tamilnadu

img

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு மாதர் சங்கம் ஆதரவு!

நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 12-இல்நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இந்தியாவில் இன்று நடைமுறையில் இருக்கும் அரசியல்–பொருளாதார சூழல், உழைக்கும் மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் மிகக் கடுமையான தாக்குதல்களை ஏற்படுத்தி வருகிறது. ஒன்றிய மோடி அரசு, கார்ப்பரேட் ஆதரவு, மதவெறி அரசியலின் துணையுடன், தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. அதன் உச்சமாகவே நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக, மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஒன்றிணைந்து பிப்ரவரி 12, 2026 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) தனது முழுமையான ஆதரவையும் பங்கையும் செலுத்த முடிவு செய்துள்ளது.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் – உரிமைகளின் பறிப்பு
இந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், “தொழில் செய்வதை இலகுவாக்குதல்” என்ற பெயரில், முதலாளிகளுக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்குகின்றன.
தொழிற்சாலை என்ற வரையறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, சுமார் 60% தொழிலாளர்களை சட்டப் பாதுகாப்பிலிருந்து வெளியேற்றுகின்றன.
100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் அரசின் அனுமதி தேவை என்ற விதியை 300 ஆக உயர்த்தி, ஆட்குறைப்பு, கதவடைப்பு ஆகியவற்றை முதலாளிகளின் விருப்பத்துக்கு விடுகின்றன.
“குறித்த கால வேலை” என்ற முறையை ஊக்குவித்து, நிரந்தர வேலை வாய்ப்புகளை அழிக்கின்றன. தொழிற்சங்க அமைப்பது, போராடுவது, வேலை நிறுத்தம் செய்வது போன்ற ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்றன. இவை அனைத்தும் தொழிலாளர்களை பாதுகாப்பற்ற, பயமுறுத்தப்பட்ட, அமைப்பற்ற நிலைக்கு தள்ளும் நடவடிக்கைகளாகும்.
இந்த சட்டத் தொகுப்புகள் பொதுவாக தொழிலாளர் வர்க்கத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பெண் தொழிலாளர்களை இரட்டைச் சுரண்டலுக்கு உள்ளாக்குகின்றன.
குறைந்தபட்ச ஊதிய சட்டப் பாதுகாப்பே இல்லாத நிலை, பெண்களை மிகக் குறைந்த கூலிக்குப் பணியாற்ற வைக்கும். இரவு நேரப் பணிக்கு “விருப்பத்தின் பேரில்” அனுமதி என்ற பெயரில், பெண் பாதுகாப்புக்கான அரசின் பொறுப்பு முழுமையாக கைவிடப்படுகிறது.
பெரும்பாலும் பெண்கள் பணிபுரிந்தாலும், அவர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க அரசு மறுக்கிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் – வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி போன்றவை – பெண்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. பெண்களின் உழைப்பு மலிவாகவும், பாதுகாப்பற்றதாகவும் மாற்றப்படுவது இந்த சட்டத் தொகுப்புகளின் மைய நோக்கமாக உள்ளது.
பெண் பிரச்சினைகள் தனிப்பட்டவை அல்ல; அவை அரசியல்–பொருளாதாரப் பிரச்சினைகள். வீட்டிலும், வேலை இடத்திலும், சமூகத்திலும் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், வர்க்கச் சுரண்டலோடு நேரடியாக இணைந்தவை. தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டம் என்பது பெண் விடுதலைப் போராட்டத்தின் அங்கமாகும். பெண் தொழிலாளர்கள் அமைப்புச்சாரா துறைகளில் அதிகம் இருப்பதும், குறைந்த ஊதியம் பெறுவதும், பாதுகாப்பற்ற பணிநிலைகளில் சிக்குவதும் தற்செயலானது அல்ல; அது இந்த அரசியல்–பொருளாதார அமைப்பின் விளைவு.
பெண்களின் உரிமையைப் பாதுகாக்க,
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க,
மதவெறி–பாசிச–கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக,
பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி அடையச் செய்ய தமிழ்நாட்டில் சக்தியாக பெண் தொழிலாளிகளை வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வைத்திட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.
மேலும், அன்றைய தினம் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பெருமளவு எண்ணிக்கையில் பெண்களைப் பங்கேற்க வைத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.