world

img

தீக்கதிர் உலக செய்திகள்

காசாவில் போரை நிறுத்த  சிரில் ரமபோசா அழைப்பு 

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார். உலகம்  முழுவதும் பல நாடுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் மூலம் நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அடைந்தோம். அது போல் உலகின் பிற பகுதிகளில் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் நிற்கிறோம் எனவும் ரமபோசா தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலுக்கு  50,000 டன் ஆயுதங்கள் 

2023 அக்டோபர் 7 முதல் காசா, லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவத்திற்கு சுமார் 22 பில்லியன் டாலர்களுக்கு மேல் அமெரிக்கா செலவிட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி  2019 முதல் 2023 வரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்து வந்த ஆயுதங்களின் அளவு போருக்குப் பிறகு 78 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் வரை  50,000 டன்களுக்கும் அதிகமான ஆயுதங்களை கொடுத்துள்ளது.

மக்கள் தொகை  7.1 கோடி உயர்வு 

உலக மக்கள் தொகை உயர்வு குறித்து அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் மதிப்பீடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ஜனவரி 1 அன்று உலக மக்கள் தொகை சுமார் 809 கோடியாக (8,092,034,511) உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  2024 இல் மட்டும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை 7.1 கோடி உயர்ந்துள்ளது.2023 இல் உயர்ந்த  7.5 கோடி யை விட குறைவு என்பது  குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புக் கவுன்சில்  உறுப்பினரானது பாகிஸ்தான்

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் (UNSC) இரண்டு ஆண்டுகால தற்காலிக உறுப்பின ராக 2025 ஜனவரி 1 அன்று பாகிஸ்தான் பதவியேற்றுள்ளது. இந்த பதவி 2027 ஜனவரி 1 வரை நீடிக்கும். இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த  ஐ.நா., அவைக்கான பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், மிக முக்கியமான பிரச்சனைகளில் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்வார்கள். பாது காப்பு கவுன்சிலில் எங்கள் இருப்பு உணரப்படும் வகையில் எங்கள் செயல்பாடு அமையும் என்றார்.  

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் நாட்டு தலைநகர் மீது ஜனவரி 1 புத்தாண்டன்று அதிகாலை ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மட்டுமின்றி அதன் அருகிலுள்ள ஒரு மாவட்டத்திலும் தாக்குதல் நடந்துள்ளது. உக்ரைன் ராணுவம் அமெரிக்கா கொடுத்த ‘தாட்’ என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை பயன்படுத்த துவங்கியுள்ளது. எனினும் ரஷ்யா அந்நாட்டு தலைநகரில் துல்லிமயமான தாக்குதலை நடத்தியுள்ளது.

புத்தாண்டன்றும் தொடர்ந்த இஸ்ரேல் குண்டுவீச்சு : குளிரில் விறைத்து பலியாகும் காசா குழந்தைகள்

காசா,ஜன.1- 2025 வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1 அன்றும் இஸ்ரேல் ராணுவம் காசாவில் குண்டு வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 17 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2025 இல் இஸ்ரேல் தாக்குதலால் முதலில் படுகொலை செய்யப்பட்டது 8 வயதுள்ள ஒரு சிறுவன் ஆகும்.  காசாவில் டிசம்பர் மாதம் முதல் குளிர்காலம்  துவங்கி விட்டது. மிக அதிகளவிலான குளிரை தாக்குப்பிடிக்க போதிய பாதுகாப்பான தங்குமிடங்கள் காசாவில் இல்லை. ஐ.நா., வின் அகதிகள்முகாம், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி அழித்து விட்டது. குளிர்காலத்தில் தங்கள் உடலையோ, இருப்பிடத்தையோ வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள போதிய எரிபொருட்களோ மின்சாரமோ இல்லாமல் பாலஸ்தீனர்கள் தவித்து வருகின்றனர். மேலும் உடலை சுத்தம் செய்வதற்கு போதிய தண்ணீரும் இல்லை உடைகளும் இல்லை. அதனால் சுகாதாரமற்ற நிலைக்கு பாலஸ்தீனர்களை  இஸ்ரேல் ராணுவம் தள்ளி யுள்ளது. இதனால் காசாவில் கொடிய சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகி ஆயிரக்கணக்கான மக்கள் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடுமையான குளிரை எதிர் கொள்ள போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகள் பலியாகிவரும் கொடுமையும் நடத்துள்ளது. கடுங்குளிரால் உடைகள் ஈரப்பதமாகி உடல் வெப்பநிலை வேகமாக குறைந்து ஹைப்போதெர்மியாவால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. குளிர் தாங்கும் உடைகள் இல்லாததால் லேசான தோல் கொண்ட குழந்தைகளின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட முக்கியமான உடல் பாகங்கள்  2-4 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்த வெப்பநிலையில் 10-20 நிமிடங்களில் செயல் இழந்து மரணித்து விடுகின்றன.  இவ்வாறு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காசாவில் பலியாகியுள்ளன.