சீனா அமைத்து வரும் விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள 3 விண்வெளி வீரர்கள் அனுப்பட்டுள்ளனர்.
விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள, சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்ட சீனா, ராக்கெட்டுகள் மூலம் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான தளவாடங்களை விண்வெளிக்கு சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் விண்வெளி குழுவினரை விண்வெளிக்குச் சீனா அனுப்பியது. அவர்கள் 3 மாதங்கள் தங்கி விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளைச் செய்து விட்டு பூமிக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் சீனா 3 விண்வெளி வீரர்களை மீண்டும் தனது விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது. லாங்கு மார்ச் -2 எப் ராக்கெட் மூலம் ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங், யே குவாங்பு ஆகிய 3 வீரர்களும் விண்வெளிக்கு முதல்முறையாகச் சென்றனர். இதில் ஒரு பெண் வீராங்கனையும் அடங்குவார்.
இந்த ராக்கெட் ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து நேற்று நள்ளிரவு ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களில் விண்கலம் தனியாகப் பிரிந்து புவி வட்டப் பாதையில் நுழைந்தது. விண்கலம் சுமார் 6½ மணி நேர பயணத்துக்குப் பிறகு சீனாவின் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாகச் சென்றடைந்தது. விண்வெளி நிலையத்துடன் இணைந்த பிறகு 3 வீரர்களும் அதற்குள் சென்றனர்.
இந்த வீரர்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருப்பார்கள் என்றும், விண்வெளி நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான கருவிகளை நிறுவ அவர்கள் விண்வெளி நடைப்பயணங்களை மேற்கொள்வார்கள் என்றும் சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது.