articles

img

பேக்ஸ் சிலிக்கா : இந்தியாவின் தொழில்நுட்ப இறையாண்மை அடகு வைக்கப்படுகிறதா? - சேது சிவன்

பேக்ஸ் சிலிக்கா :  இந்தியாவின் தொழில்நுட்ப  இறையாண்மை அடகு வைக்கப்படுகிறதா? - சேது சிவன்

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற “ஏஐ இம்பாக்ட் சம்மிட்” மாநாட்டில், உபி-யைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று சீன ரோபோ நாயைத் தனது தயாரிப்பு எனச் சொல்லி ஏமாற்றியது பெரும் அவமானமாகப் பேசப்பட்டது. ஆனால், அந்த மாநாட்டின் திரைக்குப் பின்னால் அமெரிக்கா தலைமையிலான ‘பேக்ஸ் சிலிக்கா’ (Pax Silica) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச் சங்கிலி பாதுகாப்புக் கூட்டணியில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறித்துப் பெரிய விவாதங்கள் எழவில்லை. இந்தியா இதில் தன்னிச்சையாக இணைந்ததா அல்லது தள்ளப்பட்டதா என்பது முக்கிய கேள்வி ஆகும். சீன எதிர்ப்பு எனும் அமெரிக்க நரித் தந்திரம் செயற்கை நுண்ணறிவுத் துறைக்குத் தேவையான அரியவகைத் தாதுக்கள் மற்றும் மண் காந்தங்கள் மீதான கட்டுப்பாடு தற்போது சீனாவிடமே உள்ளது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஐரோப்பா என வளர்ந்த நாடுகளும் கூடத் தங்கள் ஏஐ வளர்ச்சிக்குச் சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் சீனாவை சார்ந்து இருக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடின்றி அரிய கனிமங்களை கொள்ளையடிக்கவும் சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையை தனது ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்காகவே அமெரிக்கா ‘பேக்ஸ் சிலிக்கா’வை உருவாக்கியுள்ளது. இதில், டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கம் தெளிவானது: அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருள்சார் நலன்களுக்கு உலக நாடுகள் வளைந்து கொடுக்க வேண்டும். இது ஒரு புதிய வகை ‘ஒருமுனை உலக ஆதிக்கம்’ (Unipolarity). அதாவது நவீன காலனித்துவப் பேரரசை உருவாக்குவதே டிரம்ப்பின் திட்டம். திருப்புமுனையா அல்லது சிக்கலா? இந்தக் கூட்டணியில் ஏற்கனவே பிரிட்டன், இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகள் இணைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒரு ‘நேட்டோ’ (NATO) நாடோ அல்லது அமெரிக்க ராணுவத் தளம் கொண்ட நாடோ அல்லாத இந்தியா, பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இருந்துகொண்டு இந்தக் கூட்டணியில் இணைந்திருப்பதுதான். இது இந்தியாவின் செமிகண்டக்டர் மற்றும் ஏஐ வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் எனப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆனால், இந்தியாவின் உள்நாட்டு ஏஐ விதிகளை அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கே இது வழிவகுக்கும். ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க மிரட்டலுக்குப் பணிந்த மோடி அரசு, இதில் மட்டும் இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் என்று எப்படி நம்ப முடியும்? தொழில்நுட்ப வல்லூறும் இந்திய நிலையும் தற்போது அரிய தாதுக்களைத் தோண்டி எடுக்கவோ, பிரிக்கவோ இந்தியாவிடம் போதிய தொழில்நுட்பம் இல்லை. இதற்காக நாம் அமெரிக்காவைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. தில்லி ஏஐ உச்சி மாநாட்டின் போது, டிரம்ப்பின் ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன், இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்க ஏஐ உள்கட்டமைப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றார். இது அமெரிக்கத் தொழில்நுட்பத்தைச் சந்தைப்படுத்துவதற்கான ஒரு வணிகத் திட்டமே தவிர வேறல்ல. அமெரிக்கா என்பது அனைவரையும் அரவணைக்கும் ‘மூத்த அண்ணன்’ அல்ல; அது நாடுகளைக் கொத்தித் தின்னும் ‘வல்லூறு’.

ஐடி புரட்சியின் கசப்பான அனுபவம் 1990களின் இந்திய ஐடி புரட்சி எப்படி இந்திய நிறுவனங்களை அமெரிக்க நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் ‘சேவை வழங்குநர்களாக’ (Service Providers) மாற்றியதோ, அதே நிலைதான் தற்போதும் ஏற்படப் போகிறது. இந்திய ஏஐ நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களாக மாறாமல், அமெரிக்க நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் நிலையிலேயே முடக்கப்படும் அபாயம் உள்ளது. மோடி அரசு உணருமா? காலனித்துவ ஆதிக்க மனப்பான்மை கொண்ட டிரம்ப்பின் ‘பேக்ஸ் சிலிக்கா’வில் இணைந்திருப்பதன் மூலம், இந்தியா தனது சொந்த ஏஐ வளர்ச்சிக் கனவைத் தானே சிதைத்துக் கொள்கிறது. அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் ஒரு தரப்பைத் தேர்வு செய்திருப்பது, இந்தியாவின் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு நலன்களுக்கு எவ்விதப் பலனைத் தரும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும். தொழில்நுட்ப இறையாண்மை என்பது அந்நிய நாடுகளின் தயவில் உருவாவதல்ல என்பதை அரசு உணர வேண்டும்.