பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக நாடாளுமன்றம் சனியன்று கூடியது. ஆனாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஓட்டெடுப்புக்கு விடுவதில் பெரும் இழுபறி நீடித்து வந்த நிலையில், சபாநாயகர் ஆசாத் கைசர் பதவி விலகினார். இதனையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக், சபைக்கு தலைமை வகித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தினார்.
இதில் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 174 பேரின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (70), தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பிரதமராக பதிவியேற்ற யாரும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.