அரசு வீட்டுவசதி திட்டத்தில் ஊழல் செய்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு வீட்டுவசதி திட்டத்தில் எந்தவொரு விண்ணப்பமும் இல்லாமல் நிலம் ஒதுக்கப்பட்டு, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அதிகார வரம்பை மீறிய விவகாரத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது பதியப்பட்ட மூன்று ஊழல் வழக்குகளில் தலா ஏழு ஆண்டுகள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாஹித் ஜாய் மற்றும் மகள் சைமா வசீத் புதுல் ஆகியோருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என அவருக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இளைஞர்கள் போராட்டத்தின்போது வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
