world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யா செல்கிறார் சீன ஜனாதிபதி

 சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மே 7 முதல் 10 வரை ரஷ்யா விற்கு அரசுமுறை பயணமாக செல்ல உள்ளார். ஹிட்லரின் நாஜி படையை ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான செம்படை வீழ்த்திய வெற்றி தின அணி வகுப்பில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த 3 நாட்களில்  ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இருதரப்பு வர்த்தகம் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அறி விக்கப்பட்டுள்ளது. 2025 சோவியத் யூனியன் ஹிட்லரின் நாஜி படையை வீழ்த்திய 80 ஆம் ஆண்டு நிறைவாகும்.  

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல்  : வாக்குப்பதிவு நிறைவு  

மே 6 காலை 7 மணிக்கு இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதன் பின் வாக்கு எண்ணும் பணிகள் துவங்கின. கடந்த  7 மாதத்தில் இது அந்நாட்டில் நடைபெறும் 3 ஆவது தேர்த லாகும். இந்த தேர்தல் முடிவில் 28 மாநகர சபைகளுக்கும் 36 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்கும் சுமார் 8,287 உள்ளாட்சி உறுப்பினர்கள் தேர்வாக உள்ளனர்.

அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்காமல் முடிவெடுத்த மெக்சிகோ ஜனாதிபதி

 போதைப்பொருள் கடத்தல் மாபியா கும்பல்களை கட்டுப்படுத்த அமெரிக்காவின் ராணுவ உதவியை மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா நிராகரித்துள்ளார். மெக்சிகோவில் பல்வேறு கும்பல்கள் போதைப்பொருள் கடத்தல் ஆயுதக்கடத்தல் செய்து வருகின்றன. இக்கும்பல் களால் உள்நாட்டு அமைதி சீர்குலைவை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கும்பலை கட்டுப்படுத்துவதாக கூறி தனது ராணுவத்தை மெக்சிகோவிற்கு அனுப்பி குழப்பத்தை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்ட நிலையில் தான் அதனை கிளாடியா சாதுர்யமாக மறுத்துள்ளார்.  

டிரம்ப் வர்த்தக கொள்கை : வாரன் பஃபெட் எச்சரிக்கை

வாஷிங்டன்,மே 6 - டொனால்டு டிரம்பின் வர்த்தகக் கொள்கையை அமெரிக்க முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட் கடுமையாக விமர்சித்ததுடன் எச்சரித்துள்ளார். அதிகரித்து வருகிற அமெரிக்காவின் வரிவிதிப்பு வர்த்தகத்தை “போராக” மாற்றிவிடும் என்று எச்சரித்துள்ளார். பங்குவர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் கோடீஸ்வரர்களின் கூட்டத்தில் பேசிய வாரன் பஃபெட் பிற நாடுகளின் மீது வரிகளை விதிப்பதை விமர்சித்ததுடன்  அவ்வரிவிதிப்பை அந்நாடுகளின் மீதான ஆயுதமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் பேசியுள்ளார். மேலும் உலக நாடுகள் செழிப்படையவும்  அமைதியான நிலைக்கும்  சமநிலையோடு இயங்குகிற வர்த்தகமே அவசியம் என்றும் பேசியுள்ளார். டிரம்ப் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது வர்த்தக வரி விதித்துள்ளார். சீனாவை தவிர பிற நாடுகளின் மீதான வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைத்து அறிவித்துள்ளார். எனினும் அடிப்படையாக விதிக்கப்பட்ட 10 சதவீத வரி நடைமுறையில் உள்ளது. இந்த இடைக்காலத்தில் வரி விதிக்கப்பட்ட நாடுகளை மிரட்டி தன்னுடன் வர்த்தகம் செய்ய பணிய வைத்து வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவைச் சேர்ந்த என்விடியா உள்ளிட்ட பல்வேறு முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவின் வரிவிதிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. சீனாவின் சந்தை தங்களுக்கு மிக முக்கியமானது என கடந்த வாரம் என்விடியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி கருத்து தெரிவித்தார்.  இந்நிலையில் வாரன் பஃபெட் டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் வர்த்தக நிலைப்பாடு அந்நாட்டை உலகளவில் தனிமைப்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.   சில நாடுகள் மட்டும் வெற்றி பெற்று மற்றவர்கள் தோற்கடிக்கப்படும் உலக அமைப்பு சரியானது அல்ல. இதனை உலக மக்கள் விரும்பாத நிலை ஏற்படும். அமெரிக்காவின் 30 கோடி மக்கள் மட்டும் வெற்றி பெற்றதாக பெருமைப்படும்போது, மீதமுள்ள 750 கோடி உலக மக்கள் அதனை விரும்பமாட்டார்கள் என்பதே என் கருத்து என பங்கு சந்தை முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசினார்.  இத்தகைய நிலை உலகளவில் பதற்றத்தையும் விரோதத்தையும் உருவாக்கி நீண்ட காலத்திற்கு எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கும்.  மேலும் அமெரிக்கா வடிவமைக்கக் கூடிய பொருளாதாரக் கொள்கை பரஸ்பர வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உலக பொருளாதாரம் எவ்வளவு நன்றாக வளர்கிறதோ நாமும் அவ்வளவு நன்றாக வளர்வோம். பாதுகாப்பாக உணர்வோம் என்று நான் நினைக்கிறேன். நாம் உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முயற்சிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். வர்த்தகம் எவ்வளவுக்கு எவ்வளவு  அதிகமான சமநிலையில் இருக்கிறதோ, அவ்வளவு நல்லது. முக்கியமான விஷயம் என்னவென்றால் வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.