நேபாளத்தின் முகு மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாள நாட்டில் முகு மாவட்டத்தின் நேபாள்கஞ்ச் பகுதியிலிருந்து கம்கதி நகரை நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சயநாத்ராரா பகுதியைக் கடக்கும்போது பினா ஜயாரி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.தகவலறிந்து வந்த அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து காரணமாக பேருந்தில் பயணித்த 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், விபத்தில் படுகாயமுற்ற 16 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.