காசாவை கைப்பற்றும் நோக்கத்தோடு இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காசாவில் இருந்து 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா அதிகாரிகள் கூறியதாவது:
காசாவில் இஸ்ரேலில் ராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காசாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலால், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு தப்பி ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த நகரின் பல்வேறு இடங்களில் பீரங்கி, போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக காசா நகரத்தில் இருந்து பொதுமக்கள் புலம் பெயரத் தொடங்கியுள்ளனர் என்று ஐ.நா அதிகாரிகள் தெரிவித்தனர்.
புலம் பெயர்வதற்கான செலவு வெகுவாக உயர்ந்துள்ளதால், சிலர் தங்களது உடைமைகள் மற்றும் குழந்தைகளை மட்டும் தூக்கி செல்கின்றனர்.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள தரவுகளில், காசா நகரத்தில் இருந்து 4.5 லட்சம் பொதுமக்கள் வெளியேறியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு, ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் படைகள் தற்போது காசா நகரத்தின் கிழக்கு புறநகர் பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அங்கிருந்து நகரின் மையப்பகுதிக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.