world

img

ஊழல் குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் ஆஜராகும் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமி நேதன்யாகு தனக்கு சாதகமான செய்திகளை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், வெளிநாட்டு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாகவும், தன் நண்பர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருட்களை பரிசாகப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நெதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நெதன்யாகு இது அரசியல் காரணங்களுக்காக சொல்லப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் என மறுத்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்- பாலஸ்தீன போரின் விளைவாக இந்த வழக்கு விசாரணை 2 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் டிச.2023 இல் தொடங்கியது.

நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யாவ் காலண்ட் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அக்.8, 2023 முதல் மே 20, 2024 வரை செய்த போர் குற்றங்கள் தொடர்பாக கைது செய்ய ஆணை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை நவ.21 அன்று வெளியிட்டது. இது நெதன்யாகு மீதான உள்நாட்டு வழக்கு விசாரணையை மேலும் சிக்கலாக்கியது.

இதனைத் தொடர்ந்து நவ.24 அன்று நெதன்யாகுவின் சட்டக்குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்று அவரின் விசாரணையை 15 நாள்கள் தள்ளி வைக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பின்னர், விசாரணையை மேலும் தள்ளி வைக்குமாறு 12 அமைச்சர்கள் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த நிலையில் பாதுகாப்புக் கருதி இந்த வழக்கு விசாரணை தெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தின் கீழ் தளத்தில் உள்ள அறையில் இன்று நடைபெற உள்ளது. நெதன்யாகு நேரில் ஆஜராக உள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு, வாரத்திற்கு 3 முறை நெதன்யாகு சாட்சியங்கள் அளிப்பார் என்று இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிரிமினல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்படும் முதல் இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு இருப்பார் என்றும், அவருக்கு கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.