இமாச்சலப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப்பிரதேசம் மண்டியைச் சேர்ந்த நய்னா தாக்கூர் என்ற 11 வயது சிறுமி கடந்த 3 ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி மார்ச் 7 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம், உங்கள் குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் சில நோயாளிகளுக்கு பொருத்தமாக உள்ளது. எனவே உடல் உறுப்புதானம் செய்தால் 4 பேருக்கு உங்கள் மகள் மறுவாழ்வு அளித்ததாக இருக்கும் என கூறினர்.
இதையடுத்து பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க, சிறுமி நய்னாவின் 2 சிறுநீரகங்கள், 2 சிறுநீரக நோயாளிகளுக்கும், சிறுமியின் இரு கருவிழிகளும் 2 கண் பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
இதுதொடர்பாக டாக்டர் விபின் கவுஷல் கூறுகையில், "உறுப்பு தானம் தொடர்பாக அவரது குடும்பத்திடம் கோரிக்கை வைத்தோம். அவர்களின் சம்மதத்தைத் தொடர்ந்து, அவரது சிறுநீரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு, நீண்ட காலமாக டெர்மினல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்க்கை கிடைத்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்ட கார்னியாக்கள், இரண்டு கண் பார்வையற்ற நோயாளிகளின் பார்வையை கொடுத்துள்ளன" என அவர் கூறினார்.