கொலம்பியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள குக்குட்டா நகரிலிருந்து 13 பயணிகள் மற்றும் இரு விமானிகளுடன் ஒகானாவுக்கு சென்ற சதேனா விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக விமானத்துடனான தொடர்பை கட்டுப்பாட்டு மையம் இழந்துள்ளது. இதை தொடர்ந்து, விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு மீட்புக் குழு ஈடுபட்டது. அப்போது, விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்தில், கொலம்பியா நாடாளுமன்ற உறுப்பினர் டியோஜெனெஸ் குயின்டெரோ மற்றும் வருகின்ற தேர்தலில் போட்டியிட இருந்த வேட்பாளர் கார்லோஸ் சல்செடோ உட்பட 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
