world

img

வர்த்தகப் போர் தீவிரமடைந்தால் உலக வணிகம் 1.5 சதவீதம் வரை வீழும்

வர்த்தகப் போர் தீவிரமடைந்தால் உலக வணிகம் 1.5 சதவீதம் வரை வீழும்

 துவங்கியுள்ள வர்த்தகப் போரின் காரணமாக 2025 இல் உலகளாவிய சரக்கு வணிகம் 0.2 சதவீதம் வரை வீழும் என உலக வர்த்தக மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தொடர்ந்து வரிவிதித்து வர்த்தகப்போரை தீவிரப்படுத்தினால் சுமார் 1.5 சதவீதம் வரை கூட உலகளாவிய சரக்கு வணிகம் வீழும் என எச்சரித்துள்ளது. டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்துள்ள வரியை (சீனாவை தவிர) 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். எனினும் உலக வணிகம் இந்த ஆண்டு 0.2 சதவீதம் வரை வீழும் என எதிர்பார்ப்பதாக உலக வர்த்தக மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு முன் உலக வணிகம் 2.7 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டிருந்தது. அதனுடன் இந்த வீழ்ச்சியை ஒப்பிட்டுப்பார்த்தால் இது கடுமையான சரிவாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.  இந்த வரிகள் சர்வதேச அளவிலான வணிகக் கொள்கையில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். அப்படி உருவானால் நிச்சயமற்ற தன்மையால் மட்டுமே 0.8 சதவீதம் வரை  உலகளாவிய வணிக வளர்ச்சி குறையும் என கூறப்படுகின்றது.  குறிப்பாக வட அமெரிக்க நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதிகள் 12.6 சதவீதமும்  இறக்குமதிகள் 9.6 சதவீதமும் வீழ்ச்சியடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 2026 இல் உலகளாவிய வணிகம் 2.5 சதவீதம் வரை வளரும் என்று உலக வர்த்தக மையம் கணித்துள்ளது. ஆனாலும் இந்த அளவானது டிரம்ப் வணிகப்போரை துவங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட கணிப்பாகும். தற்போதைய வர்த்தகப் போரால் 2026 இல் வணிகம் குறையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சரக்கு வணிகத்தின் வீழ்ச்சியால் ஏற்படுகின்ற தாக்கம் டிஜிட்டல், நிதி போன்ற சேவை வணிகத்திலும் பெரும் சரிவுகளை ஏற்படுத்தும்.  2025 இல் உலக ஜிடிபியின் வளர்ச்சி 2.3 சதவீதமாகக் குறையும் என வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐ. நா அவை மாநாடு கணித்துள்ளது. உலக வர்த்தக மையத்தின் தலைவர் நொகோஸி ஒகோன்ஜோ-இவியாலா கூறுகையில், தற்போது உருவாகியுள்ள வணிகப் பதற்றங்கள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மேலும் அதிக நெருக்கடிகளையும் பாதிப்புகளையும் உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.