சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலை கொண்டுள்ளது. இந்த மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரை வழியாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதேபோல், பாம்பன், தூத்துக்குடி ஆகிய இரண்டு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
