world

img

ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு – புவி வெப்பமாதலின் தாக்கம் என நிபுணர்கள் எச்சரிக்கை

உலகில் கொசுக்கள் இல்லாத நாடுகளில் ஒன்றாக இருந்த ஐஸ்லாந்தில், இம்முறை முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரின ஆர்வலர் பியோர்ன் ஹ்யால்டாசன், கடந்த வாரம் பல இரவுகளாக மது ஊறவைத்த கயிறுகளைப் பயன்படுத்தி வண்டு இனங்களைப் பார்வையிட்டபோது, மூன்று கொசுக்களை கண்டறிந்தார். அவற்றில் இரண்டு பெண் கொசுக்களும், ஒரு ஆண் கொசுவும் அடங்கும்.
அந்த கொசுக்கள் பின்னர் Culiseta annulata எனப்படும் இனத்தைச் சேர்ந்தவை என ஐஸ்லாந்து இயற்கை வரலாற்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வினம் குளிர்காலத்திலும் உயிர்வாழக் கூடியது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்லாந்தின் குளிரான வானிலை மற்றும் நிலைநிறுத்தப்பட்ட நீர்நிலைகள் இல்லாமை காரணமாக இதுவரை கொசுக்கள் பெருக இயலவில்லை. ஆனால் இவ்வருடம் அந்த நாட்டில் அசாதாரணமான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.
சாதாரணமாக மே மாதத்தில் 20°C-க்கு மேல் வெப்பநிலை நீடிப்பது அரிது. ஆனால் இம்முறை தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் 20°C-ஐத் தாண்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புவி வெப்பமாதலின் விளைவாக ஏற்பட்ட இந்த வெப்ப உயர்வே கொசுக்கள் ஐஸ்லாந்தில் தோன்றக் காரணமாக இருக்கலாம் என்றும், இது அந்நாட்டு சூழலியலில் பெரும் மாற்றத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.