யூனியன் வங்கி தனது அனைத்து மண்டல மற்றும் பிராந்திய மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை பொங்கல் திருநாளன்று லக்னோவில் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்;
யூனியன் வங்கி (Union Bank of India) தனது அனைத்து மண்டல மற்றும் பிராந்திய மேலாளர்களுக்கான வணிக ஆய்வுக் கூட்டத்தை வரும் ஜனவரி 16 மற்றும் 17 (2026) ஆகிய தேதிகளில் லக்னோவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் ஜனவரி 15-ஆம் தேதி மதியமே லக்னோ வந்தடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் பாரம்பரியப் திருவிழாவான பொங்கல் திருவிழா ஜனவரி 14 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களின் உணர்வோடும், வாழ்வியலோடும் கலந்த ஒரு முக்கிய விழாவாகும். இந்த நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் இருக்க முடியாமல், வெகு தொலைவில் உள்ள லக்னோவில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற முக்கியப் திருவிழா நாட்களில் கூட்டங்களை நடத்துவது, அதிகாரிகளின் கலாச்சார உணர்வுகளைப் பாதிப்பதோடு, அவர்களின் மனச்சோர்விற்கும் வழிவகுக்கும். பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில், மாநிங்களின் பண்பாட்டு உணர்வுகளை கவனத்தில் கொள்ளாத நடவடிக்கையாகும்.
எனவே, நிதி அமைச்சர் இதில் தலையிட்டு, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஜனவரி 16 மற்றும் 17-ல் நடைபெறவிருக்கும் கூட்டத்தை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க யூனியன் வங்கி நிர்வாகத்திற்கு அறிவுறுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
