world

img

ஜப்பானில் தீவிர பழமைவாதியான சானே டகைச்சி பிரதமரானார்!

ஜப்பானில் தீவிர பழமைவாதியான சானே டகைச்சி பிரதமரானார்!

டோக்கியோ, அக். 21 -  ஜப்பானின் முதல் பெண் பிரதமராக, தீவிர பழமைவாதியான சானே டகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.  ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியடைந்தது. இதனால் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தனது அமைச்சரவையுடன் ராஜினாமா செய்தார். மேலும், கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.  இதன் பிறகு லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு சானே டகைச்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலிலும் சானே டகைச்சி போட்டியிட்டார். இவருக்கு கீழவையில் 237 வாக்குகள் கிடைத்தன. இது பெரும்பான்மைக்குத் தேவையானதை விட நான்கு வாக்குகள் அதிகமாகும். எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவரான யோஷிகோகோ நோடா 149 வாக்குகள் மட்டுமே பெற்றார்.  தனது வெற்றியை உறுதி செய்வதற்காக திங்களன்று (அக்.20) சானே டகைச்சி தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சியானது ஜப்பான் புதுமைக் கட்சியுடன் தனக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.  தீவிர பழமைவாதிகளான ஜப்பான் புதுமைக் கட்சியானது லிபரல் டெமாக்ரடிக் கட்சியையும் அதன் திட்டங்களையும் மேலும் தீவிரமான வலதுசாரித் தன்மைக்கு மாற்றும் வகையிலான அழுத்தத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.