்கியது. முதல் கட்டமாக  தாய்லாந்தின் ராணுவ நிலைகள் மீது கம்போடியா ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ராணுவ நிலையல்லாத பொது மக்கள் இருந்த பகுதியிலும் பயங்கர பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு தாய்லாந்து ராணுவம் எப்-16 ரக போர் விமானம் மூலமாக கம்போடியா மீது வான்வெளி தாக்குதலை நடத்தியது.

கடந்த மே மாதமே இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கம்போடிய ராணுவ வீரர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லைப் பகுதியை மூடியதுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன.

மேலும் ஜூலை 16, 23, மற்றும் 24 ஆகிய நாட்களில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் எல்லைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்தனர். இந்த கண்ணி வெடித் தாக்குதலுக்கு கம்போடியா தான் காரணம், அவர்கள் தான் தாய்லாந்து ராணுவம் ரோந்து போகும் எல்லைப் பகுதியில் கண்ணி வெடிகளை வைத்துள்ளனர் என தாய்லாந்து குற்றம் சாட்டியது. மேலும் கம்போடியாவின் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியது. 

ஆனால் கம்போடியா இந்த குற்றச்சாட்டை ஏற்கவில்லை. கடந்த கால சண்டையில் கம்போடியா எல்லையில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளைத் தான் தாய்லாந்து வீரர்கள் மிதித்துள்ளனர். அந்நாட்டு வீரர்கள் தான் காட்டுப் பாதைகளிலிருந்து விலகி அந்தப்பகுதியில் சென்றுள்ளனர் எனவும் கம்போடியா தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தான் ஜூலை 24 அன்று இரு நாடு ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டு அது ராணுவ மோதலாக வெடித்துள்ளது. 

இந்த தாக்குதலுக்கு இரு நாடுகளுமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. 

இரு நாடுகளுக்கும் இடையேயான சரியாக வரையறுக்கப்படாத எல்லைப் பிரச்சினை தான் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு உறவுகளைப் பாதித்து வருவதுடன்  மோதலுக்கு காரணமாக உள்ளது.  

"1962 இல் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பானது அங்கோர் காலத்திய பிரியா விகார் கோவிலின் மீதான கட்டுப்பாட்டை கம்போடியாவிற்கு வழங்கியது. அப்போதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல்களும் தொடர்ந்து வருகின்றது.  

தற்போது இரு நாடுகளும் தூதர்கள், தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக்கொண்டனர். மேலும் தங்கள் நாடு மக்களையும் உடனடியாக பாதுகாப்பாக  நாடு திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.